4.1 ஆசிரியர்

    ஓர் அணியின் தலைவர் போல, ஒரு செய்தித்தாளின்
ஆசிரியர் விளங்குகிறார். இவர் கப்பலை நடத்திச் செல்லும்
தலைவர் (Captain) போலச் செயல்படுகிறார்.

4.1.1 முக்கியத்துவம்

    ஆசிரியர் செய்தித்தாளின் அச்சாணி ஆவார்.
சட்டப்படியும், நடைமுறைப் படியும், செய்தித்தாளில்
வெளியிட்டவை, வெளியிடத் தவறியவை இரண்டிற்கும்
பொறுப்பேற்க வேண்டியவர் அவர்தான். செய்தித்தாளில்
அவதூறாக ஏதாவது வெளிவந்தால் அதற்கு அவர் மீது தான்
வழக்குத் தொடர்வார்கள். அவமதிப்புக்காக நீதிமன்றம், சட்டப்
பேரவை, நாடாளு மன்றம் ஆகியவற்றின் முன்னால் நிற்க
வேண்டியவரும் அவரே. ‘செய்தித்தாளில் எதனையாவது
வெளியிட்டதற்காகவோ,      வெளியிடாததற்காகவோ,
ஆத்திரப்பட்ட வாசகரோ, வாசகர்களின் குழுவோ அவரது
அறையைத் தாக்கி வசை பாடுவார்கள்’ என்று இதழியல்
அறிஞர் ரெங்கசாமி பார்த்தசாரதி, ஆசிரியரின் நிலையை
விளக்குகிறார்.

• நல்ல ஆசிரியர்

    உயர்ந்த கொள்கையும் சமுதாய நோக்கமும், மனித
நலனில் நாட்டமும், நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபாடும்,
மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனைப் போக்கும், புதியன
படைக்கும் வேட்கையும், படைப்பு ஆற்றலும் உடையவர்கள்
நாடு போற்றும் நல்ல பத்திரிகை ஆசிரியர்களாகத்
திகழ்வார்கள்.

• பொறுப்பு

    ஒரு நாளிதழின் ஆசிரியர் அமைப்பாளராகவும், எல்லாப்
பகுதிகளையும் இணைப்பவராகவும் இருக்க வேண்டும். ஓர்
இதழின் வெற்றியும் தோல்வியும் அதனுடைய ஆசிரியரையே
சார்ந்திருக்கின்றது.

4.1.2 பணிகள்

    மக்கள் எப்படிப்பட்ட செய்திகளை விரும்புகிறார்கள்
என்பதை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.
நடைமுறையில் சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை அறிந்து
தலையங்கங்கள்     வாயிலாக     விளக்கித்     தீர்வு
சொல்ல வேண்டும். தற்காலத்தில் ஆசிரியர்தான் தலையங்கம்
எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தலையங்கம்
எப்பொருளில் அமைய வேண்டும் என்பதை ஆசிரியர்
முடிவு செய்வார், தலையங்கம் எழுதும் குழு அல்லது துணை
ஆசிரியர் ஒருவரால் அம்முடிவுக்கு ஏற்பத் தலையங்கம்
எழுதப்படும்.

    ஆசிரியர் தனித்தன்மையோடு இருக்கும் வகையில்
கட்டுரைகளை எழுத வேண்டும். சிறப்பான கட்டுரைகள்
எழுதுவதில் மற்ற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக
இருக்கவேண்டும். அத்துடன் நகைச்சுவையை நயமாகக்
கையாள வேண்டும். இதன் மூலம் இவர் ஆட்சியாளர்களையும்
ஆட்டிப் படைக்கலாம்.

4.1.3 தகுதிகள்

    ஒரு பத்திரிகையில் பணியாற்றும் அனைவரையும்
ஒருங்கிணைத்துச் செயல்படும் திறமை மிக்கவராக ஆசிரியர்
இருக்க வேண்டும். பொறுப்புணர்வு, மக்கள் நல நாட்டம்
உள்ளவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும், மக்களுக்கு
நன்மை தரக்கூடியதை உடனே தீர்மானிக்கும் கூர்மையான
அறிவு படைத்தவராகவும் இருக்க வேண்டும்.

    ஒரு சிறந்த ஆசிரியர் தனக்குக் கீழ் பணிபுரியும்
ஏனையோரிடம் சுமுகமான உறவு வைத்திருக்க வேண்டும்.
அதிகாரத்தை விட அன்பின் மூலம் பணிகளைச் சிறப்பாகச்
செய்யும்படி அனைவரையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்களின் பல்வேறு விதமான ஆற்றல்களை, முழுமையாக,
பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். எப்பொழுதும் மனவுறுதியுடன் செயல்பட வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட சிக்கலில் பொது மக்களின் கருத்து,
தலைவர்களின்     கருத்து     என்னவென்று     அறிந்து
செயல்பட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனச்சாட்சிப் படி
பணி ஆற்றுபவராக இருக்க வேண்டும
்.

4.1.4 கடமைகள்

    ஆட்சியாளர்களின் நல்ல திட்டங்களை ஆதரிக்க
வேண்டு்ம். அவற்றின் சிறப்பு அம்சங்களை மக்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல் அரசின் தவறான
திட்டங்களைச் சாடவும், நடுநிலையில் நின்று திறனாய்வு
செய்யவும் தயங்கக் கூடாது.

    அதிகார வர்க்கத்திற்கு அஞ்சியோ, அவர்கள் கொடுக்கும்
கையூட்டிற்கு ஆசைப்பட்டோ சமுதாயத்திற்குத் தீங்கு
தரக்கூடிய செய்திகளை வெளியிட்டு விடல் கூடாது. காலம்,
நேரம் பாராமல் பணியாற்றிச் செய்திகளை வெளியிட
முயல வேண்டும்.

    பத்திரிகைத் தர்மத்திற்கு அப்பாற் பட்டுச் செயல்படுவதன்
மூலம் விற்பனையை அதிகரிப்பதற்கு ஆசிரியர் முயன்று
விடக் கூடாது. ஆசிரியர் செய்தித்தாளின் உரிமையாளராக
இல்லாவிட்டாலும்,     உரிமையாளருடன் இனிய உறவு
கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் அவரது தவறான
கொள்கையைத் துணிந்து எதிர்க்கும் மனத் துணிவும் வேண்டும்.
அடிப்படையில், இதழ் என்பது மக்கள் நலம் சார்ந்ததாகவும்
மக்கள் கருத்தைப் பிரதி பலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் வாசகர்கள் விரும்பும் கதைகள், கட்டுரைகள்,
பேட்டிகள், வாசகர் கடிதங்கள், கேள்வி பதில்கள் பகுதிகளை
வெளியிடவும் கவனம் செலுத்த வேண்டும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

ஆசிரியரின் (Editor) முக்கியத்துவம் என்ன?

விடை
2.

ஆசிரியரின் பணிகள் யாவை?

விடை
3.

ஆசிரியரின் கடமைகள் யாவை?

விடை