6.1 சங்க இலக்கியம்

     பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெட்டும்
சங்க இலக்கியம் எனப்படும். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாக அமைவனவாகும். இவற்றுடன்
திருக்குறள்
முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஒரு
சேர வைத்து இங்குச் சிந்திப்போம்.

6.1.1 உருவம்
     சங்க இலக்கியங்களாகிய     மேற்கணக்கு நூல்கள்
பதினெட்டனுள், பரிபாடல் என்னும் நூல் பரிபாட்டினாலும்,
கலித்தொகை என்பது கலிப்பாவினாலும் ஆனவை. ஏனைய
பதினாறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனவை.
திருக்குறள்
முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா யாப்பினால்
ஆனவையாகும். அவற்றுள்
முதுமொழிக்காஞ்சி மட்டும்
குறள்வெண் செந்துறை என்னும் குறள் வெண்பாவின்
பாவினத்தால் ஆனதாகும்.

     பரிபாடல் என்பது பரிந்து செல்லும் ஓசையுடையது; காமம்,
பக்தி இவற்றைப் பொருளாகக் கொண்டது ; 25 முதல் 400
அடிவரை அமைவது; இதற்கெனத் தனியே இசைவகுப்பதும் உண்டு.
எனவே, தமிழிசையின் பழமைக்குச் சான்றாகத் திகழ்வது இது
எனலாம்.

  • ஆசிரியப்பா
  •      உரைநடைக்கு நெருக்கமானது; யாவரும் விரைந்து
    எழுதுதற்கு ஏற்றது; இதன் குறைந்த அடியளவு மூன்று ஆகும். மிகுதியான அடியளவிற்கு எல்லையில்லை என்பர். எனினும், 782 அடிகளில் அமைந்ததாக மதுரைக்காஞ்சி கிடைத்துள்ளது.

         அடிவரையறை கொண்டே அகநூல்கள் பாகுபடுத்தித்
    தொகுக்கப் பட்டுள்ளமையைக் காண்கிறோம்.

         ஐங்குறுநூறு - 3-6 அடிகள்
         குறுந்தொகை - 4-8 அடிகள்
         நற்றிணை - 9-12 அடிகள்
         அகநானூறு - 13-31 அடிகள்

         பத்துப்பாட்டு என்பது 100க்கும் மேற்பட்ட அடிகளைக்
    கொண்ட பாடல்களின் தொகுப்பாக அமைகின்றது.

         புறநானூறு 4 முதல் 40 அடி வரையிலான பாடல்களைக்
    கொண்டுள்ளது.

         மூன்றடிப் பாடலுக்கோர் சான்று :

        யானெவன் செய்கோ பாண ஆனாது
        மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
        புல்லென் றனஎன் புரிவளைத் தோளே

    (ஐங்குறுநூறு-133)

    (செய்கோ = செய்வேன் ; ஆனாது = தாங்கமாட்டாமல்; மெல்லம்புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன் ; புல்லென்றன = பொலிவிழந்தன)

         நேரிசை ஆசிரியப்பாக்களே     பெரும்பான்மையினவாக
    உள்ளன. கனிச்சீர் இரண்டுடைய வஞ்சியடிகள் கலந்து வந்த
    ஆசிரியப்பாடலாகப் பட்டினப்பாலை உள்ளது. இதனால் இதனை
    வஞ்சி நெடும்பாட்டு என்கின்றனர்.

  • வெண்பா

  •     
    பிற தளை விரவாத இயல்புடையது. குறைந்த அடியளவு 2. கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள் குறள் வெண்பாவால் ஆனது. ஆசாரக்கோவையானது குறள் வெண்பா (2 அடி), சிந்தியல் வெண்பா (3 அடி), இன்னிசை வெண்பா (4 அடி), நேரிசை
    வெண்பா (4 அடி), பஃறொடை வெண்பா (4-12 அடி) எனப் பல வெண்பா யாப்புகளாலும் அமைந்துள்ளது. முதுமொழிக் காஞ்சி ‘குறள் வெண்செந்துறை’ என்னும் குறள் வெண்பா இனத்தால் ஆனது. ஏனைய நூல்கள் அனைத்தும் நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பாக்களால் ஆனவையாகும்.

