2.0 பாட முன்னுரை

    படைப்பிலக்கிய வகையுள் கதை கூறும் இலக்கிய
வகையைச் சார்ந்தது நாவல் இலக்கியமாகும். நிறைய
சம்பவங்களையும், பாத்திரங்களையும்     கொண்டு ஒரு
பெருங்கதையைக் கூறும் இலக்கியமாக நாவல் விளங்குகின்றது.
எனவே இந்த இலக்கியத்தைக் கதை இலக்கியம் என்றே
கூறலாம்.

    பழங்காலக் கதை இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை
வடிவிலேயே தோன்றின. இது பெரும்பாலான மொழிகளுக்குப்
பொருந்தும். வரலாற்றுத் தொடக்கக்காலத்தில் வடமொழியில்
தோன்றிய இராமாயணம், மகாபாரதம் போன்ற கதை கூறும்
இதிகாசங்கள் கவிதை வடிவில் தோன்றியவையே. சங்க
காலத்தை அடுத்தும், இடைக்காலத்திலும் தமிழில் தோன்றிய
சிலப்பதிகாரம்,     மணிமேகலை,     சீவகசிந்தாமணி,
கம்பராமாயணம், பெரிய புராணம்
போன்ற கதை கூறும்
இலக்கியங்கள் கவிதை வடிவ இலக்கியங்களே. பிற்காலத்தில்
அச்சு எந்திரங்கள் அறிமுகமாகிய சூழலில் உரைநடை வடிவில்
பெருங்கதைகள் எழுதும் நிலை     ஏற்பட்டது. இதன்
வெளிப்பாடே, நாவல் எனும் புதிய இலக்கிய வடிவம். இந்தப்
புதிய இலக்கிய வகை பற்றிய செய்திகள் இப்பாடத்தில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.