4.1 நாவல் உருவாக்கம்

    ஒரு நாவல் எப்படி எழுதுவது என்று யாரும், யாருக்கும்
கற்றுக் கொடுக்க இயலாது. எவ்வாறு நன்றாக எழுதலாம் என்று
வேண்டுமானால் கற்றுக் கொடுக்கலாம். எப்படிக் கதையைக்
கொண்டு செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று கற்றுக்
கொடுக்கலாம். நாவல் எழுதுவதற்கான எளிய, சுருக்கமான
வழியைக் கூறலாம். நாவல் எழுதுவதற்கு உரிய காலத்தைக்
குறைப்பதற்குச் சில     செயல்     திறன்களைக் கற்றுக்
கொடுக்க முடியும்.

    எல்லாருக்கும் படைப்பாற்றல் திறன் உண்டு. ஆனாலும்
படைக்கும் ஊக்கமும் முயற்சியும் தானாக உருவாக வேண்டுமே
அன்றி அடுத்தவர் உருவாக்கித் தர இயலாது.

    நாவல் உருவாக்கத்தில் நாவலாசிரியனின் உள்ளம் மிகப்
பெரும் பங்கு வகிக்கிறது. நாவலாசிரியனின் மனநிலைதான் ஒரு
நாவலின் கதைப் போக்கை நிர்ணயம் செய்கிறது. நாவலில்
வரும் கதைமாந்தருள் ஒருவராக நாவலாசிரியரும் சில
நாவல்களில் இருப்பார். தம்மை நாவலுக்குள் ஒரு பாத்திரமாக
மாற்றிக் கதையை எழுதும் நாவலாசிரியர் தன் மனநிலையை
நாவலில் காட்டுவார். இதுவே நாவல் உருவாக்கத்தில் அகச்
சூழல் ஆகும்.

    எம்.வி.வெங்கட்ராம் தம்முடைய காதுகள் நாவலில்
தமக்கு உண்மையிலேயே ஏற்பட்ட ஓர் அனுபவத்தை
அப்படியே நாவலாக மாற்றி அமைத்து விட்டதாகக் கூறுவார்.
அந்நாவலின் கதைத் தலைவன் மகாலிங்கம் என்பவன் வேறு
ஒரு கற்பனைப் பாத்திரமில்லை; தாமே என்பதை அவரே
ஒத்துக் கொள்கிறார்.

    எனவே, நாவல் எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும்
நாவலில் பெரும்பாலும் தம் அகப் போராட்டங்களை
அடிப்படையாகக் கொண்டே எழுதுகின்றனர்.

    நாவலை எழுதும் போது வெளியில் இருந்து கதை
சொல்வது போல நாவலாசிரியர் கூறினாலும் தம் மனப்
போராட்டங்களை, அக எழுச்சிகளை நாவலில் பதித்து
விடுவார். படைப்பாளன் பற்றிப் பிராய்டு கீழ்க்கண்டவாறு
கூறுகிறார்:

    “நரம்பு நோயாளியைப் போன்று கலைஞனும் திருப்தி
தராத யதார்த்தத்திலிருந்து கற்பனை உலகில் தஞ்சம் புகுந்து
கொள்கிறான்.”

  • அனுபவத்தைப் பகிர்தல்
  •     ஏதோ ஒரு சூழலில் அல்லது சந்தர்ப்பத்தில் ஓர் அனுபவம்
    படைப்பாளிக்குக்     கிடைத்து     விடுகிறது. மேலும்
    அவ்வனுபவத்தை அடுத்தவருக்குச் சொன்னால்தான் மனத்தில்
    நிம்மதி ஏற்படும் போல் தோன்றுகின்றது. அவ்வனுபவத்தைச்
    சற்றுக் கற்பனை சேர்த்து உணர்ச்சியுடன் வடிவம் கொடுக்க
    அவனது ஆழ்மனம் ஆணையிடுகிறது. அந்த ஆணையை
    அடுத்து அவன் கையில் பேனாவுடன் தாளை எடுக்கிறான்.
    எழுதத் தொடங்குகின்றான். அனுபவம் கதையாகின்றது.
    தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பெயரை
    மாற்றிக் கதை மாந்தர்களாக     மாற்றுகிறான். நடந்த
    நிகழ்வுகளைப் பொய்ப் பெயருடன் ஒரு கதையாக, நாவலாக
    உருவாக்குகின்றான். நாவல் வளருகின்றது. நாவல் எழுதும்
    போது அவன் மனத்தின் ஆழத்தில் சொல்ல நினைத்த
    செய்திகள் மெல்ல மெல்ல எழுத்து வடிவம் பெறுகின்றன.
    சொற்களாக,     சொற்றொடர்களாக     உருமாறுகின்றன.
    அச்சொற்றொடர்கள் பாத்திரங்களின் உரையாடல்களாகவும்,
    உரையாடல் வழிக் கதை நிகழ்வுகளாகவும் மாறுகின்றன.
    ஒவ்வொரு நிகழ்வாகப் படைப்பாளி உருவாக்குகின்றான்.
    நிகழ்வு சிறிது உண்மையாக     இருக்கலாம். சிறிது
    கற்பனையாகவும் இருக்கலாம். கதையின் சுவைக்காகக்
    கற்பனைச் செய்திகளை ஒழுங்குபடுத்திக் கதையாக்குகின்றான்
    படைப்பாளன்.

