3.2 கதைப்பின்னல்

    கதைக்கோப்பு என்றும் கதைப்பின்னல் என்றும் இதனைக்
கூறலாம். நாவலில் கதை பின்னப்படும் தன்மையில் இருந்து
தான் நாவலின் வெற்றி முடிவு செய்யப்படுகிறது. கதை மிகச்
சரியாகப் பின்னப்பட்டுவிட்டால் நிலைத்து நிற்கும் நாவலாக
விளங்கும். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘Plot’ என்ற
சொல்லுக்கு நாடகம், கவிதை, நாவல் ஆகியவற்றிற்கான
திட்டம் என்று கூறும். எனவே கதைத் திட்டம்தான் கதைக்
கோப்பாக, கதைப் பின்னலாக அமைகிறது.

    நாவலில், பல்வேறு கதை நிகழ்ச்சிகளை நாவலாசிரியர்
குறிப்பிடுகின்றார். இக்கதை நிகழ்ச்சிகளைக் காரண காரிய
முறையில் ஒன்றினை அடுத்து ஒன்றை வைப்பது கதைப்
பின்னலாகும். இந்த நிகழ்வுக்குப் பின், இது நிகழும் என்றும்,
இன்ன காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்குப்பின் இந்த நிகழ்ச்சி
வைக்கப்பட்டுள்ளது என்றும் முறைப்படுமாறு அமைக்க
வேண்டும். ஒரு கதை நிகழ்வைப் படிக்கும் வாசகனுக்கு
அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற ஆர்வத்தைத்
தூண்டுமாறு நிகழ்ச்சிகள் தொடர்புடன் அமைய வேண்டும்.
நாவலின் கதை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சுவையாக
அமைய வேண்டும். அப்போதுதான் அடுத்த நிகழ்ச்சி
என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை உருவாக்க முடியும்.
இரு நிகழ்ச்சிகள் தொடர்புடையன ஆவதற்குரிய காரணமாக
அமைவது கதைப்பின்னலாம்.

கதைப்பின்னல் இரு வகையாகப் பிரிக்கப்படும்.

(1) நெகிழ்ச்சிக் கதைப் பின்னல் (Loose Plot)
(2) செறிவான கதைப் பின்னல் (Organic Plot)

    நெகிழ்ச்சிக் கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று
தொடர்பற்று இருக்கும். கதைப்பின்னல்கள் காரண, காரிய
முறைப்படி அமையாமல் நெகிழ்வாக அமையும். கதை நிகழ்ச்சி
சென்று கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பாத்திரம்
வேறொன்றை நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுவதாக
அமையும். மு.வரதராசனாரின் நாவல்களான செந்தாமரை,
கரித்துண்டு
     போன்ற     நாவல்கள் நெகிழ்ச்சிக்
கதைப்பின்னலைக் கொண்டவை.

    செந்தாமரை மு. வரதராசனாரின் முதல் நாவல். இதில்
ஓரு பாத்திரமாவது முழுமையானதாகப் படைக்கப்படவில்லை.
சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள்; சிலர் காத்திருந்து
பெறுகிறார்கள் ; சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள்.
செந்தாமரை நாவல் இத்தகைய மூன்று காதல் வாழ்வுகளையே
சித்திரிக்கிறது. மருதப்பனும், அவனுடைய மனைவியும் காதலை
வளர்த்து வாழ்கிறார்கள். திருநாதனும் திலகமும் காத்திருந்து
காதலைப் பெறுகிறார்கள். இளங்கோவும், செந்தாமரையும்
ஆராய்ந்து தேடி, காதல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.

    கதைமாந்தர் மாறி மாறிப் பேசுவது போல் செந்தாமரை
நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கதை நிகழ்ச்சிகள்
நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று இன்னொரு பாத்திரம்
பேசுவது போல் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே
கதை ஓட்டம் நெகிழ்ச்சி அடைகிறது.

    மு. வரதராசனாரின் மற்றொரு நாவல் கரித்துண்டு.
இந்நாவலின் கதைத் தலைவர் ஓவியர் மோகன் ; கதைத்
தலைவி நிர்மலா, இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கின்றனர். மோகன் விபத்துக்கு உள்ளாகவே கணவன்
மனைவி இருவரும் பிரிகின்றனர். நிர்மலா பம்பாய் சென்று
கமலக்கண்ணன் என்பவரைச் சந்திக்கிறாள். அவரோடு சேர்ந்து
வாழ்கிறாள். சென்னை வரும் போது தன் கணவன் மோகனைக்
காண நேரிடுகிறது. கமலக்கண்ணனை விட்டுப் பிரிகிறாள்.

    சென்னையில் ஓவியர் மோகன் முடவராய் வாழ்கிறார்.
வண்ணப் பொடிகளாலும், ஓவியக் கோலாலும் ஓவியம் தீட்டிய
மோகன், கடைசியில் கரித்துண்டால் ஓவியம் தீட்டும்
நிலைக்குத் தள்ளப்படுகிறார். சின்னக் குடிசையில் ஏழைப்
பொன்னியுடன்     வாழ்க்கை     நடத்துகிறார். அவரிடம்
இருந்த படிப்பின் செருக்கு மறைகின்றது.

