4.3 உத்திகள்

    நாவல் எழுதும்போது பல்வேறு வகையான உத்திகளைக்
கையாளுகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை கதை கூறும்
உத்தியும், நனவோடை உத்தியுமாகும்.

    நாவலில் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாகும்.
பழைய காலத்தில் கதை கூறுதல் என்பது ‘ஒரே ஒரு ஊரிலே’
என்று தொடங்கும். கதையில் வரும் நிகழ்ச்சியினை
வரிசைப்படுத்தி சுவைபடக் கூறுவது வழக்கம். இந்தக் கதை
கூறும் முறை சில காலங்களுக்கு வெற்றிகரமாக நிகழ்ந்தது.
பிறகு இந்த முறைக்குச் சலிப்பு ஏற்பட்ட பொழுது புதிய
முறைகளை எழுத்தாளர்கள் கையாளத் தொடங்கினர்.

    கதை நல்ல முறையில் எழுதப்படவும், வாசகர்களைக்
கதைக்குள் முழுமையாகக் கவர்ந்திழுக்கவும் சில உத்திகளை
நாவலாசிரியர் பின்பற்றுவர். அந்த உத்திகளுக்குக் கதை
கூறும் உத்தி
என்று பெயர். இதனைக் கதை கூறும் முறை
என்றும் கூறுவர்.

    கதை கூறும் முறையை

(1) ஆசிரியரே கதை கூறல்
(2) கதை மாந்தர் கதை கூறல்
(3) கடிதங்கள் மூலம் கதை கூறல்

என்று பிரிக்கலாம்.

  • ஆசிரியரே கதை கூறல்
  •     ஆசிரியரே கதை கூறும் முறையை எடுத்துரை உத்தி
    என்றும் கூறுவர். அதாவது ஆசிரியர் கதையைத் தானே
    எடுத்துரைக்கும் முறையில் கதை கூறுவது ஆகும். ஆசிரியர்
    தனியே படர்க்கை நிலையில் நின்று தான் ஒவ்வொரு
    நிகழ்வையும் அருகே இருந்து பார்ப்பது போல் கதையைக்
    கூறிச் சொல்லும் முறை. கதையை ஒருவர் சொல்ல
    இன்னொருவர் கேட்பது போல இம்முறை இருக்கும்.
    எழுத்தாளர் கதை கூறுபவர்; வாசகர் கதையைக் கேட்பவர்.
    தமிழில் பெரும்பாலான நாவல்கள் இம்முறையில் அமைந்தவை.
    இவ்வாறு கதையைக் கூறிச் செல்வதில் கல்கி மிகச் சிறந்தவர்
    ஆவார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின்
    சபதம்
    போன்ற நாவல்கள் இம்முறையில் புகழ் பெற்றவை.
    நாவல் எழுதும் படைப்பாளி இந்த முறையில் எழுதினால் தான்
    சொல்ல நினைக்கும் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் விடாமல்
    மிகச் சிறப்பாக வருணிக்கலாம்.

  • கதைமாந்தர் கதை கூறல்
  •     நாவலில் வருகின்ற தலைமை மாந்தர்கள், இன்றியமையா
    மாந்தர்கள் ஆகியோர் தாம் அனுபவித்த, தாம் கண்ட
    நிகழ்வுகளை ஒரு செய்தியாகக் கூறி வருவர். பாத்திரத்தின்
    பெயரைத் தலைப்பாகக் கொண்டு அந்தந்த அத்தியாயம்
    தொடங்கும். தலைப்பாக இருக்கும் பாத்திரம் தானே தன்னை
    ‘நான்’ எனக் கூறிக்கொண்டு கதையைச் சொல்லத் தொடங்கும்.
    அப்படிக் கூறுவதால் நாவலாசிரியனின் இடையீடு இருக்காது.
    நாவலின் சம்பவங்களைக் கூறும்போது கதை சொல்லும்
    பாத்திரம் தான் கண்ட, கேட்ட அனுபவித்த செய்திகளை
    மட்டும்தான் கூற முடியும். இன்னொரு பாத்திரம் தான் கண்ட,
    கேட்ட, அனுபவித்த செய்திகளைக் கூறும். இவற்றை
    இணைத்துக் கொண்டு கதை அமையும். இவ்வாறு, நாவல்களை
    எழுதிப் பார்த்தவர்களிலே மு.வரதராசனார் முக்கியமானவர்.

        கதையில் வரும் ஒரு பாத்திரம் மட்டுமே கதை கூறுவதாக
    நிறைய நாவல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் முதல் நாவலான
    பிரதாப முதலியார் சரித்திரம்
    நாவலில் கதைத் தலைவரான
    பிரதாப முதலியாரே
    கதையைக் கூறிச் செல்கிறார்.