        படைப்பாளன் நாவலைப் படைக்கும் போது, அவனுக்கு
    அகத்     தூண்டுதல்     போலப்     புறத்தூண்டுதலும்
    தேவைப்படுகின்றது.

  • கூர்ந்து கவனித்தலும் கதைமாந்தரும்
  •     பிறரைக் கூர்ந்து கவனிக்கும் போது அவரின் நடவடிக்கை,
    செயல்பாடுகள், உரையாடும் தன்மை, அடுத்தவருக்கு உதவும்
    மனப்பான்மை அல்லது அடுத்தவரைக் கெடுக்கும் செயல்கள்
    எனப் பலவும் படைப்பாளனை வித்தியாசமாகச் சிந்திக்க
    வைக்கின்றன. இந்த மனிதரைத் தன் நாவலில் எப்படியாவது
    ஒரு பாத்திரமாக உருவாக்கி விடுவான்.

  • சமூக நிகழ்வுகள்
  •     படைப்பாளன் சமூகத்தை உற்று நோக்குகிறான். சமூக
    நிகழ்வுகள் அவனைப் பாதிக்கின்றன. அந்நிகழ்வுகளை
    நாவலில், கதை நிகழ்வில் பயன்படுத்திக் கொள்கிறான்.

        சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடு, சாதிய வேறுபாடு,
    மத வேறுபாடு, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை,
    சமூகச் சிக்கல்கள் ஆகியவை புறச்சூழல்களாக நின்று நாவல்படைப்பதற்குத் துணை நிற்கின்றன.

  • சுய அனுபவம்
  •     வறுமையின் துன்பத்தில் உள்ள படைப்பாளி, தான்
    அனுபவிக்கும் வறுமைத் துன்பத்தை நாவலில் முழுமையாகக்
    காட்ட முடியும். செல்வச் செழிப்பில், பிறந்தது முதல் வாழும்
    ஒரு படைப்பாளி, வறுமைச் சூழலை முழுமையாக நாவலில்
    படைக்க முடியாது.

        எம்.வி.வெங்கட்ராம், தான் எழுதிய ஏழு நாவல்களில்
    இரண்டு ஆன்மிக நாவல்கள், ஒன்று புராண இதிகாச நாவல்,
    பிற நான்கு நாவல்களில் வறுமையின் பெருந்துன்பத்தை
    வெளிப்படுத்தியுள்ளார். காதுகள் எனும் நாவலின் கதைத்
    தலைவன் மகாலிங்கம், வேள்வித் தீ என்னும் நாவலில்
    கண்ணன் என்ற பாத்திரம், அரும்பு எனும் நாவலில்
    வாத்தியார் ராமசாமி எனும் பாத்திரப் படைப்பு, ஒரு பெண்
    போராடுகிறாள்
    என்பதில் ஜஸ்மா ஆகியோர் வறுமையின்
    எல்லைக்     கோட்டைப்     பார்த்தவர்களாகவே
    படைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடிப்படைக் காரணம்
    நாவலாசிரியர் வறுமையை முழுமையாக அனுபவித்தவர். அவர்
    வாழ்ந்த புறச்சூழலை நாவல்களில் படைப்பது அவருக்குச்
    சுலபமாக இருந்தது.

        சாதி ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படுத்தும் நாவலாகப்
    பாமாவின் கருக்கு எனும் நாவல் காணப்படுகிறது.
    பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பெண்
    எழுத்தாளர்கள் பலர் ஆழமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

        எனவே, புறச்சூழலில் தான் கண்ட, அனுபவித்த சுவையான
    செய்திகளை, சமூகப் பிரச்சனைகளை நாவலில் எடுத்து
    எழுதுதல் நாவல் படைப்பாளிக்கு உகந்ததாக இருக்கும்.

    4.1.3 நாவல் உருவாக்கத்தில் கதைக்கரு
    தேர்ந்தெடுத்தல்

        நாவல் எழுத மிக அடிப்படையானது நாவலின்
    கதைக்கருதான். கதைக்கருவை மனத்தில் பல நாட்கள், பல
    மாதங்கள் சுமந்து அதனை மனத்துள் விரிவுபடுத்தி நாவலை
    எழுதத் தொடங்குவது படைப்பாளியின் இயல்பாகும்.

        “மலரில் கலந்த மணம் போன்று கருவானது நாவலின்
    ஊடே பரவிக்கிடக்கும் ஒன்று. வெளியில் அப்பட்டமாகத்
    தெரியக் கூடாது. சிந்திக்கச் சிந்திக்கப் புலனாக வேண்டும்”
    என்று எழுத்தாளர் அகிலன் கூறுகிறார்.

