|
நாவலின் பகுதிகள் என்பவை நாவலின் தொடக்கம் முதல்
முடிவு வரை உள்ள அனைத்துப் பிரிவுகளையும்
உள்ளடக்கியவை ஆகும். நாவல் சுவைபட எழுதுவதற்கும்,
நாவல் கதை ஓட்டம் மாறுபடாமல்
அமைவதற்கும் நாவலின்
பகுதிகள் பயன்படுகின்றன. நாவலின் பகுதிகளாகக்
கீழ்க்கண்டவைகளை
நாம் கொள்ளலாம்.
| (1) |
நாவலின் தொடக்கம் |
| (2) |
நாவலின் வளர்ச்சி |
| (3) |
நாவலின் உச்சநிலை |
| (4) |
நாவலின் புடைபெயர்வு |
| (5) |
நாவலின் முடிவு |
நாவல் என்ற ஓர் இலக்கிய மரபு
உருவாவதற்கு முன்னால்
நம்மிடையே இருந்த மரபுக்கதைகளின் தொடக்கத்திலிருந்து
ஒரு நாவலின்
தொடக்கம்
மாறுபட்டதாக இருக்கவேண்டும்.
பழைய
வாய்மொழிக்கதைகள் ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘ஒரு
ஊரிலே’
என்று
தொடங்கும். நாவலை அவ்வாறு
தொடங்கினால்
நாவல் சுவைக்காது. கதையின்
கருத்தை
இரண்டு மூன்று
அத்தியாயங்கள் கழிந்த பிறகு
காட்டலாம். முதல் ஓரிரு அத்தியாயங்களில்
கதை நிகழும் ஊரின்
பின்னணி, கதை நிகழும் காலச் சூழல்
ஆகியவற்றை
விளக்கலாம். பிறகு, கதையை எந்த உத்தியில் தொடங்கினால்
நன்றாய் இருக்குமோ அந்த உத்தியில் தொடங்கிச் சுவைபடச்
சொல்ல வேண்டும். கல்கியின் பொன்னியின் செல்வன்
நாவலின் தொடக்கம்
ஒரு நல்ல நாவலின் தொடக்கம் எப்படியிருக்க வேண்டும்
என்பதற்குச் சான்றாக,
“ஆதியும் அந்தமுமில்லாத கால
வெள்ளத்தில் கற்பனை
ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம்
பிரயாணம்
செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு
நூற்றாண்டு வீதம் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து
எண்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச்
செல்வோமாக.” |
என அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நம்மை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
இராசராச சோழன் இளைஞனாக இருந்த
காலத்திற்கு
அழைத்துச் செல்கிறார். கல்கிக்குப் பின் வந்த நாவலாசிரியர்
சிலர் நேரடியாகக் கதையைத் தொடங்கும் உத்தியையும்
கையாண்டனர். மோகமுள் நாவலைத் தி.ஜானகிராமன்,
“அணைக்கரை பஸ்
ஆனையடியைக் கடந்து வந்து
டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து நாற்சந்தியையும்
கடந்து போயிற்று. அவ்வளவுதான். ஏதோ புழுதிப்புயல்
கிளம்பி ஊரையே சூறையாடுவது போலாய் விட்டது.
மேல்துண்டாலும், முந்தானையாலும்
மூக்கையும்,
வாயையும் பொத்திக் கொண்டார்கள். செம்மண் புகாமல்
கண்ணை இடுக்கிக் கொண்டார்கள். உடம்பைச் சுற்றி
போத்தியிருந்த காவிக்கதர் ஐந்து முழத்தால் மூக்கையும்
வாயையும் பொத்தினவாறே விளக்குமாறு பட்ட நாய்
போல ஹ்ரம், ஹ்ரம் என்று
சந்தேகத்தையும்,
அருவருப்பையும் கமறி வெளியே தள்ளினான் பாபு.” |
என்று கதையை நேரடியாகத் தொடங்குகிறார். நவீன
நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்
நெடுங்குருதி நாவலைக் கீழ்க்கண்டவாறு தொடங்குகிறார்.
“ஒரு சாரை
எறும்புகள் ஊரை விட்டு விலகிய
பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்த போது நாகுவிற்குப் பதினொறு
வயது நடந்து கொண்டிருந்தது.” |
இவ்வாறு, நாவலின் தொடக்கம் பல்வேறு முறைகளில்
அமைவதை நாம் பல நாவல்களைப் படிக்கும் போது
உணரலாம். நாம் நாவல் எழுதும் போது நாவலின்
தொடக்கத்தைப் படித்தவுடன் நாவலை வாசகர் தொடர்ந்து
படிக்க விரும்பும் வண்ணம் அமைக்க வேண்டும்.
நாவலின் வளர்ச்சி என்பது கதை தொடங்கி
வளர்ந்து
வரும் நிலையாகும். இயல்பான வளர்ச்சியே நாவலைச் சுவை
குன்றாமல் வளர்க்கும். நாவலின் போக்கு ஓர்
ஆற்றின்
போக்கைப் போல் அமைய வேண்டும். வெறும் கதை மட்டுமே
நாவலாக வளர்ந்து விடாது. ஓர்
அழகியல் சுவையுடன் நிகழ்ச்சிகள் அமைக்கப்
பெற்றுப்
பாத்திரங்களின் செயல்பாடுகளுடன், உரையாடலுடன் நாவல்
எழுதப்பட வேண்டும். கதைப் பின்னல் அமைப்பே நாவலின்
வளர்ச்சியில் மிக
முக்கிய பங்கு வகிக்கும். ஓர் அத்தியாயம் ஒரு நிகழ்வுடன்
தொடங்கி அதே நிகழ்வுடன் முடிந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்த அத்தியாயம் அதே நிகழ்வின் தொடர்ச்சியாகவோ
அல்லது வேறு நிகழ்வின் தொடக்கமாகவோ இருக்கலாம். சில
நேரங்களில் முந்திய அத்தியாயங்களில் தொடர்பற்றுப் போன
கதையை இரண்டு மூன்று அத்தியாயங்கள்
கழித்தும்
தொடங்குவது உண்டு. இதனால் கதை வளர்ச்சி நிலையில்
சுவை பெருகும். ஜெயகாந்தனின் காத்திருந்த ஒருத்தி போல் எனும் நாவலில்,
“பார்வதியம்மாளை மாடிப்படி வரை
வந்து விடை
கொடுத்தனுப்பி விட்டு, படிக்கட்டின் திருப்பத்தில் நின்று
தன்மகன் பிரகாசம் வருகிறானா என்று பார்த்தாள்
அழகம்மாள்.” |
என்று முதல் அத்தியாயம் தொடங்குகின்றது. அத்தியாய
முடிவில்,
“அதன் பிறகு ஒவ்வொரு
பருவத்திலும் வளர்ந்து
வருகின்ற பிரகாசத்தின் வருகைக்காகக் காத்திருப்பதும்....
அழகம்மாளின் வாழ்க்கையே ஒரு காத்திருத்தலாகி
விட்டது...” |
என்று எழுதுகிறார். இரண்டாவது
அத்தியாயத் தொடக்கத்தில்,
“பத்து மணிக்குப் பிரகாசம் வந்தான்.
அவன் பஸ்ஸில்
இருந்து இறங்கும்போதே பார்த்த
அழகம்மாள்
நிம்மதியாய் நிமிர்ந்து நின்றாள்” |
என்கிறார். இதனால் கதையின் வளர்ச்சியில் சுவை கூடுகிறது.
சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை
எனும்
நாவலில் முதல் இரு அத்தியாயங்கள் தாமோதர ஆசான்
என்பவருடன் படைப்பாளிக்கு ஏற்பட்ட நட்பைக் கூறுகிறது.
