5.4 உணர்ச்சியின் நெகிழ்ச்சி
    கவிதை, இதயத்தின் மொழி, உணர்வுகளில் இருந்து
ஊற்றெடுத்துப் பிறப்பது, உணர்வுகளோடு உறவாடுவது, உணர்வுகளை
வளர்ப்பது கவிஞனின் உள்ளத்தையும் கவிதையைப் படிப்பவனின்
உள்ளத்தையும் உணர்வு கொண்டே இணைப்பது, காலம், இடம்
போன்ற வரையறைகளையும் தாண்டி இயங்குவது, நல்ல கவிதையில்
உணர்ச்சியின செழுமை மிகுந்து இருக்கும். புறநானூற்றுப் புலவர்கள்
மானம், வீரம்,பெருமிதம், நன்றி, மகிழ்ச்சி, துயரம் போன்ற பல்வகை
உணர்ச்சிகளையும் சிறப்பாகப் பாடியுள்ளனர்.

5.4.1 உணர்ச்சிகள்

போர்க்களத்தில் தன் மகனைக் கண்ட தாயின் அழுகையும்
போர்க்களத்திலிருந்து வந்த மன்னனின் சினமும் பற்றிப் பார்ப்போம்.
  • உவகையில் பிறந்த அழுகை
  •     “மீன் உண்ணும் கொக்கின் இறகு போல முடி நரைத்துவிட்ட
    முதியவள் அவள். அந்த வயதில் பிறந்த இளைய மகன்,
    போர்க்களத்தில் யானையைத் தாக்கிக் கொன்று தானும்
    இறந்துவிட்டான். அவனது இறப்பிற்காக வருந்தாமல் அவனைப்
    பெற்ற போது அடைந்ததைவிட அதிக உவகை (மகிழ்ச்சி)
    கொண்டாள் அந்த வீரத் தாய், அதனால் மகிழ்ச்சியில்
    கண்களில் இருந்து கண்ணீர் பெருகி இமைகளில் தொங்கி
    வழிந்தது. மூங்கில் அடர்ந்த மலையில் அசையும் மூங்கிலில்
    பெய்த மழைத்துளிகளை விட அக்கண்ணீர்த் துளிகள் அதிகமாக இருந்தன” என்று பூங்கண்உத்திரையார் பாடுகிறார் (277).

    இந்த உணர்வை ‘உவகைக் கலுழ்ச்சி’ என்பார்கள்.

  • மன்னனின் சினம்
  •     தனக்குத் தலைமகன் பிறந்த செய்தி வந்த பொழுது அவன்
    போர்க்களத்தில் இருந்தான். போரை வெற்றியுடன் முடித்துவிட்டு
    மகனைக் காணும் ஆவலில் களத்திலிருந்து நேரே இல்லம்
    வந்துவிட்டான். கையில்வேல், காலில் வெற்றிக் கழல், உடம்பில்
    வியர்வை, தொண்டையில் களத்தில் பெற்ற புதிய விழுப்புண். இந்தக்
    கோலத்தில் வந்து நிற்கிறான். அதியமானின் இந்தத் தோற்றத்தை
    அருகில் நின்று பார்த்த ஒளவையார் ஓர் அழகிய பாடலாகப்
    பாடுகின்றார்.

         “போர்க்களத்தில் பகைவரைச் சினத்துடன் விழித்துப் பார்த்த
    கண்களின்     சிவப்பு, தன் தவ மகனைப் பார்த்தும்
    கூடத் தணியவில்லை. புலியோடு போரிட்ட வலிமை மிக்க ஆண்யானையைப் போல நிற்கிறான். இவனது சினத்தை
    இந்த அளவு தூண்டிய பகைவருள் ஒருவர் கூடத் தப்பிப்
    பிழைத்திருக்க மாட்டார்கள்” என்று வியக்கிறார் ஒளவையார்.

         இன்னும் ஆறாது சினனே, அன்னோ
        உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே
        செறுவர் நோக்கிய கண்தன்
        சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே
                     (100
    : 8-11)

    (அன்னோ = ‘அம்மாடி’ என்பது போன்ற வியப்புச் சொல்;
    உய்ந்தனர்அல்லர்
    = தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்;
    உடற்றியோர்
    = சினம் ஊட்டியவர்கள்; செறுவர் = பகைவர்;
    ஆனாவே
    = குறையாமல் உள்ளன.)