        நாவல் உருவாக்கத்தில்     ஒரு     கதைக் கருவை
    அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

        தி.ஜானகிராமனின் மோகமுள் எனும் நாவலில் தன்னை
    விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் மேல் ஓர் இளைஞன்
    தன்னையறியாமல் கொண்டு விட்ட மோகமே கதைக்கருவாக
    அமைவதைக் காணலாம்.

        நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள் என்ற தம்
    நாவலுக்கு வர்க்க     வேறுபாட்டினை அடிப்படையான,
    கதைக்கருவாகக்     கொள்கிறார்.     ஏழை,     பணக்கார
    வர்க்கத்திற்கிடையே ஒரு திருமணத்தை நிகழ்த்தி, இரண்டு
    வர்க்கமும் எவ்வாறு ஒருங்கிணையும் அல்லது மோதிக்
    கொள்ளும்     என்பதை     யதார்த்தமாகச்     சொல்ல
    விழைந்திருக்கிறார். கதைக் கருவைத் தேர்ந்தெடுக்கும் போது
    வேறுபட்ட வர்க்கங்களின் மோதல் என்ற அளவிலே நாஞ்சில்
    நாடன் தேர்ந்தெடுத்தது நாவலின் வெற்றிக்குத் துணை
    நிற்கிறது.

        நாவலில், ஒரே ஒரு கதைக்கரு தான் இருக்க வேண்டும்
    என்பது இல்லை. ஒரே ஒரு கதைக் கருவையோ அல்லது பல
    கருக்களையோ கொண்டு நாவலை அமைக்கலாம்.

        ஒரு நாவலின் கதைக் கரு என்பது கதைத் தலைவனை
    அடிப்படையாகக் கொண்டோ தலைவியை அடிப்படையாகக்
    கொண்டோ உருவாகலாம். தலைவனோ, தலைவியோ வாழ்வில்
    சந்திக்கும் அனைத்துப் போராட்டங்களையும் சிக்கல்களையும்
    எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்     என்பதைக் கருவாக்கி
    எழுதலாம். தலைவன் பெரும்பங்கு கொள்ளும் போராட்டங்கள்
    எந்தச் சமூக மாற்றம் ஏற்பட்ட காலத்தில் எழுந்தன என்று
    விவரிக்கலாம்.

        எம்.வி.வெங்கட்ராமின் ஒரு பெண் போராடுகிறாள் எனும்
    நாவலின் கதைத் தலைவன் டீகம். மண்வெட்டிப் பிழைக்கும்
    ஒரு எளிய கூலித் தொழிலாளி. பிற தொழிலாளர்கள்
    குடித்துவிட்டுப் போடும் கும்மாளங்களில் அவன் பங்கு
    கொள்வதில்லை. தன் மனைவி ஜஸ்மாவைத் தவிர அவன்
    உள்ளம் வேறு     ஒரு பெண்ணை எண்ணிக்கூடப்
    பார்த்ததில்லை. பேரழகியான     சௌதாமினி, அழகுப்
    பெண்ணாகிய சம்பா ஆகியோர் அவனை அடைய முயன்று
    தோற்கின்றனர். அவனுக்கு     ஜஸ்மாவை மட்டும்தான்
    பெண்ணாகத் தெரியும். ஜஸ்மாவுக்கு அவனை மட்டும்தான்
    ஆணாகத் தெரியும். ஜஸ்மாவை எப்படியாவது அடைய அரசன்
    செய்யும் சூழ்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.

        சமூகப் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள்
    அண்மைக் காலத்தில் நிறைய தோன்றுகின்றன. சமூக
    அமைப்பின் அடிப்படையை இவை சுட்டிக் காட்டும்.
    குறிப்பிட்ட நாவலாசிரியர்கள் தாம் வாழ்ந்த காலச் சமூகத்தை
    உன்னிப்பாகப் படம் பிடிப்பார்கள். தஞ்சாவூர் மாவட்ட
    வாழ்வியல் சூழலை தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா
    வந்தாள்
    ஆகியவை சுட்டுகின்றன. சௌராட்டிர இன
    மக்களின்     வாழ்வியல்     போராட்டங்களை
    எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித் தீ என்ற நாவல்
    காட்டுகிறது.

        அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நாவல்கள்
    எடுத்துரைக்கின்றன. காந்தியத்தைப் போற்றியும் விமர்சித்தும்
    கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி
    போன்றோர் நாவல்களை
    எழுதியுள்ளனர்.

        கதைக் கருவிற்குச் சமூகப் பிரச்சனையை முன் நிறுத்தும்
    இக்காலச் சூழலில் புராண,     இதிகாசக் கதைகளை
    மீட்டுருவாக்கம் செய்யும் செயலில் பல படைப்பாளிகள்
    இறங்கியுள்ளனர். மகாபாரதக் கதையை அடிப்படையாகக்
    கொண்டு எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம் என்ற
    நாவலை எழுதியுள்ளார். இது தற்காலத்தில் மிகப் பெரிய
    வெற்றி பெற்ற நாவலாகும்.

        கதையின் மையக் கருத்தாக அமையும் கதைக்கருதான்
    நாவலின் வெற்றிக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது.