5.1 உரைநடையின் தோற்றம்

ஒரு மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும்
போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும்,
ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ்
மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும்
பொருந்தும். தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே
முந்தியது என்பர். இந்த அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு
வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட
இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே
அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து
உரைநடை எழுந்தது என்பர் அறிஞர். உரைநடை
தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும், உரைநடைக்கும்
பெரிதும் வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
செய்யுளைப் போலவே உரைநடையும் ‘செப்பமாக’ச்
செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினையும்
தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கூறினார்.

தொடக்கக் கால உரைநடையின் தன்மை செய்யுளிலிருந்து
பெரிதும் மாறுபடாத நிலையிலேயே இருந்தது.

5.1.1 தமிழ் பிரமி கல்வெட்டு உரைநடை

தமிழ் பிரமி கல்வெட்டுகள் தொல்காப்பியர் காலத்துக்கு
முற்பட்டன. இவை பெரும்பாலும் சங்க காலத்தைச்
சார்ந்தவை என்பர் கல்வெட்டு அறிஞர்கள். இத்தமிழ்ப் பிரமி
கல்வெட்டுகள் தொன்மைக் கால உரைநடையைப் பற்றி
அறிவதற்குச் சான்றாக உள்ளன. தமிழ் அல்லது பிரமி
கல்வெட்டுகள் என்றழைக்கப்படும் இவை தமிழகத்தில் 19
இடங்களில்     கண்டறியப்பட்டுள்ளன.     அரச்சலூரில்
கிடைத்திருக்கும் பிரமிக் கல்வெட்டு இசை பற்றியதாக
உள்ளது. இதைத் தவிர பிற கல்வெட்டுகள் யாவும் சமணத்
துறவியர்க்குக் கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததையே
குறிப்பிடுகின்றன.     இக்கல்வெட்டுகளின்     உரைநடை
கீழ்க்காணும் விதமாக அமைகின்றது.

காலத்தால் முற்பட்டவை ஒரு வாக்கியமாக அமைகின்றன.
சான்று - ‘வெள்அறை நிகமதோர் கொடி ஓர் (மீனாட்சிபுரக்
கல்வெட்டு)

(பொருள்: வெள்ளறை நிகமத்தை (வணிகக் குழுவைச்)
சேர்ந்தோர்கள் கொடுத்த கற்படுக்கை.)

காலத்தால் பிற்பட்டவை இரண்டு, மூன்று வாக்கியங்களாக
அமைந்துள்ளன.

சான்று - ‘இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி

அரிதன் அத்து வாயி     அரட்ட     காயிபன்

(பொருள் : ஆனைமலை (இபகுன்றம் - ஆனைமலை,
இப - இவ எனத் திரிந்துள்ளது) எரி அரிதன் அத்துவாயி
அரட்ட காயிபன் என்பான் படுக்கை (பா-படுக்கை) அமைத்துத்
தந்தான்.)

இக்கல்வெட்டுக்களில் சொற்றொடர் அமைப்பு, இன்றைய
தமிழ் முறைப்படி அமைந்துள்ளது.

சிறு சிறு வாக்கியங்களாகக் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட
உரைநடை, இன்றைய தமிழ்முறைப்படிச் சொல் தொடர்
அமைப்புப் பெற்ற தன்மையைக் கொண்டுள்ளது.

இலக்கண இலக்கிய உரைநடைகள்.

5.1.2 தொன்மைக் கால உரைநடை

தொன்மைக் காலத்தில் குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு
முந்திய காலத்திலும், தொல்காப்பிய காலத்திலும், சங்க
காலத்திலும் வழங்கப்பட்ட உரைநடையைப் பற்றிப் பார்ப்போம்.

தொல்காப்பியத்துக்கு முந்திய உரைநடை

மூலபாடம், உரைப்பாடம் என்ற பாகுபாடு தொன்மையானது;
இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. செய்யுள்களுக்கு
விளக்கமாக எழுதப்பட்ட உரைகளே உரைநடை வளர்ச்சிக்கு
உதவின. தொல்காப்பிய நூற்பாக்களில் என்ப, என்மனார்,
என்மனார் புலவர்
, நூல்நவில்புலவர் முதலிய சொற்களும்
தொடர்களும் எங்கும் பரந்து கிடக்கின்றன. இவை
தொல்காப்பியத்துக்கு முன்பே புலவர்கள் இருந்து நூல்
எழுதியுள்ளதைக் குறிக்கின்றன. மேலும் உரை பற்றிய
தொல்காப்பியர் கோட்பாடுகள், அவருக்கு     முந்தைய
உரையாசிரியர் நூல்களிலிருந்தும் பெற்றிருக்க வேண்டும்.
ஆகவே தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உரைநூல்களும்,
உரைநடையும் இருந்ததைத் தொல்காப்பிய நூற்பாக்கள்வழி
அறிய முடிகின்றது.

தொல்காப்பியத்துக்கு முன்பே உரை வரலாறு உருவாகி
விட்டது. உரைநடை வளர்ச்சி கண்டது. அதன் தொடக்கம்
தொல்காப்பியத்திற்குச்     சில     நூற்றாண்டுகளுக்காவது
முந்தியதாக இருக்க வேண்டும்.

