5.1 பாத்திரப் படைப்பின் இன்றியமையாமை

    திருமால் இதுவரை ஒன்பது அவதாரங்களை எடுத்ததாகக்
கதை கூறுவது உண்டு. ஒன்பது அவதாரங்களுக்கும் ஒன்பது
கதைகளும், கதைக்கருவும், கதைப்பின்னலும் உண்டு. அந்த
ஒன்பது அவதாரங்களும்     இராமாவதாரக் கதைக்கு
இணையாகவில்லையே? ஏன்? கதையும், கதைப்பின்னலும்
இருந்தாலும் இராமன், சீதை போன்ற மிகச்சீரிய பாத்திரப்
படைப்பை வால்மீகி     உருவாக்கியது     போல் பிறர்
உருவாக்காததுதான் இதற்குக் காரணம் எனலாம்.

    எனவே, பாத்திரப் படைப்புதான் ஒரு கதையை
உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு அடிப்படையாகும். சோழ
வரலாறு படிக்கும் போது நம்மைப் பாதிக்கும் இராசராச
சோழனை விட, கல்கியின் நாவலில் இடம் பெறும்
பொன்னியின் செல்வன்
நம் மனத்தை மிகவும் கவர்கிறான்.
கல்கியின் இன்னொரு நாவலான சிவகாமியின் சபதத்தில்
இடம் பெறுகிற நரசிம்மன், பல்லவர் வரலாற்றில் இடம்
பெற்றுள்ள நரசிம்ம பல்லவனைவிட நம்மை பாதிக்கிறான்.

    நாவல் பாத்திரங்களின் வாயிலாகத்தான் கதை நிகழ்கிறது.
பாத்திரங்கள் இல்லையேல் கதை இல்லை. கதைப்பின்னல்
இல்லை; நிகழ்ச்சிகள் இல்லை. நாவலின் உயிரோட்டமாக
இருப்பது பாத்திரப் படைப்பே. பாத்திரங்களை மனத்தில்
உருவாக்கிக் கொண்டு, அவற்றிற்காக நாவல்களை எழுதிய
நாவலாசிரியர்கள் இருக்கின்றனர். வங்காள நாவலாசிரியர் சரத்
சந்திரர்.


“நான் முதலில் பாத்திரங்களை முடிவு செய்து கொண்டு,
அவற்றை வரிசையாக எழுதிக் கொள்வேன். பின்னர்
அவற்றைக் கொண்டு ஒரு கதையைத் தொடங்குவதிலோ,
ஒரு கதையின் இன்றியமையாத மாந்தர்களின் பண்பு
நலன்களை உருவாக்குவதிலோ எனக்குச் சிக்கலே
இல்லை”

என்கிறார்.

    மேற்குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் பார்க்கும்
போது, ஒரு நாவலுக்கு முதுகெலும்பாக     இருப்பது
பாத்திரப்படைப்பே, என்பது புலனாகும்.

    நாவல் என்ற இலக்கிய வடிவம் பாத்திரப்படைப்பை
விளக்கவே தோன்றியது என்பதை வர்ஜினியா உல்ஃபு
என்ற நாவலாசிரியரும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“அனைத்து நாவல்களும் பாத்திரங்களோடு தொடர்பு
உடையன என நான் நினைக்கிறேன். அறம்
உரைக்கவோ, பாடல் பாடவோ, ஆங்கில அரசின்
பெருமைகளை விளக்கவோ நாவல் எழுதப்படுவதில்லை.
பாத்திரங்களை உணர்த்தவும் விளக்கவுமே நாவல்
எழுதப்படுகிறது.”

எனவே, ஒரு நாவல் படைப்பாளன் பாத்திரப் படைப்பில்
மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மிகச் சிறந்த நாவல்களில்
வரும் பாத்திரங்கள் நம் கண்முன் நடமாடும் மனிதர்களாகவே
காணப்படுகின்றனர். மா. இராமலிங்கம் தனது நாவல்
இலக்கியம் என்ற நூலில்,

“உலகத்திலுள்ள தலை சிறந்த நாவல்களை எல்லாம்
நாம் நினைக்கிற போது முதலில் நினைவுக்கு வருவது
அந்நாவலின் கருவோ, கதைப்பின்னலோ, பிறவோ
அல்ல; கதை மாந்தர்களே. டால்ஸ்டாயின்
அன்னாவும், பிளாட்பர்டின் பவாரியும், தாகூரின்
கோராவும், தகழியின் கருத்தம்மாவும்
, கல்கியின்
சிவகாமியும்
இப்போது நினைத்தாலும்கூட நம் எதிரே
நிற்பது போன்ற பிரமை உண்டாகிறது அல்லவா?”

என்று கூறுவதைக் காணும்போது நாவலில் இடம் பெறும்
பாத்திரங்கள்தான் நாவலின் உயிர்நாடி எனத்தெரிகிறது.
கருத்துகளைவிடப் பாத்திரங்களையே தொடக்க நிலையாக
எடுத்துக்கொண்டதாக உருசிய எழுத்தாளர் இவான் துர்கா
னேவ்
கூறுகிறார்.

    நாவலாசிரியர்கள் தாம் படைக்கும் பாத்திரங்களை,
நம் மனத்தில் உண்மை மாந்தர்போல் எண்ண வைத்து
விடுகின்றனர். சர்.ஆர்தர் கானன்டாயிலின் ஷெல்லாக் கோம்ஸ்
எனும் பாத்திரத்தைப் போல் தமிழ்வாணன் தம் நாவல்களில்
சங்கர்லால்
என்ற துப்பறிவாளரைக் கதா பாத்திரமாகப்
படைத்தார். காலப்போக்கில் சங்கர்லால் என்று ஒருவர்
இருப்பதாகவே வாசகர்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.

    நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரின் கதைத் தலைவி
பூரணியையும்,
கல்கியின் பொன்னியின் செல்வனின்
வானதியையும், சிவகாமியின் சபதத்தில் சிவகாமியையும்

மறக்கமுடியாத     வாசகர்கள்     தங்கள் பெண்களுக்கு
அப்பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    நாவலில் வரும் பாத்திரங்கள் நாவலோடு மட்டும் முடிந்து
விடுவதில்லை. நாவல் முடிந்தாலும், பாத்திரங்களின் எதிர்காலம்
பற்றி வாசகர்கள்     எண்ணுவார்கள்.     இது பற்றி
எம்.வி. வெங்கட்ராம்
தன்னுடைய அரும்பு எனும் நாவலில்
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்;

“கதையை முடிப்பதால் பாத்திரங்களின் வாழ்க்கை
முடிந்துவிடுமா என்ன? மஞ்சுளா, ஸரஸா, மாதவன்,
நீலகண்டன், பசுபதி முதலியவர்கள் வாசகர்களோடு
நெருங்கிப் பழகிவிட்டவர்கள்; அவர்களுடைய எதிர்கால
வாழ்க்கை எப்படி அமையும்; அவர்கள் எப்படி
அமைத்துக் கொள்வார்கள் என்று ஆர்வம் கொள்ளும்
இரசிகர்களுக்கு     இரண்டாம்     பாகம் முதல்
அத்தியாயத்தை மட்டும் ஆரம்பித்துக் கொடுத்துள்ளேன்.”