5.3 சிறிய தொடர்களில் அரிய உண்மைகள்
    இனிய நண்பர்களே ! பல ஆண்டுகள் வாழ்ந்து மக்கள்
கண்டு உணர்ந்த உண்மைகளை உணர்ச்சியோடு பதிவு செய்து
வைத்த ஆவணங்களாகவும் இலக்கியங்கள் உள்ளன. உயர்ந்த
உள்ளம் கொண்டவர்கள் தம் ஆழ்ந்த சிந்தனையில் கண்டு எடுத்த
முத்துகள் போன்ற கருத்துகள் புறநானூற்றில் குவியல் குவியலாகக்
கிடைக்கின்றன.எடுத்துக்காட்டாக ஒரு சில காண்போம்
  • நிலமும் நலமும்
    “நிலம் காடாக இருக்கலாம், நாடாக இருக்கலாம் ; பள்ளமாக
இருக்கலாம் மேடாக இருக்கலாம். ஆண்கள் எங்கே நல்லவர்களாக
இருக்கிறார்களோ அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும்
நல்லவளாக இருக்க முடியும்.” ஒளவையார் பாடிய அரிய உண்மை
இது :

    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே (187 : 3- 4)

ஆண்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை இது. அமைதியாக எண்ணிப் பாருங்கள். ஆழ்ந்த உண்மைகள் பல
புரியும்.

  • உலக இயற்கை இருவகை
  • “ஒரு வீட்டில் சாவுப் பறை ஒலிக்கிறது. அதே தெருவில் வேறு
    ஒரு வீட்டில் திருமண மேளம் முழங்குகிறது. காதலரைக் கூடிய
    மகளிர் பூ அணியை அணிகின்றனர். பிரிந்த மகளிரின் கண்கள்
    கண்ணீர் மழை பொழிகின்றன. இப்படி முரண்பாடாகப் படைத்து விட்டான் பண்பு இல்லாத அந்த இறைவன். உலக இயற்கை
    கொடியது. இதன் இயல்பை உணர்ந்து மறுமை உலகத்தில்
    இன்பம் பெறுவதற்கு உரிய நன்மைகளைச் செய்து கொள்ளுங்கள்”

         இன்னாது அம்மஇவ் வுலகம்
        இனிய காண்கஇதன் இயல்புஉணர்ந் தோரே
                     (194
    : 6-7)

    பக்குடுக்கை நன்கணியார் என்பவர் கண்ட வாழ்வியல் பற்றிய
    தத்துவம் இது.
  • பொன்னை விடச் சிறந்த மொழி
  •     மீன்முள் போல முடி நரைத்துவிட்டது. தோல் சுருங்கித்
    திரைத்து விட்டது. கால தேவன் தன் கயிற்றில் கட்டி இழுத்துச்
    செல்லும் காலம் நெருங்கிவிட்டது. அப்போது, மறுமையில் என்ன
    ஆகுமோ? என்று வருந்துவீர்கள். முதியவர்களே, செல்வதற்கு
    நல்லவழி ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். நல்லதைச் செய்ய
    இயலவில்லை என்றாலும், நல்லது அல்லாததைச் (தீயதை)
    செய்யாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் புகழ் பெறலாம்.
    மற்றவர்களை     நல்ல     வழியில்     செலுத்தலாம்”
    நரிவெரூஉத்தலையார்
    என்ற புலவர் சொன்ன பொன்மொழிகள்
    இவை.

         நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
        அல்லது செய்தல் ஓம்புமின்      (195 : 6-7)

    (ஓம்புமின் = கவனமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்)

    நல்லது’ என்பதற்கு எதிர்ப்பதமாகத் ‘தீயது’, ‘கெட்டது’
    என்று கூறாமல் ‘அல்லது’ என்று கூறும் பண்பாட்டை
    நோக்குங்கள். அவர் ‘தீயதை’ நாவால் சொல்லவும்
    விரும்பவில்லை.

  • உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
  •     செல்வ வளங்கள் அனைத்துக்கும் உரிமையாளராகச்
    சமுதாயத்தில் உச்சியில் இருப்பவர் யார்? பல நாடுகளை வென்று
    ஆட்சி செய்யும் மன்னர். மிகத் தாழ்ந்து அடிநிலையில் கிடப்பவர்
    யார்? நாகரிகத்தின் சுவடுபடாத மலைகளில் காடுகளில் அடுத்த
    வேளை உணவுக்காக விலங்குகளை வேட்டையாட இரவும் பகலும்
    வில் அம்புடன் குறிபார்த்துக் காத்திருக்கும் வேடர். சிந்தித்துப் பார்த்தால் இந்த இருவரும் அனுபவிப்பது என்ன? உண்பது, ஒரு வேளைக்கு வயிறு கொள்ளும் அளவுள்ள உணவு. உடுப்பது, மேல் ஆடை, கீழ் ஆடை என்ற இரண்டுதான். மற்ற தேவைகளும்
    ஒத்தவை தாம். எனவே, ஒருவர், செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருப்பதன் பயன் என்ன தெரியுமா? அடுத்தவர்க்கு ஈந்து
    அதனால் மகிழ்வது தான். ‘இல்லை நானே துய்ப்பேன்’
    (அனுபவிப்பேன்) என்று முயன்றால் துய்க்க இயலாமல் இழக்க
    நேரும் இன்பங்கள் பல ஆகும்”. இந்த மிகப்பெரும் வாழ்வியல்
    அறத்தை உரைத்தவர் கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர்
    நக்கீரர்.

         செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே (189 : 7-8)

    (தப்புந = கிடைக்காமல் இழக்கப் படுவன)