மூன்றாவது அத்தியாயம் படைப்பாளி, தான்
இவ்வூரில்
புளியமரத்து ஜங்ஷனில் வந்து முதன் முதலில் இறங்கியதில்
தொடங்குகிறது. “எங்கள் குடும்பம் எனது தந்தையின் பூர்வீகக்
கிராமத்தை
விட்டுக் குடி பெயர்ந்து எனது தாயாரின் பிறப்பிடமாகிய
இவ்வூருக்குச் சட்டியும் பெட்டியுமாக வந்து சேர்ந்த போது
எனக்கு இன்னும் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. நாங்கள்
எல்லோரும் புளிய மர ஜங்ஷனில் தான் வந்து இறங்கினோம்.” இவ்வாறு
கதை முன், பின்னாகத் தொடங்குவதும் நாவல்
வளர்ச்சியில் சுவையூட்டும் முறைதான். கதைக்கான சம்பவத்
தொடர்கள் காரண காரியங்களோடு
தொடர்பு படுத்தப்படும் பொழுது நாவல்கள் வளர்கின்றன.
நிகழ்வுகளைச் சங்கிலி வளையங்கள் போலக்
காரண
காரியங்களால் பிணைக்க வேண்டும். அவ்வாறு பிணைத்து,
கதை மாந்தரின் செயல்கள் மூலம் அவர்களிடையே உள்ள
முரண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். மு.வரதராசனார்
தனது அகல்விளக்கு எனும் நாவலில்
பாத்திரங்களின் செயல்கள் மூலம் அவர்களிடையே உள்ள
முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
| சந்திரன் |
- அழகன்; படிப்பாளி,
- ஒழுக்கக்குறைவானவன். |
| வேலு |
- அழகிலும், படிப்பிலும் சுமார். |
| மாலன் |
- மூடநம்பிக்கை உள்ளவன் |
| கற்பகம் |
- பகுத்தறிவு உள்ளவள் |
| மணிமேகலை |
- ஆடம்பரம் விரும்புபவள் |
| அவன் கணவன் |
- ஆடம்பரத்தை விரும்பாதவன் |
இவ்வாறு பல முரண்பாடுகளால் அகல் விளக்கு நாவலில்
பாத்திரங்கள் செயல்படுவதால் நாவல் வளர்கிறது. சில நேரங்களில்
சில மனிதர்கள் எனும் நாவல்
ஜெயகாந்தன் எழுதிய மிகச் சிறந்த நாவல். இந்த நாவலின்
கதை அவர் எழுதிய அக்னி பிரவேசம் எனும் சிறுகதையின்
தொடர் வளர்ச்சியாகும். இதனை ஜெயகாந்தனே
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“எனக்கு இந்த நாவல் அல்ல. இதற்கு அடிப்படையான
அக்னிப் பிரவேசமே உடன்பாடான
கதை.
உடன்பாடான கருத்து உடையதாகும். அதன் முடிவை
எல்லோரும் மாற்றி ஆளுக்கொரு கதை எழுதியதின்
காரணமாக அவர்கள் விரும்புகிற முடிவை ஆரம்பமாக
வைத்து நான் என்னையே மறுத்து அக்னிப்பிரவேச
முடிவை மாற்றினால் வரும் விளைவுகளை நாவலாக
எழுதினேன்.” |
எனவே, ஒரு நாவல்
உருவாகி வளர்வதற்கு ஓர்
அடிப்படை தேவைப்படுகிறது. நாவல் ஓர் உச்ச நிலையை
நோக்கி வளர்ந்து, முடிவை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
நாவல் படைப்பாளன், நாவல் வளர்கின்ற சூழலில்
சிக்கல்களை அதிகப்படுத்திக் கொண்டே சென்று, ஓர் உச்ச
நிலைக்கு நாவலைக் கொண்டு செல்வான்.
நிகழ்ச்சிகள் கதையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு
பகுதிக்கு எளிதாக நிகழ்ச்சிகள் புடைபெயர்ந்து சென்றுசேர
வேண்டும். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத்
திடீர் என்று தாவிச் சென்று விடக் கூடாது. இவ்வாறு கதையை
நகர்த்திக் கொண்டு செல்வதற்குப் புடைபெயர்வு
என்று
பெயர். இந்தப் புடைபெயர்வு தான் நாவலை
மிகச் சிறப்பாகக்
கொண்டு செல்லும். இப்புடைபெயர்வு சரியாக அமையவில்லை
என்றால் நாவல் படிப்பவர்க்குச் சலிப்பூட்டும். உரையாடல்கள்
வழியோ, நாவலின் பாத்திரங்களின்
வழியோ புடைபெயர்வு நிகழ்த்தலாம்.
ஒரு செயல்
நடக்கும்போது, அதற்கான காரணத்தைச் சொல்ல வருகின்ற
ஒரு கதை மாந்தர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு
நிகழ்ச்சிதான் இதற்குக் காரணம் என்று கூறுவார். உடனே
கதையும் பின்னோக்கு உத்தியில் புடைபெயர்வு கொள்ளும். தி.ஜானகிராமனின்
மோகமுள் நாவலில் கல்லூரியில்
படிக்கும் பாபு ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வீணை இசையைக்
கேட்டு மனம் உருகுகின்றான்; உடனே நினைக்கிறான்.
“நாமும் காலத்தையெல்லாம்
இப்படி வீணாக்காமல்
இருந்தால், இந்த சங்கீதத்தை நன்றாகப் பயின்றிருந்தால்”
என்று நினைத்துத் தன் தந்தையைப் பற்றி எண்ணுகிறான். |
கதை அவனின் ஏழு வயதுக்குத் திரும்புகிறது. அந்த
வயதிலேயே அவன் தந்தையுடன் கச்சேரி கேட்கச் சென்ற
செய்திக்குச் செல்கிறது.
ஒரு நாவலில் ஒரே ஒரு சிக்கலோ,
பல சிக்கல்களோ
வளர்ந்து வரக்கூடும். அச்சிக்கல்கள்
மேலும் மேலும்
வலுவடைந்து நாவல், கதையோட்டத்தை
மிகுவிக்கும்.
சிக்கல்கள் மிகுந்து கதைத் தலைவனையோ,
தலைவியையோ
துன்பத்திற்கு ஆளாக்கும். அவ்வாறு மிகுந்த
துன்பம்
நேர்ந்த நிலையே உச்சநிலையாக இருக்கும். இதற்குமேல்
சிக்கல்கள் வர முடியாது என்று நாவல்
படைப்பாளி நினைத்தவுடன் உச்சநிலை
(Climax)
முடிவடையும். பிறகு ஒவ்வொரு சிக்கலாக அவிழத்
தொடங்கும்.
சிக்கல்கள் அவிழ, அவிழ நாவல் படிக்கும்
வாசகருக்கு
நாவலைப் படிப்பதில் சுவை கூடும். எம்.வி.வெங்கட்ராம்
எழுதிய வேள்வித் தீ எனும்
நாவலில் கதைத்தலைவன் கண்ணன், அவன்
மனைவி
கௌசலை ஆகியோரைச் சுற்றி நிகழும் கதை நிகழ்வு, ஹேமா
என்ற பணக்கார இளம் விதவை நுழையும்வரை சாதாரணமாகச்
செல்கிறது. ஹேமா, கண்ணனின் மேல் மோகமுற்றுத்
தன்
பணத்தால் கௌசலையையும், கண்ணனையும் மயக்குகிறாள்.
கௌசலை, ஹேமா, தன் கணவன்மேல் கொண்ட மோகத்தால்
தான் தன்னுடன் அன்புடன் பழகுகிறாள்
என்பதை
அறியாதவள். கண்ணன்
அறிந்தாலும் முதலில்
பணத்தேவைக்காக அவள் நட்பை விரும்பினான்.
