5.4 மணிப்பிரவாள உரைநடை

நாலாயிரத் திவ்விய     பிரபந்தம் வைணவர்க்கு
வேதமாகும். வைணவ உரையாசிரியர்கள் இந்நூலுக்கு எழுதிய
உரை மணிப்பிரவாளம் என்று வழங்குகிறது. முத்தும் பவளமும்
கலந்து கோத்த மாலை போல (மணி : முத்து
; பிரவாளம் :
பவளம்) வடசொல்லும் தமிழ்ச் சொல்லும் கலந்து எழுதிய
உரைநடை என்பது பொருள். வைணவ உரையாசிரியர்களின்
வடமொழிப் புலமையும், மோகமும் மணிப்பிரவாள நடை
தோன்றிய காரணங்களில் ஒன்றாகும்.

5.4.1 சிறப்பு தன்மை

நம்மாழ்வாரின் திருவாய் மொழி உரைக்கு முதலில்
மணிப்பிரவாள நடை தோன்றியது. தொடர்ந்து திவ்விய
பிரபந்தம்
முழுவதுக்கும் உரை வகுக்கப்பட்டது.

ஆழ்வார்களின் பாடலுக்கு உரை இயற்றிய வைணவப்
பெரியோர்கள் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம்
உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர்.

வைணவ உரையாசிரியர்களின் உரைநடை பேச்சு நடையில்
அமைந்தது. கொச்சை வார்த்தைகள் நிறைந்தது. கணக்கற்ற
பழமொழிகள், மரபுத் தொடர்கள், நாட்டுப்புறக் கதைகள்
இவர்கள் உரைநடையில் காணலாம்.

திருக்குருகைப் பிரான்பிள்ளான், நஞ்சீயர், நம்பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை,
மணவாள மாமுனிகள் எனப் பலர் மணிப்பிரவாள உரைநடையில்
எழுதினர். இவர்களில் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான
(உரை) சக்கரவர்த்தி
என்றழைக்கப்படுகிறார்.

பெரிய வாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள நடைக்குச்
சான்றாக,

“ஆஸ்ரிதர்க்குத் தஞ்சமான ஸௌலப்யத்தையும் மிடுக்கையுங்
கண்டால் நீரிங்ஙனே அஞ்சக் கடவீரோ? என்ன, அது என்னால்
வருகிறதன்று, உன் வடிவின் வைலக்ஷண்யத்தாலே வருகிறது”
என்ற பகுதியை அறிவதன் மூலம், மணிப்பிரவாள உரை
நடையின் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வைணவ உரையாசிரியர்களின் உரையில், ஒரு பாடலுக்கு
உரைகேட்டு விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது என்பார்
உ.வே.சாமிநாதய்யர்.