2.2 பேரிலக்கியங்கள்

    இதுவரை பழங்காலத்தில் தமிழ்மொழியில் கலந்துள்ள
பிறமொழிச் சொற்களில் குறிப்பாகத் தமிழோடு நெருங்கிய
தொடர்பு     கொண்டிருந்த     வடமொழிச் (சமஸ்கிருத)
சொற்களையும் வடமொழி இலக்கியத் தொடர்புகளையும்
கண்டோம்.     இனித்     தமிழில் உள்ள காப்பியம்,
இதிகாசம், புராணம், சாத்திரங்கள்,     உரையாசிரியர்கள்
பணி,     நாட்டுப்புற      வழக்காறுகள் முதலியவற்றின்
அடிப்படையில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டவற்றை
வரலாற்று நோக்கில் சுருக்கமாகக் காண்போம்.

2.2.1 காப்பியங்கள்

    தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம்
மணிமேகலை, பெரிய புராணம்
ஆகிய மூன்று மட்டுமே
தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு
இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய
மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ
உள்ளன.

    தமிழில் கொங்கு வேளிரால் இயற்றப்பட்ட சிறப்புமிக்க
காப்பியம் பெருங்கதை ஆகும். கி.பி.2ஆம் நூற்றாண்டு
அளவில் ‘பைசாசம்’ என்ற பிராகிருத மொழியில், குணாட்டியர்
என்ற புலவர் உதயணன் சரித்திரத்தைப் பிருகத் கதா என்ற
பெயரில் காப்பியமாக இயற்றினார். ஏறத்தாழ கி.பி.7ஆம்
நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கங்க நாட்டு அரசன்
‘துர்விநீதன்’(துர்விதன்) என்னும் அரசன் சமஸ்கிருத மொழியில்
குணாட்டியரைத் தழுவி ‘பிருகத்கதா’ என்ற பெருங்காப்பியத்தை
இயற்றினார். இந்த வடமொழி நூலைத் தழுவியே கொங்கு
வேளிர் பெருங்கதையைத் தமிழில் படைத்துள்ளார்.

    கி.பி.9ஆம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரால் தமிழில்
இயற்றப்பட்ட சீவகசிந்தாமணி என்ற காப்பியமும் சமஸ்கிருத
மொழியின் தழுவலாகவே தோன்றியுள்ளது.

    இந்த நூலின் மூலமாகக் கருதப்படுபவை க்ஷத்திர
சூடாமணி, கத்தியசிந்தாமணி, ஜீவன்தர சம்பு, ஸ்ரீபுராணம்

ஆகியனவாகும்.

    சீவகசிந்தாமணிக்குப் பிறகு கி.பி.10ஆம் நூற்றாண்டு
அளவில் தோலாமொழித் தேவர் என்பவரால் சூளாமணி
என்னும் காப்பியம் இயற்றப்பட்டது. இதற்கும் ஒரு வடமொழி
நூலே மூலநூல்.

    சிறு காப்பியங்களுள் யசோதர காவியம் ‘புஷ்ப தந்தா’
என்பவர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய யசோதர காவிய
என்ற படைப்பே மூல நூலாகும்.

    தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் பெரும்பாலானவை
வட மொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் உள்ள
நூல்களையே மூலங்களாகக் கொண்டவை. கி.பி.10ஆம்
நூற்றாண்டிற்குப் பிறகு கருநாடகத்தில் வீர சைவம் தழைத்தது.
அந்தச் சமயத்துக் குரு ஒருவரின் கதை ‘பிரபுலிங்க லீலா’
என்ற காப்பியமாகக் கி.பி.14ஆம் நூற்றாண்டில் கன்னட
மொழியில்     இயற்றப்பட்டது.     இதனைப் பதினேழாம்
நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,
பிரபுலிங்க லீலை என்னும் சிற்றிலக்கியமாகத் தமிழில்
தந்துள்ளார்.

• காப்பியங்களில் பெயர் மாற்றங்கள்

    வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பெயர்கள்
பலவற்றைத் தமிழ்க் காப்பியங்களில் காண முடிகிறது. சான்றாக,
வசந்தமாலை = வயந்த மாலை எனவும் , வித்தை = விஞ்சை
போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.

    பௌத்த சமயப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய
மணிமேகலை என்ற காப்பியத்தில் பாலிமொழியில் உள்ள
புத்த சாதகக் கதைகள் பல தமிழாக்கம் செய்யப்பட்டு
மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைக்கப்பட்டு
உள்ளன. குறிப்பாக சாவக நாட்டு அரசனான பூமிச்
சந்திரனை
ப் பற்றியும் ஆபுத்திரனைப் பற்றியும் சிறப்பாகச்
சித்திரிக்கப் பட்டுள்ளன. இவ்விருவர் வரலாற்றையும் இணைத்து
மணிமேகலையின் மூன்று காதைகளான ஆபுத்திரன் திறன்
அறிவித்த காதை (13), ஆபுத்திரன் நாடு அடைந்த காதை (24)
ஆபுத்திரன் மணிபல்லவம் அடைந்த காதை (25) எனும்
பகுதிகள் அவற்றைத் தழுவி அமைந்துள்ளன.

2.2.2 பக்திப் பாடல்கள்

    பக்திப் பாடல்களான தேவார, திருவாசக, பிரபந்தங்களில்
புராண இதிகாசக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
ஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் எட்டாம் பாடலில்
இராவணனைப்     பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார்.
திருநாவுக்கரசரும்     பதிகத்தின்     கடைசிப்     பாடலில்
இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

    குலசேகராழ்வார் இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர். அவர் தயரதன் புலம்பல், தாலாட்டுப் போன்ற
பதிகங்களைப் பாடியுள்ளார். பெரியாழ்வார் கண்ணன்
குறும்புகளைப் பற்றிப் பாடியுள்ளார்.

2.2.3 இராமாயணம்

    வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் இந்திய
மொழிகள் அனைத்திலும் காணப்படுகின்றன. இராமாயணக்
கருத்துகள் பண்டைய தமிழ் இலக்கியங்களான அகநானூறு,
புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றின் பாடல்கள் சிலவற்றில்
காணப்படுகின்றன.

    கௌதம முனிவர் இந்திரனுக்கும் அகலிகைக்கும் சாபம்
கொடுத்த கதை பரிபாடலில் காணப்படுகிறது. திருக்குறளிலும்,
இந்திரனும் அகலிகையும் சாபம் பெற்ற நிலை குறிப்பாகச்
சுட்டப்பட்டுள்ளது.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.

    கம்பருக்கு முன் தமிழில் ‘இராமாயண வெண்பா’ என்ற
நூல் இருந்ததாகத் தெரிகிறது. புறத்திரட்டு என்னும்
நூல்வழியாக ஆசிரியப்பாவில் எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள்
சில இராமாயணக் கதையைக் கொண்டிருந்தன எனவும் அவை
அழிந்து விட்டன எனவும் அறியலாம்.

    வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தைத்
தழுவி தமிழில் அமைக்கப்பட்ட இராமாயணமே கம்ப
ராமாயணம்
என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கம்பர்
தமிழ் மரபிற்கு ஏற்ப, பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

    “குணாதித்தன் சேய்” என்பவரால் இயற்றப்பட்ட
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘இராமாயண வெண்பா’
என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை. இதுவும்
கம்பராமாயணம் போன்ற தழுவலே ஆகும்.

    நாட்டுப்புற     இலக்கியமாக இராமாயண ஓடம்,
இராமாயண ஏலப்பாட்டு,     இராமாயணச் சிந்து
முதலியவையும் தோன்றின.

    இராமாயணம் பல நாடக வடிவத்திலும் உருப்பெற்றது.
இராம நாடகக் கீர்த்தனையை அருணாசலக் கவிராயர்
இயற்றினார்.

    வேங்கட கிருஷ்ணய்யர் என்பவர் துளசி, வால்மீகி, கம்பர்
ஆகியோரின் கருத்துகளைத் தழுவி இராம காவியம் என்னும்
கதம்ப ராமாயணத்தைப் படைத்தார்.

