p10434 - ஆற்றுப்படை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம், சங்க இலக்கியத்தின் புறத்திணைப்
பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி
விளக்குகிறது.

    புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைப்
பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது.

    அளவில் பெரிய பாடல்களால் ஆன தனித்தனி
நூல்களாகவே விளங்கும் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள்
ஆற்றுப்படையாக அமைந்து இருப்பதைக் கூறுகிறது.

    சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும்
வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த
புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும்
்ஆற்றுப்படைப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டுகிறது.
இவற்றைப் பாடிய புலவர்களின் இலக்கியப் படைப்பாற்றலைச்
சான்றுகளுடன் விளக்குகிறது.

    அந்தக் காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளைச்
சுட்டிக் காட்டுகிறது. உலகின் வேறெந்த மொழியிலும் இந்த
வகையான பண்பாட்டு இலக்கியம் இல்லை என்பதை
உணர்த்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
     இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் பின்வரும்
பயன்களையும் திறன்களையும் அடைவீர்கள்:


  • ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • இசை, கூத்து போன்ற நுண்கலைகள் மன்னராலும் மக்களாலும்
    எவ்வாறு போற்றி வளர்க்கப்பட்டன என்பதைப் புரிந்து
    கொள்ளலாம்.

  • கலைஞர்கள் இடையே செழித்து இருந்த நல்லிணக்கத்தையும், நட்புறவையும் உணர்ந்து கொள்ளலாம்.


  • கரிகால் வளவன், நல்லியக்கோடன், இளந்திரையன், நன்னன் போன்ற மன்னர்களின் கொடைத்திறனையும் படைத்திறனையும்
    அறியலாம். அவர்தம் நாடுகளின் நில வளத்தையும்
    குடிமக்களின் மன வளத்தையும் உணரலாம்.


  • நக்கீரர், நத்தத்தனார் முதலிய பெரும்புலவர்களின் கவிதைத் திறனை உணர்ந்து சுவைக்கலாம்.


  • இவ்வுலக நல்வாழ்வுக்கான பொருளைப் பெற மட்டும் அன்றி,
    மறுமை உலகப் பெருவாழ்வுக்கான அருளைப் பெறவும்
    ஆற்றுப்படை பாடியுள்ள தமிழ்ப் புலமையை வியக்கலாம்.