5.3 நேர்காணலின் அமைப்பு

    நேர்காண்பவர் சிறப்புத் திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.
‘ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகிற
மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப
நடந்து கொள்ள வேண்டும்.

    “நேர்காணலை வெற்றியுடன்     நடத்தி     முடிக்க,
திட்டமிடுதல், இணங்க வைத்தல், தெளிவாக அறிதல்,
தொடர் முயற்சி
ஆகிய நான்கும் தேவை” என்று
ஜேம்ஸ் எம். நீல் (James M.Neal), சூசான்னே எஸ். பிரவுன்
(Suzanne S. Brown) என்பவர்கள் கருதுகின்றனர். நேர்காணல்
நடத்தும் செய்தியாளர்கள் இந்த நான்கினைப் பற்றியும்
தெரிந்திருப்பது நல்லது.

    செய்தியாளர்     நேர்காணும் பொழுது சிலவற்றைக்
கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை, செய்ய
வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று பகுத்துக் கூறலாம்.

5.3.1 செய்ய வேண்டியவை

    நேர்காண்பவர் முடிந்த வரை கீழ்க்காண்பவற்றைக்
கடைப்பிடிக்க வேண்டும்.

நேர்காண வேண்டியவரோடு முன்கூட்டியே தொடர்பு
கொண்டு ஒப்புதல் பெற்று இடம், நேரம் ஆகியவற்றைக்
குறித்துக் கொள்ள வேண்டும்.
நேர்காணலுக்கான திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும்.
கேட்க வேண்டிய கேள்விகளை     வரையறுத்துக்
கொள்ளுதல் தேவை.
நேர்காணப்படுபவரைப்     பற்றியும், நேர்காணலுக்கான
பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.
ஆர்வமாக நேர்காணலை நடத்தவேண்டும். சொல்வதைப்
பொறுமையாய், கவனமாய்க் கேட்க வேண்டும்.
நன்கு உடை அணிந்து செல்ல வேண்டும்.
நேரத்திற்குச் செல்ல வேண்டும்.
நேர்காணலின் நோக்கத்தைத் தெளிவு படுத்த வேண்டும்.
மேலும் மேலும் கேள்விகள் கேட்க வேண்டும்.
எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சரியான முறையில் குறிப்பு எடுக்க வேண்டும்.
எவற்றை     வெளியிட     வேண்டும்;     எவற்றை
வெளியிடக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.
முடிந்தால், வெளியிடுவதற்கு முன்னால்,     எழுதிய
குறிப்புகளைக் கொடுத்து, நேர்காணப் பட்டவரின் ஒப்புதலைப் பெறுதல் நல்லது.
நேர்காணலின் பொழுது ஒலிச்சுருள் பதிவி (Tape recorder),
ஒளிப்படம் (Photo) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
நேர்காணலில் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி
கூறுவதோடு நேர்காணல் நன்கு நடைபெற்றதாகக் கூறி,
சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு வரவேண்டும்.
அப்பொழுது சில பயனுள்ள விவரங்கள் பெற வாய்ப்பு
ஏற்படும்.

5.3.2 செய்யக் கூடாதவை

    நேர்காண்பவர் சிலவற்றைச் செய்யக் கூடாது. அவை :

நேர்காணப் படுபவரை விடத் தனக்கு எல்லாம் தெரியும்
என்று நினைக்கக் கூடாது.
அடிமை போல் நடக்கவும் கூடாது; ஆட்டிப் படைக்க
நினைக்கவும் கூடாது.
இடை இடையே குறுக்கிடுவதோ, கூறும் கருத்துக்களை
அலட்சியப் படுத்துவதோ கூடாது.
கருத்து     முரண்பாடுகளையோ,     உணர்வுகளையோ
வெளிப்படுத்தக் கூடாது.
வெட்டிப்பேச்சில் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
விவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
தாமாக நேர்காணலை முடிக்கக் கூடாது.
நேர்காணல் முடிந்தவுடன் அவசரப்பட்டு வெளியே வரக்
கூடாது.

    எளிதாகத் தகவல் பெறும் தன்மையால் நேர்காணல்
முறையை இதழியலாளர்கள் தற்காலத்தில் விரிவாகப்
பயன்படுத்துகின்றனர். கருத்துகளை அறிந்து செய்திகளை
உருவாக்க இது ஒரு சிறந்த முறையாகத் திகழ்கின்றது.