4.4 சமய மொழிபெயர்ப்புகளின் தன்மைகள்


     தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பன்முகத் தன்மையுடையது.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை விளக்குமளவு சொல்
வளமுடையதாகத் தமிழ் விளங்குகின்ற வேளையில், பிற
துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். மனிதனை
நெறிப்படுத்தி நல்வழிப்படுத்துவதற்காகவும், பிரச்சினைகளில்
சிக்கி அல்லல்படும் மனித மனத்திற்கு அமைதி அளித்திடவும்
கண்டறியப்பட்ட கடவுள் பற்றிய கருத்துகள் தமிழில் தனித்துவம்
உடையன. இன்று தமிழ் பக்தியின் மொழி என்று போற்றப்
பட்டாலும் சமயக் கருத்துகள், பிற மொழிகளிலிருந்தே தமிழ்
வடிவம் பெற்றுள்ளன.

    வைதிக சமயம் உள்பட,     தமிழரிடையே பாதிப்பை
ஏற்படுத்தியுள்ள சமயங்கள், பிற மொழிப் படைப்புகள்
மூலமாகவே தமிழுக்கு அறிமுகமாகியுள்ளன. இந்நிலையில்
தமிழில்     சமயக்     கருத்தியல்     வளர்ச்சி     என்பது
மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும்.