         பத்துப் பாடல்களையுடையது ஓர் அதிகாரம் என வகுத்துக் கொண்ட அமைப்பினையும் திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களில் காணமுடிகின்றது.

         குறட்பாவிற்கு ஒரு சான்று :

         எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
         எண்ணுவம் என்ப(து) இழுக்கு

         குறள் வெண்செந்துறைக்கு ஒரு சான்று :

         ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
         ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை

    (சிறந்தன்று = சிறந்தது)

  • கலிப்பா
  •      அகப்பொருள் பாடச் சிறந்தது; நாடக வழக்கில் அமையக்
    கூடியது. தரவு, ஒருபொருள்மேல் மூன்றடுக்கிய தாழிசை,
    தனிச்சொல், சுரிதகம் என்னும் அமைப்பினவாகிய கலிப்பாக்களே கலித்தொகையில் மிகுதியும் இடம்பெற்றுள்ளன. வெண்டளை பிறழாது வருவதாகிய கலிவெண்பாவினால் ஆன பாடல்களும் இதன்கண் உள்ளன.

    தாழிசைக்கு ஓர் சான்று :

         பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
         மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
         நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே

    (கலித்தொகை-9)

    6.1.2 உள்ளடக்கம்

         அகம், புறம், அறம் ஆகிய மூவகைப் பொருண்மைகளைக்
    கொண்டனவாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.

  • அகம்
  •      தலைவன் தலைவியருக்கிடையிலான அன்பும் சந்திப்பும்
    குறித்துப்     ‘பெயர்சுட்டப்     பெறாமல்’     எடுத்துரைப்பது
    அகப்பொருளாகும்.

         தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல்,
    களவியல், கற்பியல், பொருளியல் என நான்கு இயல்களில்
    அகப்பாடல்     இயற்றுதலுக்கான துறை, கூற்று போன்றன
    எடுத்துரைக்கப் பெறுகின்றன.

    குறிஞ்சித் திணை
    முல்லைத் திணை
    மருதத் திணை
    நெய்தல் திணை
    பாலைத் திணை
    - புணர்தல்
    - இருத்தல்
    - ஊடுதல்
    - இரங்கல்
    - பிரிதல்
    +புணர்தல் நிமித்தம்
    +இருத்தல் நிமித்தம்
    +ஊடுதல் நிமித்தம்
    +இரங்கல் நிமித்தம்
    +பிரிதல் நிமித்தம்

    எனத் திணைகளுக்குப் பொருண்மை வகுக்கப்பட்டன. இவை
    உரிப்பொருள் எனப்படும். இவற்றிற்குரிய நிலமும் பொழுதும்
    முதற்பொருள் எனப்படும். இவை சார்ந்த தெய்வம், மக்கள்,
    ஊர், நீர், பூ, மரம், பறவை, விலங்கு, யாழ், பண், தொழில்
    போன்றன கருப்பொருள் எனப்படும். அவ்வவற்றிற்குரிய
    முப்பொருள்களும் அமையுமாறு பாடுதலே முறையாகும்.

         குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு,
    கலித்தொகை
    என எட்டுத்தொகை நூல்களுள் ஐந்து நூல்கள்
    அகப்பொருளன. பத்துப்பாட்டுள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்
    பாட்டு, பட்டினப்பாலை
    ஆகிய மூன்றும் அகப்பாடல்கள் ஆகும்.
    பதினெண் கீழ்க்கணக்குள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை
    எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது,
    கைந்நிலை, கார் நாற்பது
    என்னும் ஆறும் அகம் பற்றியவாகும்.

         காதல், திருமணம், இல்லறம் என்பனவாக இவற்றின்
    போக்கு அமையும். இவற்றில் தோழியின் பங்கு அதிகமாக
    அமையும். காதலித்த தலைவனையே மணக்க வேண்டும் என்னும்
    தமிழ்ப் பண்டிபாட்டிற்கேற்பத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய்,
    தந்தை என ஒருவர் ஒருவர்க்கு முறையே காதல் நிகழ்வு
    முறைப்படி எடுத்துரைக்கப் பெறும். இஃது அறத்தொடு
    நிற்றல்
    எனப்படும். அம்முயற்சி தோல்வியுறுமாயின், தலைவி
    தான்     விரும்பிய தலைவனுடன் அயலூருக்குப் பயணம்
    மேற்கொண்டு பிறகு மணம் கொள்வாள். இவ்வகையான நிகழ்வு
    உடன்போக்கு எனப்படும்.