    பிறந்த மகனின் முகத்தில் முதன்முதலில் விழிக்கும் பொழுது
    மகிழ்வுடன் இனிய முகம் காட்ட வேண்டும். அப்பொழுதும்
    கூடச் சினத்துடன் இருக்கிறானே? என்ற வியப்பு உணர்வும்,
    அதியமானின் வீர உணர்வும் வெளிப்படும் அழகிய பாடல் இது.

    5.4.2 நெகிழ்ச்சிகள்

        வீரன் ஒருவனின் மரணத்தால் புலவருக்கு ஏற்பட்ட மன
    நெகிழ்ச்சியைப் பற்றிப் பார்ப்போம்.
  • கையறு நிலை
  •     சிறந்தவர்கள் இறக்கும் பொழுது அவர்கள் மீது அன்பு
    மிகுந்தவர்கள் ஆற்ற முடியாத துயரத்தி்ற்கு உள்ளாகின்றனர்.
    அவர்களின் கண்ணீர் ஊற்று கவிதையாக வெளி வருகிறது. இந்த
    இரங்கல் பாக்களைத்தான் சங்க இலக்கியத்தில் கையறு நிலைப்
    பாடல் என்பர். புறநானூற்றில் உலகத் தரம் வாய்ந்த கண்ணீர்க் கவிதைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாகச் சில
    தரப்படுகின்றன.
        
  • ஒல்லையூர் முல்லையே ஏன் பூத்தாய்?
  • ஒல்லையூர் நாட்டுத் தலைவனின் மகன் சாத்தன் மிகச் சிறந்த
    போர்வீரன். போரில் இறந்துவிட்டான். ஒல்லையூர் சார்ந்த காட்டு
    வழியில் வந்தார் புலவர் குடவாயிற் கீரத்தனார். மிக்க
    துயரத்துடன் வந்த அவர், காட்டில் கொடியில் பூத்திருந்த
    முல்லைப் பூவைக் கண்டார். துயரம் பொங்கி விட்டது.

         “இளைய வீரர்கள் சூட மாட்டார்கள். வளையல் அணிந்த
    பெண்கள் பறிக்க மாட்டார்கள். நல்ல யாழின் வளைந்த கோட்டைக்
    கொண்டு மெல்ல வளைத்துப் பாணன் சூடிக் கொள்ள மாட்டான்.
    பாடினியும் அணிய மாட்டாள். தன் ஆண்மையை உலகம்
    அறியுமாறு பகைவரை எதிர்த்து அழித்த வேல் ஆற்றல் கொண்ட
    வீரன் சாத்தன் இறந்துவிட்ட பின்பு, ஏ முல்லையே நீயும் பூத்தாயோ
    அவனது ஒல்லையூர் நாட்டில்?” என்று இரங்கிப் பாடினார்.

        முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

    என்ற ஒரே அடியில் ஒரு கண்ணீர்த் தேக்கத்தையே கட்டி
    வைத்திருக்கிறார்.

        “அவ்வளவு சிறந்தவன் இறந்த செய்தி கேட்டும் உயிர் வாழ்ந்து
    கொண்டிருக்கிறேன் நான். என்னைப் போலவே நீயும் கொடிய
    உள்ளம் கொண்டு சிரித்து நிற்கிறாயே?” என்ற வருத்தம் இவரது
    கேள்வியில் உள்ளது அல்லவா?

    பாடுவதற்குத் தகுதிமிக்க சாத்தன் இறந்தபின் என்னைப் போன்ற
    புலவர்களும் கவிதைகளும் வீண்தான். அதேபோல நீயும் அணிவார்
    யாரும் இல்லாத சூழலில் வீணாகப் பிறப்பெடுத்தாயே? என்றும் ஒரு
    பொருள் புலப்படுகிறது இல்லையா?

    ‘தன் வீரத்தால், கொடையால், ஈகத்தால் உலகுக்குப் பயன்பட்ட
    சாத்தன் பிறந்த ஒல்லையூர் நாட்டில் நானும் நீயும் மட்டும் பயன்
    அற்ற வீண் பிறவி எடுத்துவிட்டோமே’ என்றும் ஒரு துயரப்
    பொருள் தொனிக்கிறது அல்லவா?

