1.4 படைப்பிலக்கியப் பயன்கள்

    படைப்பாளி படிப்பவர்களுக்குத் தன் அனுபவங்களை, தான்
கண்டவைகளை, தான் கேட்டவைகளைக் கற்பனைக் கலந்து
சொல்ல முயல்கிறான். படைப்பாளியின் அனுபவங்களைப்
படிப்பவனும் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. வாழ்வில் சரியான
முடிவு எடுக்க இயலாத சூழல் ஒருவனுக்கு வரும் போது,
ஏதாவது ஒரு படைப்பிலக்கியம் அவனுக்கு வழி காட்டக்
கூடும்.

    படைப்பிலக்கியவாதிகள், நீதி நூல்கள், தத்துவ நூல்கள்
போல் செய்திகளைச் சுவையற்ற தன்மையில் கூறாமல்,
கற்பனையை     இணைத்து,     அழகியலுடன்     வடிவம்
கொடுக்கின்றனர்.     அப்போது     படைப்பிலக்கியத்தைப்
படிப்பவனும்     இலக்கியத்தில்     தானும் தோய்ந்து,
அவ்விலக்கியத்தில் வரும் ஒரு பாத்திரமாகவே தன்னை
எண்ணத் தொடங்குகின்றான். இதன் காரணமாக மனம்
செம்மை பெறுகின்றது.

    படைப்பாளன் படைப்பின் வழி அழகியலை மேம்படுத்திக்
கொண்டு, தன்னையும்     மேம்படுத்திக் கொள்கிறான்.
அவனுடைய மேம்பாடு அவன் படைப்பில் வெளிப்படுகிறது.
அதைப் படிப்பவனும் தன்னை மேம்படுத்திக் கொள்ள அந்தப்
படைப்பு பயன்படுகிறது.

    சான்றாக, மது அருந்துதலின் இழிவு பற்றிய படைப்புகள்
படைக்கப்படுமாயின் படிப்பாளிகள் மது அருந்துவதில் இருந்து
தம்மை மீட்டுக் கொள்ள அப்படைப்புகள் பயன்படும். நாட்டுப்
பற்றினை, மொழிப் பற்றினை, சமுதாய மேம்பாட்டிற்குச் செய்ய
வேண்டிய செயல்களைப்     படைப்புகள் காட்டுமாயின்,
படிப்பாளிகளும் அவற்றைப் படித்து தம்மை ஒழுங்குபடுத்திக்
கொள்வார்கள்.

    மனிதனுக்கு வேண்டிய புறவாழ்வுப் பொருள்களை
அறிவியல் ஆக்கித் தரும். அக வாழ்வு ஒழுங்கினைப்
படைப்பிலக்கியம் உருவாக்கித் தரும்.