2.5 தொகுப்புரை

     கவிதை என்பது சொற்களில் இல்லை ; சொற்களுக்கு
இடையில் இருக்கிறது. முருகியல் உணர்வு தருவதோடு
வாழ்வியலை     நெறிப்படுத்துவதும் அதன் பயன்களாகும்.
மரபுக்கவிதை, இசைப்பா, புதுக்கவிதை, குறுங்கவிதை என்பன
கவிதை வகைமைகளாகும்.

     மரபுக்கவிதை சந்தமும் தொடையும் செறிந்தது. வெண்பா,
ஆசிரியப்பா என்னும் பாவகைகளும், தாழிசை, துறை, விருத்தம்
என்னும் பாவினங்களும் மரபுக்கவிதை வகைமையில் செல்வாக்குப்
பெற்று விளங்குகின்றன.

     சந்தப்பா, கும்மிப்பாடல், சிந்துப்பா என இசைப்பா மூன்று
வகைப்படும். சந்தப்பா வல்லினம் முதலான இசைகளால் சிறந்து
விளங்குவது ; கும்மிப்பா வெண்டளை யாப்பும் முடுகியல் ஓசையும்
கொண்டு சிறப்பது ; சிந்துப்பா அடிதோறும் இயைபுத் தொடை
கொண்டு திகழ்வது.

     புதுக்கவிதை, மரபுக்கவிதையின் வரையறைகள் கடந்தது;
சுதந்திரமாக எழுத ஏற்றது. எளியன, பல உத்திமுறைகளில்
அமைந்தன, இருண்மைநிலையின     என வகைப்படுத்தி
உணரத்தக்கன புதுக்கவிதைகள்.

     குறுங்கவிதை மூன்றடிகளில் அமைவது. ஜப்பானியக்
கவிதைகளின் தாக்கத்தால் தோன்றியது. இது துளிப்பா (ஐக்கூ),
அங்கதம் உடையதான நகைத் துளிப்பா (சென்ரியு), முதலடியும்
ஈற்றடியும் இறுதியில் இயைந்து அங்கதம் பொருந்த வரும்
இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைகளில் அமைவது.

     கவிதை வகைமைகளைச் சான்றுகளோடு இப்பாடத்தில்
கற்ற நாம், இனி அவற்றை அடையாளம் காணலாம் ; உரிய
உத்திமுறைகளில் பொருத்தி உணரலாம். இவ்வாறே நாமும்
கவிதை படைக்கவும் முற்படலாம்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

புதுக்கவிதைக்கு முன்னோடி யார்?

(விடை)
2) குறுங்கவிதையின் வகைகள் யாவை?
(விடை)
3) துளிப்பாவிற்கான ஜப்பானிய இலக்கியப் பெயர்
யாது?
(விடை)
4) விடுகதை அமைப்பில் அமையும் பா எது? (விடை)
5) இயைபுத் துளிப்பா எவ்வாறு அமையும்?