1.0 பாட முன்னுரை
     இலக்கியம் என்பது     இலக்கை (குறிக்கோளை)
இயம்புவதாகும். சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக அமைவது இது.
ஓர் இலக்கியம், தான் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம்,
பண்பாடு, அரசியல், சமய நிலை முதலானவற்றை நேரடியாகவோ,
மறைமுகமாகவோ உணர்த்தி நிற்கும். மக்களின் உணர்வுக்கு
உவகையளிப்பது கலை. நுண்ணிதின் உணர்ந்து மகிழுமாறு
திகழ்வது நுண்கலையாகும். அத்தகைய நுண்கலைகளுள்
இலக்கியமும் ஒன்று.

     தமிழ்மொழியின் தொன்மையை அதில் தோன்றிய நூல்கள்
புலப்படுத்துகின்றன.     தமிழ்மொழியின்வழித்     தமிழரின்
பண்பாடு, பழக்க வழக்கம், தொன்மை நிலை முதலியன
புலனாகின்றன. இலக்கியம் தான் தோன்றிய சமுதாயத்தை மாற்றி
அமைக்கவல்ல ஆற்றலைக் கொண்டதும் ஆகும். இலக்கியத்தின்
வடிவமும் பொருளும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாறி
அமைகின்றன. இலக்கியத்தின் நோக்கம் மக்களை இன்புறுத்துவதும்,
வெளிப்படையாகவோ குறிப்பாகவோ உயர்ந்த வாழ்வியல்
நெறிகளை அவர்களுக்கு அறிவுறுத்துவதுமாகும்.

     பொதுவாக, பயன்தரத்தக்க சிறந்த எழுத்து வடிவங்களே
இலக்கியம் எனப்படுகின்றன. தாலாட்டு, ஒப்பாரி போன்ற எழுதப்
பெறாத பாடல்களும் இன்று நாட்டுப்புற இலக்கியம் எனக்
கருதப்பெறுகின்றன. எப்படிப்பட்ட இலக்கியமாயினும், அஃது
எவ்வகையேனும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு
பொருள்களுள் தன்னால் இயன்றவற்றை எடுத்தியம்புவதாக
அமைவது இயல்பு.

     சங்க இலக்கியம் முதலான இலக்கிய வகைகளிலிருந்து
வேறுபட்டு அமைவது படைப்பிலக்கியம். பிற இலக்கியங்கள், கற்று
நுகர்ந்தும், நின்றும் (கடைப்பிடித்தும்) பயன்துய்க்கத் தக்கவை.
படைப்பிலக்கியம் அப்பயன்களோடு மேலும் ஒரு பயனையும்
தரவல்லது. இதுபோலவும், இதனின் சிறப்பாகவும் படிப்போரில்
திறனுடையோரைப் படைக்கத் தூண்டுவது. கவிதை, உரைநடை
ஆகிய வகைமைகளில் எவ்வெவ்வாறு இலக்கியங்களைப் படைப்பது
என்பதைச் சான்றுடன் கற்பிப்பதே படைப்பிலக்கியத்தின் பணியும்
பயனுமாகும்.

     கவிதை, நாடகம், புனைகதை, கட்டுரை ஆகிய
அமைப்புகளில் படைப்பிலக்கியங்களின் வரலாறு குறித்தும்,
அவற்றைப் படைக்கும் முறை குறித்தும் படைப்பிலக்கியம்
என்னும்     பெருந்தலைப்பு     விரிவாக     ஆராய்கின்றது.
அவையனைத்திற்கும் ஒரு முன்னோடியாக இப்பாடத்தில் அவை
குறித்துத் தெரிந்து கொள்வோம்.