5.3 தொடர் மொழிபெயர்ப்புகள்


     விளம்பரங்களில் இடம்பெறும் தொடர்களின் அமைப்பில், தமிழ்
இலக்கண விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. நுகர்வோரைக்
கவரும் வகையில், சுருக்கமாக விளம்பரத் தொடர்கள்
உருவாக்கப்படுவதால், அவற்றின் மொழி நடையானது
வழமையிலிருந்து மாறியுள்ளது.

    விளம்பரத் தொடர்களில், பொருளின் பயனை விடப்
பொருளுக்கே முதன்மையிடம் தரப்படுகின்றது. இது ஆங்கிலத்
தொடர் அமைப்பினைத் தமிழாக்குவதனால் ஏற்படும் விளைவு
ஆகும்.

ஹார்லிக்ஸ் - முழுமையான ஊட்டம் பெற
மின்னலடிக்கும் ரின்
அவர்கள் விரும்புவது டாலர் பிஸ்கெட்டுகள்


5.3.1 பொருள் மயக்கம்


    ஆங்கிலத்திலிருந்து     தமிழில்     மொழிபெயர்க்கப்படும்
விளம்பரங்களில் பொருள் மயக்கம் ஏற்படுகின்றது. தமிழ்த்
தொடரமைப்புப் பற்றி மொழிபெயர்ப்பாளர் சரியாகப்
புரிந்துகொள்ளாததால் இத்தகைய மயக்கம் உண்டாகிறது.

ரிக்கரி இன்ஸ்டண்ட் வறுத்து அரைத்த காபியின்
சுவையை ஏறக்குறைய அதே விலையில் உங்களுக்கு
வழங்குகிறது

இவ்விளம்பரம் வாசிப்பில் பொருள் மயக்கம் தருவதாகும்.


5.3.2 குறைத் தொடர்கள்


    பொருள் முடிவுக்காகத் தகுதியுடைய வேறொரு சொல்லை
வேண்டிநிற்கும் தொடர்கள் குறைத்தொடர்கள் எனப்படுகின்றன.
அதாவது சில தொடர்கள் தன்னளவில் முழுப்பொருளைத்
தராமல், முழுப்பொருளைத் தர வேறொரு பொருத்தமான
சொல்லை எதிர்பார்த்து இருக்கும். இத்தகைய தொடர்கள்
ஆங்கிலத்தொடர் அமைப்பின் தாக்கத்தினால் விளம்பரங்களில்
அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

புத்துணர்வு பெற நெஸ்கஃபே

மேற்குறித்த தொடரினை நிறைவு செய்ய அருந்துங்கள் என்ற
சொல் தேவைப்படுகின்றது.

கால்சியம் ஸான்டோஸ்
வலுவான பற்களுக்கும் உறுதியான எலும்புகளுக்கும்

சிறந்தது என்ற சொல் இத்தொடரில் தொக்கியுள்ளது.


5.3.3 ஆங்கிலச் சொற்கள்


    விளம்பரங்களில் எழுத்துமுறை மரபு மீறப்படுவது பொதுவாக
வழக்கிலுள்ளது. ஆங்கிலச் சொல்லைத் தொடரின் நடுவில்
அப்படியே பயன்படுத்துவது ஏற்புடையதன்று. எனினும்
ஆங்கிலம் மட்டும் கற்ற மேட்டுக்குடி மனப்பான்மையினரையும்
கவருவதற்காக இத்தகைய விளம்பரங்கள் பயன்படுகின்றன.
இன்னொரு வகையில் ஆராய்ந்தால், ஆங்கிலச் சொல்லைப்
பயன்படுத்துவது, பொருள் பற்றிய உயர்ந்த கண்ணோட்டத்தினை
உருவாக்கும் என்று விளம்பரதாரர் கருதியதாக, நாம் நினைக்க
வாய்ப்பு உண்டு.

    மெத்தை விளம்பரத்தில் “புதிய Kurl-on சூப்பர் டீலக்ஸ்
க்வில் டெட்
” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.

    அழகுநிலையம்     விளம்பரத்தில் இது “Non-surgical
சிகிச்சையாகும்
” என்ற தொடரும், “ஏஞ்சல்ஸின் Figure
Correction.     Spot Reduction புரொகிராம்கள்
தேவையற்ற சதையை குறைத்து விடலாம்
” என்ற தொடரும்
ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதப்பட்டவற்றுக்குச் சான்றுகள்
ஆகும்.

· தொடர்கள்

    விளம்பரங்கள் தமிழாக்கப் படும்போது, தவிர்க்கவியலாத
நிலையில் ஆங்கிலச் சொல், தமிழ் வடிவத்தில் இடம் பெறுவது
இன்று ஏற்புடையதாகிவிட்டது. ஆனால் சில விளம்பரங்களில்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலச் சொற்களே
அதிக அளவில் இடம் பெறுகின்றன.

    பின்வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விளம்பரம் இதற்குச் சிறந்த சான்று.


ஆண்:1 என்ன சார் சரக்கு வாங்கிட்டு
சைலண்ட்ஆ இருக்கிறீங்க
ஆண்:2 : பேமெண்ட் தானே! இந்தாங்க
ஆண்:1 : கேஷா கொடுங்க
ஆண்:2 : இதுவும் பேமெண்ட் தான்
ஆண்:1 : இதை பேங்க்ல போட்டு இது கலெக்ஷன்
போயி எப்ப சார் நான் பணம் எடுக்கிறது.
ஆண்:2 : நீங்க தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில்
அக்கௌண்ட் வைங்க. போட்டவுடன்
கலெக்ஷன் ஆகும். கம்ப்யூட்டர் சர்வீஸ்
இருக்கு. இந்தக் கையில டிராப்ட் கொடுத்தா
இந்தக் கையில பணம் வாங்கலாம்.


மேற்குறித்த விளம்பரத்தில் மொத்தம் 14 ஆங்கிலச் சொற்கள்
உள்ளன.

    இன்று நாம் பேசும் தமிழ் உரையாடலில் ஏறக்குறைய 50%
அளவில் ஆங்கிலமும், பிறமொழிச் சொற்களும் கலந்து உள்ளன.
இந்நிலையானது விளம்பரத்தில் இடம்பெறும் சொற்களின்
பயன்பாட்டிலும் உள்ளதனை அறிய முடிகின்றது.