         களவுக் காலத்தும், கற்புக் காலத்தும் தலைவனின் பிரிவைத்
    தாங்காமல் தலைவி வருந்துதல், தோழி தேற்றுதல், அருகில்
    உள்ள ஊரவர் அலர்தூற்றுதுல் ஆகியனவும் அகப்பொருளில்
    இன்றியமையா இடம்பெறும்.

         புலவர்கள் தம்மைப் புரக்கும் அரசர்தம் பெருமைகளை
    உவமையாக அமைத்து அகப்பொருளைப் பாடுவது உண்டு.

         கபிலர் குறிஞ்சித் திணையைச் சுவைபடப் பாடுவதில்
    வல்லவராக இருந்துள்ளார். ஏனையோருள் ஒரு திணையைப்
    பாடியோரும் உளர்
    ; பல திணைகளைப் பாடியோரும் உளர்.

         நாணமிழந்து காதலைப் புலப்படுத்தும் நிலையினவாகிய
    கைக்கிளை, பெருந்திணைப் பகுதிகளும் கலித்தொகையுள்
    இடம்பெற்றுள்ளன.

    1. காதலின் அளவு

         நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
         நீரினும் ஆரள வின்றே, சாரல்
         கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
        
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

    (குறுந்தொகை-3)

    என காதலின் அளவு நிலத்தின் அகலத்திற்கும், வானின்
    உயரத்திற்கும், கடலின் ஆழத்திற்குமாகக் கூறப்படுள்ளது.

    2. தலைவியின் அன்பு

         இம்மை மாறி மறுமை ஆயினும்
         நீஆகி யர்எம் கணவனை
         யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே

    (குறுந்தொகை-49)

    எனப்     பரத்தமை     மேற்கொண்ட     தலைவனிடத்தும்,
    மறுபிறப்பிலாவது நின் நெஞ்சம் நிறைபவளாகத் தான்
    ஆகவேண்டும் என வேண்டுகின்றாள் தலைவி.

    3. பிறந்த வீடும் புகுந்த வீடும்

         அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
         தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
         உவலைக் கூவல் கீழ
        
    மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே

    (ஐங்குறுநூறு-203)

    (படப்பை = தோட்டம் ; உவலை = சருகு ; கூவல் = நீர்க்குழி ; கலுழி = கலங்கல்)

    4. ஆண்மான் அன்பு

         சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
        பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
        கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்பர் காதலர்
       
    உள்ளம் படர்ந்த நெறி

    (ஐந்திணை ஐம்பது, 38)

    (சிறுநீரை = சிறிதளவாகிய நீரை ; கலைமா = ஆண்மான் ;
    கள்ளம் = பொய் ; ஊச்சும் = உறிஞ்சும் ; சுரம் = பாலை நில
    வழி)

  • புறம்

  •     
    வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம், தூது எனப்
    பல பொருண்மைகளில், வீட்டிற்கு வெளியிலான வாழ்க்கையை,
    சமுதாயப்     பயன்பாட்டினை     ரைப்பதாக அமைவது
    புறப்பொருளாகும்.

         புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய     இரண்டும்
    புறப்பொருள் நூல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாக
    உள்ளது.      திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
    சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
    மலைபடுகடாம்,
    மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை
    ஆகிய ஏழும் புறப்பாடல்களாகும்.
    பதினெண் கீழ்க்கணக்கில் களவழி நாற்பது மட்டும் புறப்பொருள்
    நூலாகும்.

         தொல்காப்பியப் பொருளதிகாரம், போரிடல் தொடர்பாகப்
    புறத்திணையியல் எனத் தனி இயல் வகுத்து விவரிக்கின்றது.

    வெட்சி
    வஞ்சி
    உழிஞை
    தும்பை
    வாகை
    காஞ்சி
    பாடாண்
    - ஆநிரை கவர்தல்
    - பகைவர் மண் கைக்கொள்ளப் போர் தொடுத்தல்
    - மதில் வளைத்துப் போரிடல்
    - நேர்நின்று பொருதல்
    - வென்றவர் பெருமை கூறல்
    - நிலையாமை
    - பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம்

    எனப் புறத்திணைகள் ஏழாக உரைக்கப்படுகின்றன.