2.2.4 மகாபாரதம்

    சின்னமனூர்ச்     செப்பேடு குறிப்பிடும் மகாபாரத
மொழிபெயர்ப்பு இன்று கிடைக்கவில்லை. ஆயினும் மூன்றாம்
நந்திவர்மன் காலத்தில் பெருந்தேவனார் என்ற புலவர்
வடமொழியைத் தழுவிப் பாரத வெண்பா எனும் நூலைத்
தமிழில் இயற்றியுள்ளார். இம்மொழிபெயர்ப்பு, செய்யுளும்
உரைநடையுமாகக் கலந்து உள்ளது. இதில் சில பகுதிதான்
கிடைத்துள்ளது.

    கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வார்,
வேதவியாசருடைய வடமொழி மகாபாரதத்தைத் தழுவி
தமிழில் மகாபாரதம் இயற்றியுள்ளார். இந்நூல் பத்துப்
பருவங்களாக 4375 பாடல்களைக் கொண்டுள்ளது.

    பதினெட்டாம் நூற்றாண்டின்     இறுதிப் பகுதியில்
நல்லாப்பிள்ளை என்பவர் ஏழாயிரம் செய்யுள்களுக்கு
மேற்பட்ட விரிவான பாரதத்தைத் தமிழில் தந்திருக்கிறார்.

    பாரதக் கிளைக் கதைகளில் குறிப்பாக நளன் கதையைக்
கி.பி.15ஆம் நூற்றாண்டில் புகழேந்தியார் நளவெண்பாவாக
இயற்றினார்.

    வல்லூர் தேவராசப் பிள்ளையின் ‘குசேலோபாக்கியானம்’
மகாபாரதக் கிளைக் கதைத் தழுவலாகும்.

    பாரதியின் பாஞ்சாலி சபதமும் தழுவல் இலக்கியமே
ஆகும்.

2.2.5 பகவத் கீதை

    வடமொழியில் மகாபாரதத்தில்      இடம்பெற்றுள்ள
பகவத் கீதையைத் தனிப்பட்ட புனித நூலாகக் கருதும்
மரபு பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது.

இந்நூல் கண்ணனால் அருளப்பட்டது என்பர். இதனை ‘ஸ்ரீ
மத் பகவத்கீதை’ என வடமொழியில் குறிப்பிடுவர். ‘கீதா’ என்ற
வடமொழிச் சொல்லிற்குப் பாடப்படுவது என்று பொருள்.
பாடப்படுவது என்பதற்குப் பாராயணம் செய்வதற்காக
இயற்றப்பட்ட நூல் என ஆய்வாளர் கருதுகின்றனர். இதற்குத்
தமிழில் மட்டும் 12 மொழிபெயர்ப்புகள் கிடைத்துள்ளன.
ஆங்கிலத்தில் சுமார் 27 மொழிபெயர்ப்புகள் உள்ளன.    

    பகவத் கீதையைத் தமிழாக்க முயற்சி செய்தவர்கள் அதன்
கருத்துகளைச் சுருக்கமாகவும், விளக்க உரையாகவும், கருத்துக்
கோவையாகவும் வெளியிட்டுள்ளனர்.

    கி.பி.1786இல் முதன்முதலாக இந்நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் பாரதியார் மொழிபெயர்ப்புக்கு
முன்னர் சுமார் 14 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.

    இவை அனைத்தும் செய்யுள் வடிவில் புலவர்களுக்கும்
கற்றோருக்கும் மட்டும் புரியும் வண்ணம் இயற்றப்பட்டனவாக
இருந்தன.

    பாரதியின் இறப்பிற்குப் பிறகு அவர் மொழிபெயர்த்த
பகவத் கீதையின் தமிழாக்கம் மகாத்மா காந்தி அடிகளின்
முன்னுரையுடன் 1928இல் பாரதி பிரசுராலயத்தினரால்
வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு 1981 வரை 5
மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.