6.2 செய்தியின் கட்டமைப்பு

    நாளிதழ்களில் செய்திகளைப் படிக்கும் பொழுது அவற்றில்
ஒரு திட்டவட்டமான அமைப்பு இருப்பதைக் காணலாம்.
ஒவ்வொரு செய்தியிலும் தலைப்பு, முகப்பு, உடல் என்ற
மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றிற்குச் செய்தியின்
கட்டமைப்பு
என்று பெயரிடப்படுகிறது.

    செய்தியின் மையக் கருத்து அல்லது தலைமைக் கருத்து
செய்தியின் தலைப்பில் இடம்பெறும். அதனை அடுத்து
அமைவது தேதி வரி அல்லது நாள் வரி (Date line)
என்பதாகும். இதில் நிகழ்ச்சி நடைபெற்ற நாளும், செய்தி
வெளியாகும் ஊரின் பெயரும் தரப்படும். அடுத்து
செய்தியின் சாரத்தைக் கூறும் முகப்பு (Lead) என்பது
அமைகிறது. முகப்பை அடுத்து, செய்திகள் விவரமாகத்
தரப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் உடல் (body)
எனப்படுகிறது.

6.2.1 தலைப்பு

    அவசரமாக     ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களைப்
படிக்கத் தூண்டும் வகையில் தலைப்பு இருக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைப்பு செய்தியின் சாரத்தைக் கூறுவதாகவும்,
செய்தியை     விளம்பரப் படுத்துவதாகவும்,     அழகு
படுத்துவதாகவும் அமைகிறது. அது, தலைப்பை மட்டும்
படிக்கும் வாசகர்க்குச் செய்தியைச் சுருக்கித் தருகின்றது.
மேலும் படிக்கக் கூடியவர்களைச் செய்தியை நோக்கிக்
கவர்ந்து     இழுக்கிறது.     அத்துடன்     தலைப்புகள்
செய்தித்தாளுக்கு ஓர் ஆளுமையைத் தருகின்றன. ஒரு
செய்தித்தாள் பரபரப்பாகச் செய்தியைத் தரக் கூடியதா?
நிதானமாக எழுதக் கூடியதா? கட்சிச் சார்புடையதா?
நடுவுநிலையானதா?     என்றெல்லாம்     தலைப்புகளைப்
பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாம்.

• வகைகள்

    தலைப்பு செய்தித்தாளின் பக்கத்திற்கு ஒரு வடிவத்தைக்
கொடுத்து, படிக்கத் தூண்டுகிறது. தலைப்புக்கும் பல
வடிவங்கள் உண்டு. அவை பற்றி அறிவோமா?

• நெற்றித் தலைப்பு (Banner)

     செய்தித்தாளின் அனைத்துப் பத்திகளையும் இணைத்து
முதன்மைத் தலைப்பாக அமைப்பர்.

• ஒரு வரித் தலைப்பு (Single Line headline)

    ஒரே வரியில் அமையும் இத்தலைப்பு வாசகர்களை
எளிதில் கவர்ந்துவிடும்.

எடுத்துக்காட்டு: யார் பிரதமர் என்பதே கேள்வி : ஜெ
             (தினமணி பக்.9 நாள் 12.03.2003)

• இரு வரித் தலைப்பு (Two Lines headline)

    பெரும்பாலான செய்தித்தாள்கள், இரண்டு வரிகளில்
அமையும். இவ்வகைத் தலைப்பினைப் பயன்படுத்துகின்றன.
சான்று : இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலையுடன் தமிழ்
இணையப் பல்கலை. ஒப்பந்தம்.
            (தினமணி, 12.03.2004, பக்.11)

• பிரமிடு வகைத் தலைப்பு

    இவ்வகைத் தலைப்பு ஓர் அழகிய வடிவமைப்பினைத்
தரும். இவ்வகைத் தலைப்பினையும்     பெரும்பாலான
பத்திரிகைகள் பயன்படுத்துகின்றன. இவ்வகைத் தலைப்பு
இரண்டு வகைப்படும்.

1) மூன்று வரிசைப் பிரமிடு முறை

சான்று : அரசு ஊழியர்
    சங்கத்தின் சார்பில்
    மகளிர் தின விழா
            (தினமணி, 12.3.2004, பக்.2)

2) தலைகீழ்ப் பிரமிடு முறை

சான்று : தொலை நிலைக் கல்வித்
    தேர்வு முடிவுகள்
    வெளியீடு
            (தினமணி, 12.03.2004, பக்.3)

• தோள் தலைப்பு (Shoulder headline)
• இடது வரிசைத் தலைப்பு (Flush Left headline)
• வலது வரிசைத் தலைப்பு (Flush Right headline)
• ஓடு தலைப்பு (Run to headline)
• முகப்புக் கதைத் தலைப்பு (Lead story headline)
• பெட்டித் தலைப்பு (Boxed headline)

போன்று தலைப்புகள் பல வடிவங்களில் இருப்பினும் இவற்றை
மிகவும் அரிதாகவே பயன்படுத்துகின்றனர்.