  • எமனே இனிப் பசித்தால் எங்குப் போவாய்?
  • சோழ மன்னன் கிள்ளிவளவன்     குளமுற்றம் என்ற
    போர்க்களத்தில் உயிர் துறந்தான். புலவர் பலர் கையறு நிலைப்
    பாடல்கள் பாடினர். ஆடுதுறை மாசாத்தனார் என்னும் புலவர்
    கூற்றுவனை (எமனை) நோக்கிப் புலம்பிப் பாடுகிறார். அவனை
    அறிவு இல்லாத பேதை என்று பழிக்கிறார்.

    நனிபே தையே நயன்இல் கூற்றம்
    விரகு இன்மையின் வித்துஅட்டு உண்டனை (227 : 1-2)

    (நனிபேதை = மிகப் பெரிய முட்டாள்; நயன் = அன்பு, ஈரம்;
    கூற்றம் = எமன்; விரகு = திறமை, அறிவு; வித்து = விதை;
    அட்டு = சமைத்து)

         “விதைத்துப் பயிர் செய்து, தானும் உண்டு பிறர்க்கும்
    உணவளிப்பதற்கு உரிய விதை நெல்லை அறிவுள்ள எந்த
    உழவனாவது சமைத்து உண்பானா? அன்பு இல்லாத எமனே
    உழைப்புத் திறமை இல்லாததால் நீ அவ்வாறு செய்துவிட்டாய்
    மிகப் பெரிய முட்டாள் நீ. இனி உணவுக்கு எங்குப் போவாய்?
    என்கிறார். பல போர்க்களங்களில் பிணங்களைக் குவித்து எமனின்
    பசியைத் தீர்த்தவன் கிள்ளி வளவன். அவனையே கொன்று
    தின்றுவிட்ட செயல் விதை நெல்லை உண்டுவிட்ட செயல் தானே?

    எழினி என்ற வள்ளல் இறந்த பொழுதும் இதே உவமையைக் கூறி
    எமனை இகழ்கிறார் அரிசில்கிழார்.

  • திங்கள் உண்டு, எங்கள் தந்தை எங்கே?
  • வள்ளல்களுள் சிறந்தவன் பாரி. மூவேந்தரின் வஞ்சனையால்
    போரில் மாண்டான். புலவர்களுள் சிறந்த கபிலர் அவனது
    பிரிவுக்கு வருந்திப் பாடிய பாக்கள் ஒவ்வொன்றும் கண்ணீர்ப்
    பூக்கள். பாரியின் மகளிர் இருவர்.அவர்கள் தம் தந்தையின்
    இறப்பிற்கு வருந்திப்     பாடிய பாடல் இரும்பையும்
    உருக்கும் ; கேட்கும் இதயத்தில் எப்போதும் இருக்கும்.

         அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
    எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
        இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
        வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
        குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.    
                     (112)

    (அற்றைத்திங்கள் = சென்ற மாதம் ; இற்றைத் திங்கள் = இந்த
    மாதம் ; பிறர் கொளார் = எவராலும் வெல்ல முடியாது)

         “ஒரு மாதக் காலத்திற்குள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய
    மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அன்றைய ‘முழுநிலா இரவு’
    ஒளிமயமாக இருந்தது. இன்றைய ‘முழுநிலா இரவில்’ உலகமே
    இருண்டு போய்விட்டது. அன்று எங்கள் தந்தை இருந்தார்.
    எம் பறம்புமலையை எவராலும் வெல்ல முடியவில்லை. வெற்றி
    ஒன்றையே கருதிய மூவேந்தரும் வஞ்சனையால் எம் குன்றைக்
    கைப்பற்றிக் கொண்டனர். நாங்களோ தந்தை இன்றித்
    தவிக்கிறோம்”. நேர் சொற்களால் பாடப்பட்ட எளிய பாடல்தான்.
    எனினும், அரசியல்     காரணங்களுக்காகக் குடும்பத்தை
    அழிப்பவர்கள் நெஞ்சில் மோதித் தாக்கும் துயர வெள்ளத்தின்
    பெருக்காக உள்ளது இப்பாடல், இல்லையா?