        மு.வரதராசனாரின் அகல்விளக்கு நாவலில் வேலன்
    என்ற ஒரு பாத்திரமே கதை முழுவதையும் சொல்கிறது.
    மு.வரதராசனாரி
    ன் மற்றுமொரு நாவலாகிய வாடாமலர்
    நாவலில் குழந்தைவேல் என்ற கதைத் தலைவனே சதை
    முழுவதையும் கூறுகிறான்.

        இவ்வாறு, கதை மாந்தரே கதை கூறுவதால் கதை
    நிகழ்வுகளில் சில நேரங்களில் சலிப்பு ஏற்படுவதும் உண்டு.

  • கடிதம் மூலம் கதை கூறல்
  •     கடிதம் மூலம் கதை கூறல் என்பது ஒரு வேறுபட்ட
    உத்தியாகும். இம்முறையில் பாத்திரங்கள் தமக்குள் எழுதும்
    கடிதங்கள் மூலம் கதை நகரத் தொடங்கும்.

        தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலையடிகள்
    இந்த உத்திமுறையில் கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற
    நாவலை எழுதினார். இந்நாவலில் பதினேழு கடிதங்கள்
    உள்ளன. மனித இயல்பை ஆசிரியர் பாத்திரங்களுக்கிடையே
    கடிதங்களின் மூலம் எழுதியுள்ளார்.

        கோகிலாம்பாள்     கடிதங்கள்     எனும்     நாவல்,
    கோகிலாம்பாள் தன் தலைவனுக்கு எழுதிய கடிதங்கள்
    வாயிலாகக் கதை சொல்கிறது. தன்மை முறையில் கூறப்படும்
    நாவலைப் போல இம்முறையும் தன்மை முறையிலேயே
    அமையும்.

        பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, ராஜி என்ற தன்
    நாவலில் கதைத் தலைவன் நாணு கதைத் தலைவி ராஜிக்கு
    எழுதும் கடிதங்களும் கடிதம் மூலம் கதை கூறும் உத்திக்குச்
    சான்றாகும்.

        இம்முறை சமீப காலங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்
    படுவதில்லை.

        நனவோடை உத்தி என்பது முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைப்
    பாத்திரங்கள் மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு கதையை
    எழுதுவதாகும்.     பாத்திரங்களின்     அனுபவங்களை
    அப்பாத்திரங்களே எண்ணிப் பார்க்குமாறு அமைத்துக்
    கொள்வதாகும். மேலை நாட்டினரிடம் இருந்து கடன்
    வாங்கப்பட்ட இந்த உத்தி முறை தமிழில் மிகப் பெரும்
    எழுத்தாளர்களால் பயன்படுத்தப் பட்டது.

        நனவோடை முறையில் கதையைக் கூறும் போது சில
    பிரச்சனைகளும் ஏற்படலாம். கதை நிகழ்வுகள் ஒன்றோடு
    ஒன்று தொடர்பின்றி இருப்பது     போல் தோன்றும்.
    மொழிநடையும் புதிதாகவும், புரியததாகவும் இருக்கும்.

        தமிழில் லா.சா.ராமாமிர்தம் தனது அபிதா எனும்
    நாவலில்     இவ்வுத்தியைப்     பயன்படுத்தியுள்ளார்.
    நீல.பத்மநாபனின் உறவுகள்
    என்ற நாவலும் இவ்வுத்தியில்
    எழுதப்பட்டது.

        இந்த முறையில் நாவல் எழுதத் தொடக்க கால
    எழுத்தாளர்கள் அளவுக்கதிகமான முயற்சி செய்ய வேண்டும்.
    இம்முறை நாவல்கள் உரைநடைக் கவிதையாய் வளர்ந்து,
    முடியும் என்பார் எழில் முதல்வன். மேலும், அவர்
    கூறுகிறார்,

    “கடந்த காலம் என்பது முடிந்து போன ஒன்று.
    வருங்காலம் என்பது நம்மால் புரிந்து கொள்ள
    முடியாதது. எனவே நிஜமாக     எஞ்சி நிற்பது
    நிகழ்பொழுது மட்டுமே. ஆதலின் நிகழ்கணத்தில்
    நித்தியத்தின் விஸ்வரூபத்தைத் தேடிக் காண்பதே
    வாழ்க்கையின் இலட்சியம் என     நனவோடை
    நாவலாசிரியர்கள் கருதுகின்றனர்.”