| |
3.4 பாவியற்றும் உத்திகள் |
| |
|
| |
பொருள்கோள், செய்யுள் விகாரம், நடைநலன், புணர்ச்சி
விதி போன்றவற்றை அறிந்து பா இயற்றுதல் வேண்டும். |
| |
|
| |
3.4.1
பொருள்கோள் |
| |
|
| |
சொற்களுக்கு ஆற்றொழுக்காய் எவ்வித மாற்றமுமின்றிப்
பொருள் புரியும்படியாய் எழுதுதல், ஓரடிக்குள் உள்ள
சொற்களையோ, பல அடிகளில் உள்ள சொற்களையோ
வேண்டியவாறு கொண்டு கூட்டிப் பொருள் காணுமாறு எழுதுதல்
என எழுதும் முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். |
| |
|
| |
3.4.2
செய்யுள் விகாரங்கள் |
| |
|
| |
எதுகை மோனை முதலியன நோக்கியும், தளை
தட்டாமைப் பொருட்டும் செய்யுளில் விகாரங்கள் ஏற்படுகின்றன.
அவை :
வலித்தல் விகாரம் - மெல்லினம் வல்லினமாதல் (குரங்கு -
குரக்கு)
மெலித்தல் விகாரம் - வல்லினம் மெல்லினமாதல் (வெற்றி -
வென்றி)
நீட்டல் விகாரம் - குறில் நெடிலாதல். (நிழல் - நீழல்)
குறுக்கல் விகாரம் - நெடில் குறிலாதல். (தீயேன் -
தியேன்)
விரித்தல் விகாரம் - இடையில் ஓர் ஒற்று மிகுதல். (ஏகாரமே -
ஏகாரம்மே)
தொகுத்தல் விகாரம் - இடையில் ஓரெழுத்து விடுபடல்.
(தொட்டஅனைத்து - தொட்டனைத்து)
முதற்குறை - தாமரை - மரை
இடைக்குறை - ஓந்தி - ஓதி
கடைக்குறை - நீலம் - நீல் |
| |
|
| |
3.4.3
நடைநலன் |
| |
|
| |
கருத்துகளைக் கூறுவது மட்டும் கவிதையாகாது; நயம்படக்
கூறுதல் வேண்டும்; ஆங்காங்கு விளியோ பொருள்முடிபோ
அமைதல் நன்று; எளிய சொற்களால் யாத்தல் வேண்டும்.
இயற்சொல் மிகுதியாகவும், சூழலுக்கேற்பக்
கலைச்சொற்களாகிய திரிசொற்கள் சிறுபான்மையாகவும்
கவிதைகளில் சொற்பயன்பாடு அமைதல் வேண்டும்.
தவிர்க்கவியலாத சூழலில் பிறமொழிச் சொல்லாட்சியும் இடம்
பெறலாம்
மரபுக் கவிதைகளில் பொருள் முடிவு குறிப்பிட்ட சீர்களில்
(அ) அடிகளில் அமையும் பொழுது அழகேற்படும். வேண்டியவாறு
அடைமொழிகளை அமைத்தலும் மரபுக் கவிதைகளில் தேவையான
ஒன்றாகும். எச்சங்கள் அடுக்கி வருதலையும் அறிந்து வைத்துக்
கையாளவேண்டும். |
| |
|
| |
3.4.4
புணர்ச்சி விதிகள் |
| |
|
| |
1) குற்றியலுகரம்
நின்ற சீரின் இறுதியிலுள்ள குற்றுகர எழுத்துடன் வருமொழி
உயிர் வந்து புணரும்.
நாடு + என்றான் - நாடென்றான்
பிரித்துக் காட்ட அடைப்புக் குறியிட்டு எழுதலாம். ஆனால்
குற்றுகரத்தையும் வருமொழி உயிரையும் புணர்க்காமல் இருத்தல்
கூடாது. இது ஓரடிக்குள் மட்டுமன்று; ஓரடியின் இறுதிக்கும்
அடுத்த அடியின் முதலுக்கும் இடையில் கூடக் கவனத்தில்
கொள்ள வேண்டியதாகும்.
2) மகரப்புணர்ச்சி
‘தாம் + கண்ட - தாங்கண்ட என வரும். மகரமெய்
வருமொழி வல்லினத்திற்கேற்ற மெல்லினமாக மாறும் என்பதை
மனங்கொள்ள வேண்டும்.
வருமொழியில் மெல்லினம் வரின் மகரம் கெடும் (மனம் +
மொழி = மனமொழி).
3) லகர மெய்
கல்+கோயில் - கற்கோயில் (வல்லினம்வரின்)
கல்+மலை - கன்மலை (மெல்லினம் வரின்)
கல்+தூண்-கற்றூண் (தகரம்வரின்)
(கல்+தீது-கஃறீது)
நல்+நெறி - நன்னெறி
(நகரம்வரின்)
பால்+நினைந்து - பானினைந்து
(நகரம்வரின்)
4) ளகர மெய்
நாள்+காட்டி-நாட்காட்டி (வல்லினம்வரின்)
அருள்+மொழி-அருண்மொழி (மெல்லினம்வரின்)
முள்+தாள் - முட்டாள் (தகரம்வரின்)
(முள்+தீது-முஃடீது)
முள்+நுனி-முண்ணுனி (நகரம்வரின்)
வாள்+நுதல்-வாணுதல் (நகரம்வரின்)
5) னகர மெய்
பொன்+கோயில்-பொற்கோயில் (வல்லினம்வரின்)
பொன்+நேமி-பொன்னேமி (நகரம்வரின்)
6) ணகர மெய்
மண்+குடம் - மட்குடம் (வல்லினம்வரின்)
கண்+நீர் - கண்ணீர் (நகரம்வரின்)
இவ்வாறான புணர்ச்சி விதிகளைத் தெள்ளிதின் அறிதல்
வேண்டும்.
இவ்வாறே ஒற்றுப் பிழையின்மை, ஒருமை பன்மை
மயக்கமின்மை (அவன்தான், அவர்தாம்), மரபுச் சொற்கள்
ஆகியவற்றை அறிந்திருத்தலும் பாப்புனைவோர்க்குரிய
தகுதிகளாகும்.
பாவினைப் படைப்பதற்கு, பாக்களைப் படித்தல், நயத்தல்
போன்றன இன்றியமையாதனவாகும். |