2.4 கலைச் சொல்லாக்கம்


     அறிவியல் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் கலைச்
சொல்லாக்கம் அடிப்படையானது. ஆய்வின் அண்மைக்காலத்திய
நிலைக்கேற்ப கலைச்சொற்கள் புதிதாக உருவாக்கப்பட
வேண்டும். மூலமொழிச் சொற்களின் பொருளினை நுட்பமாக
அறிந்து கொண்டால், தமிழில் கலைச்சொல்லாக்கம் செம்மையாக
அமையும். ஒரு சொல் மூலமொழியில் பயன்படுத்தப்பட்ட
சூழலுக்கும் தமிழ்மொழியின் சொல்லுக்கும் உள்ள உறவினை
ஆராய்ந்து உருவாக்கப்படும் கலைச்சொல் பொருத்தமானதாக
அமையும். அறிவியலில் ஒவ்வொரு துறைக்கும் உள்ள தனித்த
பண்பினை ஆராய்வதுடன், தமிழ்மொழியின் மரபினையும்
அறிந்து கொள்ள வேண்டியது, கலைச்சொல்லாக்கத்தில்
பின்பற்றப்பட வேண்டிய வழிமுறை ஆகும்.

    அறிவியல் மொழிபெயர்ப்பில் கலைச்சொற்களை விதைகளாகவும்,
பிற சொற்களைச் சதைப் பற்றுகளாகவும் கொண்டு தொடர்கள்
அமைக்கப்படுகின்றன.


2.4.1 கலைச்சொல்லாக்க முயற்சிகள்


    ஃபிஷ்கிறீன், 1875-ஆம் ஆண்டில் எஸ்.சுவாமிநாதன், சாப்மன்
ஆகியோரின் துணையுடன் மருத்துவம் தொடர்பான
கலைச்சொற்கள்     அடங்கிய     நான்கு     தொகுதிகளை
வெளியிட்டுள்ளார்.     இதுவே     தமிழில்     அறிவியல்
கலைச்சொல்லாக்க முயற்சியில் முதன்மையானதாகும்.

    1932-ஆம் ஆண்டில் சென்னை     அரசாங்கத்தினரால்
அமைக்கப்பட்ட குழுவினர் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட
கலைச்சொற்களைத் தொகுத்தனர். அவற்றில் பெரும்பான்மை
ஆங்கிலக் கலைச் சொற்களின் ஒலிபெயர்ப்பாகவும் சமஸ்கிருதச்
சொற்களாகவும் விளங்கின.

    சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936-இல் தயாரித்த கலைச்சொல் தொகுதி, தமிழில் அறிவியல் சொற்களை வெளியிட வழிவகுத்தது ; அருமையான முயற்சியாக விளங்கியது.

    இலங்கை அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் 1956-ஆம் ஆண்டு, கலைச்சொற்களின் தொகுப்புத் தயாரிக்கப்பட்டது.

    1967- ஆம் ஆண்டு முதல் அண்மையில் வெளியான கடைசி
இதழ் வரையில் யுனெஸ்கோ கூரியரில் கையாளப்பட்ட
ஆயிரக்கணக்கான கலைச்சொற்கள், மணவை முஸ்தபாவினால்
‘அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்’ என்ற பெயரில்
தொகுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்     கழகம்

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 1995-ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட அறிஞர் குழுவினர் கணினித்துறை தொடர்பான
கலைச்     சொற்களைத்     தமிழாக்குவதில்     சிறப்புடன்
செயல்பட்டுள்ளனர்.

    1996 - ஆம் ஆண்டில் சாமி சண்முகம் என்பவர் 17,000
மருத்துவச் சொற்களைத் தமிழாக்கியுள்ளார்.

    கடந்த 150 ஆண்டுகளில் இதுவரை தமிழில் சுமார் ஒரு
இலட்சத்திற்கும் மலோன அறிவியல் கலைச்சொற்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.     இத்தகைய     சொற்களைப்
பயன்படுத்துவதில் சீர்மை இல்லாத நிலை உள்ளது. மேலும்
கலைச்சொல் ஆக்கத்தில் தரப்படுத்துதலும் பொதுப்பயன்பாடும்
குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்றுவதற்கான சூழலைப்
பல்கலைக் கழகங்கள் உருவாக்கிட வேண்டும்.


2.4.2 கலைச்சொல்லாக்கம் - சில சான்றுகள்


    அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் பல்வேறு வழி
முறைகள் பின்பற்றப்படுகின்றன. இது குறித்து அறிவியல்
வல்லுநர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும்
அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி     குறிப்பிடும்
கலைச்சொல்லாக்க முறைகள் சான்றுகளுக்காகத் தரப்பட்டுள்ளன.

  • பழந்தமிழ் இலக்கியச் சொற்களைப் பயன்படுத்துதல்
    Pilot - வலவன்
  • பேச்சு மொழியிலிருந்து சொற்களைத் தேர்ந்து எடுத்தல்
    Small Pox - அம்மை ;
    Temple Trustee - கோயில் முறைகாரர்
  • பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல்
    Decimal System - தசம முறை
  • புதுச்சொல் படைத்தல்
    Molecule - மூலக்கூறு
  • உலக வழக்கை ஏற்றுக் கொள்ளுதல்
    X - ray - எக்ஸ் கதிர்
  • பிறமொழித் துறைச் சொற்களை மொழிபெயர்த்தல்
    Photograph - ஒளிப்படம் ;
    Photosynthesis - ஒளிச்சேர்க்கை
  • மாற்றம் இல்லாமல் ஒலிபெயர்த்துப் பயன்பட வேண்டிய
    சொற்கள்
    Meter - மீட்டர் ; Ohm - ஓம்
  • மாற்றம் இல்லாமல் உலக அளவில் பயன்படுத்தப்பட
    வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள்
    குறியீடு : லூ. PS ; சூத்திரம் : H2O, Ca