    கதைத் தலைவன் மோகன் ஓவியம் தீட்டுவதில் இருந்து
தொடங்கிப் பின்னர்த் தன் வாயாலேயே தன் கதையைக் கூறி
வருவதாகக் கதை செல்கிறது. இதில் அமையும் நிகழ்ச்சிகள்,
இடையில் தொடங்கி, பின்னோக்கிச் சென்று மீண்டும்
முன்னோக்கிச் செல்கின்றன. மேலும்     இடையிடையே
அறிவுரைகளும்     மு. வரதராசனாரால் கூறப்படுகின்றன.
இவ்வாறு கதை ஓட்டம் தடைப்பட்டு தடைப்பட்டு
நெகிழ்வடைந்து மாறி மாறி வருகின்றது. எனவே இந்நாவலும்
நெகிழ்ச்சிக் கதைப் பின்னலுக்குச் சான்றாகின்றது.

    கட்டுக்கோப்புடன் விளங்கி, காரணகாரியத் தொடர்புடன்
முழுமையான தன்மை உடையது செறிவான கதைப்
பின்னலாகும். நாடக முறையில் விறுவிறுப்புடன் அமைந்த
நாவல்களில் செறிவுக் கதைப் பின்னல்களைக் காணலாம்.

    செறிவுக் கதைப்பின்னலில் கதை ஒரே தொடர்ச்சியாக
அமையும். ஒன்றற்கு ஒன்று தொடர்புடையதாகவும், ஒன்றில்
இருந்து ஏதேனும் ஒரு பகுதி கிளைத்துத் தோன்றியது
போலவும் தோன்றும். இந்த நிகழ்வு, இவ்விடத்தில்
இல்லையென்றால் கதை சிறக்காது என்று வாசகன்
சொல்லுகின்ற அளவிற்குப் பிரிக்க முடியாத நிலையில்
நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு
அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அமையும். ஜெயகாந்தன்,
எம்.வி. வெங்கட்ராம்
போன்றோரின் நாவல்களில் செறிவுக்
கதைப்பின்னலைக் காணலாம்.

    ஜெயகாந்தன்     அறுபதுகளில்     எழுதிய
அக்கினிப்பிரவேசம்
என்னும் சிறு கதையின் தொடர்ச்சியாக
வந்தது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவல்;
அதன் தொடர்ச்சியாக வந்தது, கங்கை எங்கே போகிறாள்
என்ற நாவலாகும்.

    கல்லூரி வாயிலில் மழைக்கு ஒதுங்கிப் பேருந்துக்குக் காத்து
நின்ற கங்கா, காரில் அழைத்துக் சென்றவனிடம் ஏமாந்து தன்
கற்பைப் பறிகொடுக்கிறாள். தன் அம்மாவிடம் வந்து
அழுகிறாள். அம்மா, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி,
உடலும் உள்ளமும் தூய்மையாகிவிட்டதாகக் கூறுவதோடு
அக்கினிப் பிரவேசம் சிறுகதை முடிக்கப் பெறுகிறது.

    பின்னால், இக்கதை தன்னிடம்வந்து அழுத பெண்ணைத்
தாயே அடித்துத் திட்டி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துச்
செய்தியை வெளியே பரப்பிவிட, கங்காவின் வாழ்க்கைப்
பயணம் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பில்
நாவல் ஆக்கப்பட்டது. கங்கா தன்னைக் கெடுத்த பிரபுவைத்
தேடிக்கண்டு பிடிக்கிறாள். ஆனால் அவன் மணமாகிக்
குடும்பத்துடன் வாழ்கிறான்.     கங்காவிற்கு     நேர்ந்த
களங்கத்திற்குத் தான் காரணமான குற்றத்திற்கு பிரபு
வருந்துகிறான். அவளுடன் நட்புடன் பழகுகிறான். இந்தப்
புதிய உறவு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

     எனவே பிரபு அவளுக்குத் திருமணம் நடந்தால் நல்லது
என நினைக்கிறான். அவளை விட்டு விலகிச் செல்கிறான்.
ஆனால் திருமணத்திற்கு உடன்படாமல் தனிமையில் நிற்கும்
கங்கா குடிப்பழக்கத்துக்கு ஆட்படுகிறாள். சில நேரங்களில் சில
மனிதர்கள் நாவல் இத்துடன் முடிவடைந்தாலும், கங்கா
இதற்குப் பிறகு என்ன ஆனாள் என வாசகர்கள் அறிந்து
கொள்வதற்காக கங்கை எங்கே போகிறாள்? என்ற நாவல்
எழுதப்பட்டது.

    இந்த இரு நாவல்களிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவும்
அடுத்த நிகழ்ச்சி தொடங்குவதற்குக் காரணமாக அமைகின்றன.
செறிவுக் கதைப் பின்னலுக்கு இது சிறந்த எடுத்துககாட்டு
ஆகும்

    எம். வி. வெங்கட்ராமின் காதுகள் என்ற நாவலில்
கதைத்தலைவன் மகாலிங்கம். மகாலிங்கத்தின் காதுகளில் ஒரு
விசித்திரமான பிரச்சனை. இரு காதுகளிலும் இரண்டு பேர்
அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.
இதனால் அவனால்     எதிலும் முழுமையாக ஈடுபட
முடியவில்லை. பொருளாதாரச்     சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்தடுத்துத் துன்பங்கள், என இந்நிகழ்ச்சிகள் வரிசையாகச்
செறிவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்நாவலும் செறிவான கதைப் பின்னலுக்குச்
சான்றாகும்.