சொற்கள் அனைத்தும்
குறியீடுகளே. ஒரு சொல் குறிப்பிட்ட
பொருளை மட்டும் உணர்த்தும் என உரைநடைச் சொல் குறித்துக்
கூறுவது எளிது. ஆனால் கவிதையில் இடம்பெறும் சொல்,
கையாளப்படும் சூழலுக்கேற்ப எதிர்பாராத பல பொருள்களையும்
தரவல்லதாக அமைகின்றது; உணர்ச்சியை
ஊட்டுவதாகின்றது.
கவிஞனின் உணர்ச்சியனுபவத்தைப்
பெற ஒலிநயம் துணை
செய்வதை உணர்ந்து, தளைகள் என ஓர் அமைப்பினையும்
அடிவரையறைகளையும் ஏற்படுத்திய நிலையில் மரபுக்கவிதை
தோன்றியது. வெண்பாவில் பிற தளைகள் வரலாகாது முதலான
கட்டுப்பாடுகளைக் காணும் நாம், ஆசிரியப்பாவில் உரைநடை
போன்ற நடையழகும் சற்றுச் சுதந்திரமும் இருப்பதை உணர்கிறோம்.
அதிலும், இணைக்குறள் ஆசிரியப்பா இடையிடையே சீர்கள்
குறைந்து வரவும் அனுமதிக்கின்றது. அடுத்து வந்த தாழிசை, துறை,
விருத்தங்களில் தளை
என்னும் கட்டுப்பாடு கடந்து,
ஒலியொழுங்கிற்கே முதன்மை தரப்படுவதை அறிகிறோம்.
எதுகை மோனைகளின் பொருட்டு வேண்டாத
சொற்களை
அடைமொழிகளாக்கியும் அசைநிலை என்ற பெயரில் வெற்றெனத்
தொடுத்தும் தவிக்க நேரிடுவதை உணர்ந்தவர்கள், சொற்சுருக்கம்
கருதிப் புதுக்கவிதை என்ற ஒன்றைத் தோற்றுவிக்கலாயினர்.
ஆங்கிலம் போன்ற மொழிகளின் வரவும், அவற்றின் தாக்கத்தால்
நேர்ந்த உரைநடை வளர்ச்சியும், அச்சுவாகன வசதி வந்துவிட்டதால்,
மனப்பாடம் செய்யும் அவசியம் இல்லாமையும் புதுக்கவிதை
வளர்ச்சிக்கு ஒருவிதத்தில் காரணமாயின எனலாம். பாரதியாரின்
வசனகவிதையே புதுக்கவிதைக்கு வழிகாட்டியாகும்.
புதுக்கவிதை
வடிவம் என்னும் இப்பாடத்தில் புதுக்கவிதையின்
உருவம், பொருண்மை, உத்தி, நிலைபேறு என்னும் தலைப்புகளில்,
புதுக்கவிதை குறித்த செய்திகளைச் சான்றுகளோடு காணலாம்.