         அரசியல், நட்பு, பொருளாதாரம், வாணிகம், நாகரிகம்,
    பண்பாடு எனப் பல்வேறு செய்திகளை உள்ளது உள்ளபடி கூறும்
    வரலாற்றுப் பெட்டகமாகப் புறநானூறு, பதிற்றுப்பத்துப் போன்ற
    புற நூல்கள் திகழ்கின்றன.

    1. நீர்ப்பாதுகாப்பு

        நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
        தட்டோர் அம்ம இவண்தட் டோரே
        தள்ளா தோர்இவண் தள்ளா தோரே

    (புறம்-18)

    (தட்டோர் = நீர்நிலை தோண்டினோர் ; தள்ளாதோர் = நீர்நிலை
    தோண்டாதோர்)

         நீர்வளம்     நிலைபெறச்     செய்தவன் தன்புகழை
    நிலைநிறுத்தியவன். அதை நிலை நிறுத்தாதவன் தன்புகழை நிலை
    நிறுத்தாதவன் என்பது பாடலின் பொருளாகும்.

    2. செல்வப் பயன்பாடு

        அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
        ஆற்றும் பெருமநின் செல்வம்
        ஆற்றா மைநின் போற்றா மையே

    (புறம்-28)

         செல்வத்தால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அமையும் ; அதுகொண்டு அவற்றைத் துய்க்காமை உன்னை நீயே பாதுகாவாமையாகும் என்பது இதன் பொருள்.

    3. ஈதல் இயல்பு

        எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
        மறுமை நோக்கின்றோ அன்றே
        பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண் மையே

    (புறம் - 141)

         எனப் பரணர் பேகனைப் பாராட்டுவது குறிப்பிடத்தக்க
    ஒன்றாகும். “என்ன நேர்ந்தாலும் பிறருக்கு வழங்கவேண்டும்
    என்பது அவன் கொள்கை; அந்தக் கொடை மறுமையைக்
    கருத்தில் கொண்டது அன்று; பிறரது வறுமையையே க ருத்தில்
    கொண்டதாகும்” என்பது இதன் பொருள்.

    4. யானையை வீழ்த்தல்

        கவளங்கொள் யானையின் கைகள் துணிக்கப்
        பவளம் சொரிதரு பைபோல் - திவள்ஒளிய
        ஒண்செங் குருதி உமிழும் புனல்நாடன்
        கொங்கரை அட்ட களத்து

    (களவழி நாற்பது, 14)

    (திவள் ஒளிய = விளங்கும் ஒளியுடைய; புனல்நாடன் = சோழன்;
    கொங்கர் = சேரர் ; அட்ட = அழித்த)

  • அறம்

  •     
    செய்யத்தக்கன, செய்யத் தகாதன என எண்ணம், சொல்,
    செயல்களின் நிலைகளைப் பாகுபடுத்துவது அறம் ஆகும்.

    சங்க இலக்கியங்களிலே அறத்தின் கூறுகளைக் காணமுடிகின்றது.

         செல்வத்துப் பயனே ஈதல்
         துய்ப்பேம் எனினே தப்புந பலவே     (புறம், 189)

    (துய்ப்போம் = அனுபவிப்போம் ; தப்புந = பயன்படாது
    நீங்குவன)

    என்பது புறநானூறு.

    கலித்தொகையுள்,

         ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல்
         போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
         பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
         அன்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல். . .

    (அலந்தவர்= நொந்தவர்; பாடு = இயல்பு ; பேதையார் = முட்டாள்கள் ; நோன்றல் = பொறுத்தல்)

    எனவரும் பகுதியும் அறத்தின் திறத்தது.

         திருக்குறள், நாலடியார், பழமொழி     நானூறு,
    இனியவை நாற்பது,     இன்னா நாற்பது, திரிகடுகம்,
    நான்மணிக்கடிகை,     சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்
    கோவை, முதுமொழிக்காஞ்சி
    என்னும் பதினொரு நூல்களும்
    பதினெண் கீழ்க்கணக்கில் காணும் நீதி நூல்களாகும்.

    1. தவம்

             உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
       அற்றே தவத்திற்(கு) உரு

    (குறள்-261)

    (நோன்றல் = பொறுத்தல் ; உறுகண் = துன்பம்)

    எனத் தவத்திற்குப் புதுவிளக்கம் தரப் பெறுகின்றது.

