6.7 வட்டார நாவல்கள்

    மக்கள் ஒன்றிணைந்து ஒரே மொழியைப் பேசினாலும் தாம்வாழும் பகுதிக்கு என்று ஓர் உச்சரிப்பு முறையையும்,
தனித்த சொல்லமைப்புகளையும் கொண்டது வட்டார மொழி
எனப்படும். இவ்வட்டார மொழியில் எழுதப்படும் நாவல்கள்
வட்டார நாவல்கள் என்று அழைக்கப்பெறும். மொழி நடை
மட்டுமன்றிப்     பழக்கவழக்கங்களும்,     தொழில்களும்
வட்டாரங்களுக்கு என்று தனித்துவம் பெற்று விளங்கும்.
இவையும் நாவல்களின் மூலம் வெளிப்படும்.

    தமிழில் வட்டாரப் பழக்கவழக்கங்களையும், பேச்சு
நடையையும் பின் பற்றி நாவல்கள் எழுதும் வழக்கத்தைத்
தமிழில் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார் எனலாம்.
ராஜம்கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன், கரிப்பு மணிகள்
போன்ற நாவல்கள் வட்டார நாவல்களாக அடையாளம்
காணப்பட்டன. மலை வாழ்     மக்களின் வாழ்க்கையை
அவர்களின் சொல்லாடலுடன், பழக்க வழக்கங்களுடன்
குறிஞ்சித்தேனில்
ராஜம் கிருஷ்ணன் காட்டுகிறார். அதே
போலத் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர் வாழ்வை
அவர்கள் மொழியிலேயே எழுதினார். ப.சிங்காரம், புயலில்
ஒரு தோணி
என்ற நாவலை மலேயாவாழ் தமிழர்
மொழியிலும் செட்டி நாட்டு மொழியிலும் கலந்து எழுதினார்.

    தற்காலத்தில் தமிழ் நாவலின் போக்கில் வட்டார நாவல்கள்
எழுதுவது மிக அதிகமாகியுள்ளது. சின்னப்ப பாரதியின்
சங்கம்
கொல்லிமலை மக்களின் வாழ்க்கையை முழுமையாக
அவர்கள் மொழியிலேயே வெளிப்படுத்தியது.

    பூமணியின் பிறகு, பாமாவின் கருக்கு, சங்கதி
ஆகியவை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களின்
பேச்சுமொழியிலேயே வெளிப்படுத்துகின்றன. தங்கர்பச்சானின்
ஒன்பது ரூபாய் நோட்டு,
கண்மணி குணசேகரனின்
அஞ்சலை
ஆகியவையும் இவ்வகையைச் சார்ந்தவையே.

    சமீப காலத்தில் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி
மக்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற வட்டார நாவலாகும்.
இந்நாவல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மக்கள்
அதிகார வர்க்கத்தின்     அட்டூழியங்களால் எவ்வாறு
பாதிக்கப்பட்டனர் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.