அ.மொழிபற்று
மரபுக்கவிதை
பல்வேறு வாழ்வியல் தேவைகளுக்காகப் பிறமொழிகளைக்
கற்க
வேண்டிய தேவை இருப்பது உண்மை. அதே நேரத்தில்
தாய்மொழியை நேசித்தலும், அதில் பயிற்சி பெறுதலும் மிகவும்
வேண்டிய பண்புகளாகும். தாய்மொழியை அலட்சியப்படுத்துதல்,
தாய்மொழியில் பேசுதல் குறைவென்று தாழ்வு மனப்பான்மை
கொள்ளுதல் போன்றன இருத்தல் கூடாது.
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
(பான்மை = இயல்பு ;
நாமம் = பெயர் ; தேமதுரம்
=
தேன்போல் இனிமை)
எனப் பாரதியார் பாடுவது உளங்கொளத்தக்கது.
புதுக்கவிதை
அயல்மொழி மோகத்தில் இன்று நிலைதடுமாறும் தமிழர்நிலை
அதிகரித்துள்ளது. கவிஞர் காசி ஆனந்தனின்,
தமிழே ! உயிரே ! வணக்கம் !
தாய்பிள்ளை உறவம்மா
உனக்கும் எனக்கும் !
அமிழ்தே ! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில்
கசக்கும் ! புளிக்கும் !
எனவரும் கவிதை, மொழிப்பற்றுக்குத் தக்கதொரு சான்றாகும்.
ஆ.நாட்டுப்பற்றுமரபுக்கவிதை
தாய்நாடு, தாய்க்குச் சமமானது.
பெற்ற தாயும்
பிறந்தபொன் னாடும்
நற்றவ வானினும் நனிசிறந் தனவே
என்பார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம்
உடல்,
பொருள், ஆவி ஆகியவற்றைத்
தியாகம் செய்த
நாட்டுப்பற்றாளர்கள் பற்பலர்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகு லாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம்வ ளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில்இ ருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ
(குலாவி = சேர்ந்து ; வந்தனை
= வணக்கம்)
என்னும் பாரதியாரின் பாடல் நாட்டு வணக்கமாகத்
திகழ்ந்து
வீறுணர்வு அளிக்கின்றது.
புதுக்கவிதை
நாட்டுக்கு வணக்கம் செலுத்துவது ஒரு
வகை என்றால்,
நாட்டுமக்களின் பிரச்சனைகளை எண்ணிப் பார்ப்பது மற்றொரு
வகை எனலாம். இசை என்னும் தலைப்பில் மேத்தா
எழுதியுள்ள
புதுக்கவிதை அவ்வகையானது. அது வருமாறு :
ஜனகணமன பாடலை
நான் நேசிக்கிறேன்
எப்போது இதை
இன்னும் அதிகமாய்
நேசிப்பேன் தெரியுமா?
எப்போது
இந்தியா
தன் பிரச்சினைத்
துயரங்களுக்கெல்லாம்
‘ஜனகணமன’ பாடுகிறதோ
அப்போதுதான் இதை
அதிகமாய் நேசிப்பேன்
‘ஜனகணமன’ பாடுதலாவது பிரச்சினைகளை முடித்து
வைத்தல் - முடிவில் பாடுதல் என்னும்
பொருளில்
இங்குக் கையாளப்படுகின்றது. நாட்டு வளத்தைப் போலவே,
நாட்டுமக்களின் வாழ்வும் இன்றியமையாதது அல்லவா? |