    2. ஒழுக்கம்

         ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
         உயிரினும் ஓம்பப் படும்

    (குறள் - 131)

    (விழுப்பம் = மேன்மை)

    என ஒழுக்கம் உயிரினும் மலோனதாகக் கருதப்படுகின்றது.

    3. கல்வி

         கல்வி கரையில ;ற்பவர் நாள்சில ;
       மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
       ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீரொழியப்
        பால்உண் குருகின் தெரிந்து

    (நாலடியார், 35)

    எனத் தேர்ந்து கற்றல் வற்புறுத்தப் பெறுகின்றது.

    4. நட்பிற்குத் தக்கோர்

         தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் ;
       வளோளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் ;
       கோளாளன் என்பான் மறவாதான் ; இம்மூவர்க்
       
    களோக வாழ்தல் இனிது

    (திரிகடுகம், 12)

    (தாளாளன் = முயற்சியுடையோன் ; கோளாளன் = மாணவன் ; கேள் = நட்பு)

    5. துயிலெழுதல்

         நாளும் வாழ்வில் கடைப்பிடிக்கத்தக்க பழக்கவழக்க
    ஒழுக்க முறைகளையும் ஆசாரக் கோவை எடுத்துரைக்கின்றது.

         வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
         நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
         தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
         முந்தையோர் கண்ட முறை

    (ஆசாரக்கோவை - 41)

    6.1.3 உத்திமுறை

         சங்க இலக்கியங்களில் உரிப்பொருளைப் பாடும் பகுதி
    குறைவானதாகவே இருக்கும். ஏனைய முதற்பொருள், கருப்பொருள்
    சார்ந்த வருணனைகள் மிகுதியாக இருக்கும். ஏனெனில்,
    உரிப்பொருளைப் பாடுவதை விடவும், இயற்கையைக் கண்டு
    மகிழ்தலும், பிறரும் உணர்ந்து மகிழ அக்காட்சியைச்
    சொற்சித்திரமாக்குதலுமே புலவர்தம் நோக்கமாக இருந்துள்ளது.
    அடைமொழியாக அமைக்கும் நிலை, உவமை காட்டும் நிலை என
    ஏனையவற்றின் வருணனைகளே மிகுந்திருக்கும். இவற்றில் எதுகை,
    மோனை முதலியன இயல்பாக உள்ளன. செந்தொடைப்
    (தொடையற்ற) பகுதிகளே அதிகமாக உள்ளன.

        உள்ளதை     உள்ளவாறு     கூறும் தன்மையணி,
    அணிகளுக்கெல்லாம் தாயாகிய உவமையணி ஆகியவற்றுடன்
    குறிப்புப்பொருளின்     செல்வாக்கையும் சங்க இலக்கியத்தில்
    காணமுடிகின்றது.

  • தன்மையணி
  •  
       எவ்வகைப் பொருளின் மெய்வகை இயல்பையும் உள்ளவாறு உரைப்பது தன்மையணியாகும். இஃது இயல்பு நவிற்சி அணி எனவும் கூறப்பெறும் (நவிற்சி = கூறுதல்).

        தலைவி, தலைவனின் பிரிவைத் தாங்காது வருந்துவாள்
    எனத் தோழி வருந்த, அவள் அவர் வரும்வரை யான் ஆற்றியிருப்பேன் என்பதாக வரும் துறையின் பாடல் ஒன்று வருமாறு
    :

        ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
        கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
        முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
        எருவின்நுண் தாது குடைவன ஆடி
        இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
        புன்கண் மாலையும் புலம்பும்
         இன்றுகொல் தோழிஅவர் சென்ற நாட்டே

    (குறுந்தொகை-46)

    (சாம்பல்= வாடுதல் ; சிறகர் = சிறகு ; குரீஇ = குருவி ; உணங்கல் = காயவைத்தது)

        மாலைப்பொழுது குறித்துக் கூறவரும் புலவர், குருவியின்
    உருவம்,     உணவுண்ணல், விளையாடல், தங்குதல் என
    இயற்கையோடு இயைந்த நிலையில் எடுத்துரைக்கின்றார்.