பிறகு
அவளையே விரும்பினான். ஒருநாள் கௌசலை வெளியே
போயிருந்த வேளையில்
கண்ணனும், ஹேமாவும் இருந்த நிலையும், அந்நேரத்தில்
கௌசலை வந்துவிட கண்ணனும் ஹேமாவும் மாட்டிக்
கொள்வதும் நிகழ்கிறது. இதுதான் இந்நாவலின் உச்ச நிலை.
கௌசலை கேட்கிறாள். “இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது?” “என்ன
நடந்துட்டுது? எதற்காகக் கத்தறே. பணவிஷயமா
கேக்க வந்தா ; நீ இல்லே ; புறப்பட்டுட்டா. . .” “எனக்கும்
கொஞ்சம் புத்தியிருக்கு. ரெண்டு பேர்
மூஞ்சியிலும்தான் பட்டையா எழுதி வச்சிருக்கே ! ”
இந்த உச்சநிலைதான் கதையை முடிவுக்குக் கொண்டு
வரத்
துணை நிற்கிறது. கௌசலை பொற்றாமரைக் குளத்தில்
தற்கொலை செய்து கொள்வதும், ஹேமா, கண்ணனுடன்
சேருவதுமாகக் கதை முடிவுக்கு வருகிறது.
நாவலின் முடிவு என்பது
உச்சநிலையை அடுத்து
நிகழ்வதாகும். நாவலின் முடிவு இன்ப முடிவாகவோ, துன்ப
முடிவாகவோ இருக்கலாம். நாவலை எப்படி முடித்தால் நன்றாக
இருக்கும் என்று படைப்பாளி சிந்திக்கும் போது, அவன்
மனத்தில் வாசகனுக்கு எத்தகைய முடிவு ஏற்புடையதாக
அமையும் என்று சிந்திப்பான். பெரும்பாலான எழுத்தாளர்கள்
நாவலை முடிக்கும்போதுதான் மிகவும் துன்புறுவார்கள்.
பாத்திரங்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே
என்ற
துன்பம் கூட நிகழலாம். இரண்டு மூன்று ஆண்டு காலம் ஒரு
நாவலை எழுதும் படைப்பாளி, நாவல் பாத்திரங்களோடு
தானும் இணைந்து வாழ்வான். எனவே ஒரே வகுப்பில் சேர்ந்து
படித்த மாணவர்கள் படிப்பு முடித்துப் பிரியும் போது எவ்வாறு
சங்கடப்படுவார்களோ அவ்வாறு சங்கடப்படுதலும் உண்டு. கல்கி
தன்னுடைய சிவகாமியின் சபதம் எனும் நாவலின்
முன்னுரையில் கீழ்வருமாறு கூறுகிறார். “மகேந்திரரும்,
மாமல்லரும், ஆயனரும், சிவகாமியும்,
பரஞ்சோதியும், பார்த்திபனும், விக்ரமனும், குந்தவையும் மற்றும்
பல கதாபாத்திரங்களும் என் நெஞ்சில் இருந்து கீழிறங்கி
போய் வருகிறோம் என்று
அருமையோடு சொல்லி
விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.” நாவல் முடிவில்
மையப் பாத்திரங்கள் தவறாமல் இடம்
பெற வேண்டும். மையப் பாத்திரங்களின் பிரச்சனைகளின்
முடிவே நாவலின் முடிவாகும். இல்லையேல் நாவல் முடிவுக்கு
வராது. தற்காலத்தில் நவீன
எழுத்தாளர்கள் முடிவை
வாசகர்களுக்கே விட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் சில
மனிதர்கள் எனும் நாவல் கங்கா கடைசியில் ஒரு குடிகாரியாக
மாறுவதோடு முடிகிறது. ஜெயகாந்தனுக்குக்
கங்காவை
அப்படியே விட மனம் வராமல் கொஞ்ச காலம் கழித்துக்
கங்கை எங்கே போகிறாள்? என எழுதுகிறார். |