தொல்காப்பியக் கால உரைநடை

உரை என்பதற்குச் சொல்லுதல் என்று பொருள். ஒன்றைப்
பற்றிச் சொல்லும் போது எவ்வாறெல்லாம் விளக்கிச் சொல்ல
வேண்டுமென்பதே உரையில் சொல்லும் முறையாகும். இவ்வாறு
தோன்றிய உரை பல்வேறு படிநிலைகளைக் கொண்டதாக
அமைந்தது. மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும்
இலக்கண நூல்கள், உரைக்கும் இலக்கணத்தைக் கூறுகின்றன.

தமிழில் தொல்காப்பியம் மிகப் பழமையான இலக்கண
நூலாகும். அத்தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர்
தொல்காப்பியர் எழுதிய உரை பற்றிய செய்திகளே, நமக்கு
அக்கால உரைநடை குறித்து அறிவதற்கு உதவுகின்றன.

தொல்காப்பியர், காண்டிகை என்றும், உரை என்றும்
இருவகை உரை அமைப்புகளைக் காட்டுகின்றார். இவ்விரு
வகை உரை முறைகளும் அவர் காலத்து நிலவிய உரைகூறும்
மரபு என்று கருதலாம்.

தொல்காப்பியர் செய்யுளை ஏழாக வகுத்துக் கூறுகிறார்.
அவற்றுள் ஒன்று, அடிவரையுள்ள செய்யுட்பகுதியாகிய பாட்டு,
மற்றவை அடிவரையில்லாச் செய்யுள் பகுதிகள் ஆறு. அந்த
ஆறனுள் ஒன்றாக உரைநடை வகையைக் கூறி, அதனை
நான்காகக் கூறுவார்.

தொல்காப்பியர் காலத்து உரை பற்றிய செய்திகளே
உரைநடை அக்காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. அவை
நான்கு வகைப்பட்ட உரைநடை இலக்கியங்களாக விளங்கின
என அறியலாம்.

பண்டைக் கால உரைநடை

சங்க இலக்கியச் செய்யுள்களில் கீழ்க்காணப்பெறும் துறை,
திணை விளக்கங்கள் ஆகிய பாடலின் குறிப்புகள்
உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,

நற்றிணையில்,

பொருள் வயிற்பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த

நெஞ்சிற்கு உரைத்தது     (நற்றிணை - 157)

பரிபாடலில்,

காதல் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன்
                தோழியை

வாயில்வேண்ட அவள் புனல் ஆடியவாறு கூறிவாயில்
                மறுத்தது

(பரிபாடல் - 16)

பதிற்றுப்பத்தில்,

‘கலன்அணிக’ என்று அவர்க்கு ஒன்பது காப்பொன்னும்
நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான்
அக்கோ (ஆறாம் பத்து)

சங்க கால உரைநடை, செய்யுள் நடை போல்
செறிவுடையதாகவும், அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும்
உள்ளது. கற்றோர்க்கே எழுதியதாகக் காணப்படுகின்றது.
ஆனால் இந்த உரைநடை அக்காலத்திலோ, அதற்குப் பிந்திய
காலத்திலோ எழுதப் பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும்
உள்ளன.

5.1.3 சிலப்பதிகார உரைநடை

தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய
சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே,

வாழ்த்து வரந்தரு காதையொடு

இவ்வா றைந்தும்

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

என்ற குறிப்பு வருகிறது. ‘உரை பெறு கட்டுரை’,
‘உரைப்பாட்டுமடை’ என்னும் பெயர்களோடு இக்காப்பியத்தில்
இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது. தமிழ்
உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே
காணலாம். இக்காப்பியத்தில்     உரைநடை     இரண்டு
காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

முதலாவது, கதை நிகழ்ச்சிகளை இணைப்பதற்காக,

இரண்டாவது, கதை     நிகழ்ச்சிகளை     விளக்கிக்
காட்டுவதற்காக,

சிலப்பதிகாரக் கால உரைநடைக்குச் சான்றாக கோவலன்
கையிலிருந்து மாதவி யாழ் வாங்கியதை விளக்கும் பகுதியைக்
காணலாம். “ஆங்குக் கானல்     வரிப்பாடல் கேட்ட
மானெடுங்கண் மாதவியும், ‘மன்னும் ஓர் குறிப்புண்டு. இவன்
தன்நிலை மயங்கினான், எனக் கலவியால் மகிழ்ந்தாள் போல்
புலவியால் யாழ்வாங்கித் தானும் ஓர் குறிப்பினள் போல்,
கானல் வரிப்பாடல் - பாணி, நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்
நிலத்தோர் மனம் மகிழ, கலத்தோடு புணர்ந்து அமைந்த
கண்டத்தால் பாடத் தொடங்குமன்.”

சிலப்பதிகாரத்தில் வந்துள்ள இசைத்தமிழ், நாடகத் தமிழ்ப்
பகுதிகளில் உரைப்பகுதி வருவதால், முற்காலத்தில் இசைநாடகத்
தமிழிலேயே     உரைநடை முதன்முதலாகக் கையாளப்
பட்டிருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கட்டுரை காதை என்பதை ஒவ்வொரு காண்டத்தின்
இறுதியிலும் நூலின் இறுதியிலும் காண்கிறோம். சான்றாக,

ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம்
                 முற்றிற்று

செங்குட்டுவனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த

         வஞ்சிக்காண்டம்முற்றிற்று

இவற்றைக் காணும் போது உரைநடை போலவே
காணப்படுகின்றன.

தமிழ்     உரைநடையின்     ஆரம்ப வடிவத்தைச்
சிலப்பதிகாரத்தில்தான் தெளிவாக அறிகிறோம். இசை, நாடகத்
தமிழில்தான்     உரைநடை     முதன்     முதலில்
பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.