5.0 பாட முன்னுரை


     இலக்கியம் என்பது சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைவடிவமாகும். நுண்ணுணர்வால் அறிந்து நுகரத்தக்கது ஆதலின் இது நுண்கலையாகும். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். ‘உணர்ச்சி இயல்பாகவே
உருவெடுக்கும் இடமான சிந்தனையும் சொற்களுமே கவிதை’
என்கிறார் மில் (Mill). ‘அறிவையும் கற்பனையையும் சேர்த்து
இன்பத்தை உண்மையோடு இணைத்து வைக்கும் கலையே கவிதை’
என்பது ஜான்சனின் கருத்து. நன்னூல்,

    சொல்லால் பொருட்கிட னாக உணர்வின்
   வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நூற்பா-268)

எனக் குறிப்பிடுகின்றது.

     கவிதையின்     உயிராகக்     கருதப்படும் ஓசையின்
உருவாக்கத்தையொட்டி யாப்பிலக்கணம் வகுக்கப்பட்டது.
தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை
ஆகியவற்றில் பாக்கள், பாவினங்கள் ஆகியவற்றிற்கான
இலக்கணங்கள் வரையறுத்து உணர்த்தப்படுகின்றன. பல்வேறு
இலக்கியங்களைப் பயின்ற பயிற்சியும், யாப்பிலக்கண அறிவும்
உடையவர்களால் மட்டும் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைக்க
முடியும். இதில் சாதித்தல் அரிது என்பதை,

    காரிகை கற்றுக் கவிபாடு வதினும்
    பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே

என்னும் பாடல் உணர்த்தும். இலக்கியம், இலக்கணம், மருத்துவம்,
சமயம், கதை என யாவும் மரபுக்கவிதை வடிவிலேயே முன்பு இடம்பெற்றன. இவ்வடிவம் செய்யுள் என்பதாக இலக்கியங்களிலும்,
நூற்பா என்பதாக இலக்கண நூல்களிலும் பெயர் பெற்றிருந்தது.

     இருபதாம் நூற்றாண்டளவில் மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி     பயில்வோர் பலதரப்பட்டவர்களாக     அமைந்தமையும்,     மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்புக் கடந்த கவிதை வகை தோன்றிச் சிறக்கக் காரணமாயின.

     இவ்விருவகைக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, வடிவம் (Form), உள்ளடக்கம் (content), உத்திகள் (Techniques) ஆகியன பற்றி எடுத்துரைப்பதாக இப்பாடம் அமைகிறது.