  • உவமையணி

  •     
    அணிகளுக்கெல்லாம்     தலைமையானது ; தாய்போல்வது.
    தெரிந்தது கொண்டு தெரியாதது     விளங்குவிக்க வருவது
    உவமையணி. பிற்காலத்தில் தொடர்புடையனவற்றை அழகுபட
    எடுத்துரைப்பதாய் அமையத் தொடங்கியது.

    1. நாரையின் கால்

        யாரும் இல்லைத் தானே களவன்
        தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?
        தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
        ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
        
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

    (குறுந்தொகை-25)

    (களவன் = இடத்திருந்தோன் ; கால = காலுடையன ; ஆரல்= மீன்வகை ; மணந்த ஞான்று = கூடிய பொழுது)

        இதில் நாரையின் காலுக்குத் தினைத்தாள் உவமை
    கூறப்பட்டுள்ளது. வண்ணம், வடிவம், அளவு ஆகிய மூன்று
    நிலைகளிலும் ஒப்புச் சொல்லத்தக்க உவமை இது.

    2. பண்பிலார்

    அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்

    (குறள் -997)

    என்பதில் அறிவுக் கூர்மைக்கு அரமும், பண்பிலாமைக்கு
    மரமும்     உவமையாகக்     கூறபட்டுள்ளன. இவ்விரண்டும்
    பண்புவமைகள்.

    3. நண்பராகத் தகாதோரும் தக்காரும்

        யானை அனையார் நண்புஒரீஇ, நாயனையார்
        கேண்மை தழீஇக் கொளல்வேண்டும்
    ; யானை
        அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
        
    மெய்யதா வால்குழைக்கும் நாய்

    (நாலடியார், 213)

    (ஒரீஇ = நீக்கி ; கேண்மை = நட்பு)

    என நட்பில் பிழை பொறுத்தல் அடிப்படையில் யானையும்
    நாயுமாகிய உவமைகள் இங்குக் கூறப்பட்டன.

  • குறிப்புப் பொருள்
  •    தலைவனுக்கு அறிவுரை கூறும் சூழல் குறிஞ்சி, மருதம்
    முதலான திணைகளில் நேர்கின்றபோது, நேரடியாகக் கூற
    இயலாமல் குறிப்பாக அமைத்துக் கூறும் நிலை தலைவிக்கும்
    தோழிக்கும் நேரிடுகின்றது. பிறர்க்கும் இந்நிலை அமைவதுண்டு.


        குறிப்புப் பொருளை உள்ளுறை உவமை, இறைச்சி என
    இரண்டாகப் பிரிப்பர்.

        உள்ளுறை உவமம் என்பது கூறுவதையும் குறிப்புப் பொருளையும் இணையிணையாக அமையுமாறு கூறப்பெறுவது. பரத்தை, தலைவனைக் குறித்துக் கூறும்பொழுது,

        கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
        பழன வாளை கதூஉம் ஊரன்

    (குறுந்தொகை - 8)

    (மா = மாமரம் ; கதூஉம் = வாயால் பற்றும்)

    என்கிறாள்.

    கழனி
    மாமரம்
    மாம்பழம்
    பழனம்
    வாளை
    - தலைவனின் இல்லம்
    - தலைவி
    - தலைவன்
    - பரத்தையர் சேரி
    - பரத்தை

        மாம்பழத்தைத் தவறவிட்டது மாமரத்தின் தவறேயன்றி, பற்றிக்கொண்ட வாளைமீனின் தவறாகாது என்னும் கருத்து, தலைவியேயன்றிப் பரத்தை குற்றமுடையவள் ஆகாள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றது.

        இறைச்சிப் பொருளாவது, உள்ளுறை போல நேரடிப் பொருத்தக் கருத்துகள் இன்றித் தொனிப்பொருளில் கருப்பொருள் சார்ந்ததாக வரும்.

         வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
         சாரல் நாட செவ்வியை ஆகுமதி
         யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்
         சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
         உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!

    (குறுந்தொகை-18)

        என்பதில், கிளையில் கனிந்த பலா பிறரால் கவரப்படலாம்; கனிந்து கீழே விழுந்தால் சிதறலாம் ; மேலும் வேலியற்றது என வரும் கருத்துகள் தலைவி பிறருக்கு மணம் நேர்தல் போன்ற நிலைகளைச் சுட்டுவதாக உள்ளது.