இலக்கிய வகைகளில் முதலிடம் பெறுவது கவிதையே
ஆகும். கவிதையின் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்
ஆகியவற்றின் ஒருங்கமைவும், ஒழுங்கமைவும் இதற்கான
காரணம் எனலாம். ‘ஒவ்வொரு கோணத்திலும் கவிதை
என்பது உணர்ச்சிகளின் மொழி’ என்கிறார் வின்செஸ்டர்.
‘கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு
இடையில் இருக்கிறது’ என்னும் கருத்து, ‘உணர்த்தும்
முறையே’ கவிதை இலக்கணம்
என்பதைப்
புலப்படுத்துகிறது. எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும்
கவிதை தோன்றும். கவிதை என்பது காணும் பொருள்களை
வருணிப்பதில் இல்லை; அப்பொருள்களைக் காணும்பொழுது
எழும் மனநிலையில்தான் உள்ளது. ‘கவிதையில் சரியான
வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும்.
கவிஞன் வார்த்தைகளை எடுத்துக்
கோப்பதில்லை.
உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான
இடத்திற்குக் கொண்டு செல்கிறது’ என்பார் புதுமைப்பித்தன்.
மேலும், ‘கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை;
மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ,
பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி
வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’ எனவும் உரைப்பார்.
கவிதை முருகியல் (aesthetics) உணர்ச்சியைத்
தரக்கூடியது. உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப்
படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற
வைத்துவிடுகின்றன. அவர்கள்
உணர்த்த விரும்பும்
உண்மைகளையும் உணர்த்தி விடுகின்றன. கவிதைகளில்
பெரும்பாலானவை பயிலும்போது இன்பம் தருவதுடன்
உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால், அவை
படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக
உள்ளன.
முழுமையாகவும் விரைவாகவும் உணர்த்தும் திறனும்,
மகிழ்வூட்டி வாழ்வை நெறிப்படுத்தும் பொருண்மையும் ஆகிய
தன்மைகளைக் கொண்ட கவிதைகள் தமிழில் காலந்தோறும்
தோன்றி வருகின்றன. அவற்றை மரபுக் கவிதை, இசைப்பா,
புதுக்கவிதை, துளிப்பா என்பனவாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
இக்கவிதை வகைமைகள் குறித்து இப்பாடத்தில் விரிவாகக்
காண்போம்.