6.2.2 முகப்பு (lead)

    தலைப்பிற்கும் செய்திக்கும் இடையில் அச்செய்தியினை
எழுதியவர் பெயர் அமைந்திருக்கும். இதனை, பெயர் வரி
(By-line)
என்பர்.

    முகப்பின் தொடக்கத்தில் எந்த ஊரில், என்ன நடந்தது
என்பதைக் குறிக்கும்     வகையில் நாள் வரி (Date
Line)
அமைக்க வேண்டும்.

    முகப்பு (Lead) என்பது தலைப்பின் விளக்கமாக,
செய்திகளின் சுருக்கமாக அமைய வேண்டும். அவை
ஐந்து இலக்கணங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.

• அறிவிக்கும் பணியைச் செய்வதாக இருக்க வேண்டும்.
• சுருக்கமாக இருக்க வேண்டும்.
• சொற்கள் எளிமையாக இருப்பதுடன் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
• நேரடியாகச் சொல்ல வேண்டும்.
• சுவைபடச் சொல்ல வேண்டும்.

• வகைகள்

முகப்பு (lead) எழுதுவதில் பலவகையுண்டு. அவை:

• இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பு (summary
lead)
• மதிப்பீட்டு முகப்பு (value judgment lead)
• நாடக அமைப்பு முகப்பு (dramatic lead)
• முரண் முகப்பு (contrast lead)
• மேற்கோள் முகப்பு (quotation lead)
• சிறப்பு முகப்பு (key note lead)
• ஆர்வமூட்டும் முகப்பு (suspended interest lead)

ஆகியனவாகும்.

    செய்தியின்     முக்கிய     நிகழ்ச்சியைச் சுருக்கமாக
அமைப்பதே முகப்பின் நோக்கம். ஏன், என்ன, எப்பொழுது,
எங்கே, எப்படி, யார் என்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக
அது இருக்க வேண்டும்.

    செய்தியின்     கருத்தை     வலியுறுத்தும் வகையில்
சொற்றொடரைத் தொடங்க வேண்டும்.

    அவசரமாகப் படித்துச் செல்லும் வாசகர், முகப்பைப்
படித்தே முழுச் செய்தியையும் அறிந்து கொண்ட உணர்வை
ஏற்படுத்தும் வகையில் முகப்பை அமைக்க வேண்டும்.

    செய்திகளை எழுதும் முன்னர், மேற்கண்ட வினாக்களுக்கு
விடை கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்து
கொள்ள வேண்டும். பின்னர் விவரங்களின் உண்மைத்
தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான பத்திரிகைகள், இணைப்பு முகப்பு
அல்லது தொகுப்பு முகப்பைத்தான் கையாளும். காரணம்
முக்கியச் செய்திகளை எளிமையாகச் சொல்ல முடியும்;
அதனோடு மற்ற எல்லா முகப்புகளுக்கும் இதுவே
அடிப்படையானதாக அமையும்.

6.2.3 செய்தியின் உடற்பகுதி

    இது முகப்பின் விரிவாக்கமாக இருத்தல் வேண்டும்.
முகப்பில் காணப்படும் செய்திகளை விளக்கிக் கூறுவதாகவும்,
கூடுதலான விவரங்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

    ஏன், எவ்வாறு, எப்பொழுது, எப்படி என்று விளக்கிக்
கூறுவதாகவும் அமைய வேண்டும். இதில் முக்கியமான
செய்திகளை     முதலிலும்,     குறைந்த முக்கியத்துவம்
உள்ள செய்திகளை இறுதியிலும் சொல்ல வேண்டும்.
இடப் பற்றாக்குறையின் காரணமாகக் கடைசிப் பத்திகளை
நீக்க நேரிடலாம். அதனால் முக்கியமான விவரங்களை
முதலிலேயே சொல்லி விடுவது சிறந்தது.

• செய்தியின் முடிவுரை

    செய்தியின் கடைசிப் பத்தியைச் செய்தியின் முடிவு என்ற
வகையில் அமைக்க வேண்டும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

இதழியல் நடை குறித்துத் திரு.வி.க., என்ன கூறுகின்றார்?

விடை
2.

செய்தியின் கட்டமைப்பு என்றால் என்ன?

விடை
3.

தலைப்பு எவ்வாறு அமைய வேண்டும்? அதன்
வகைகளைக் கூறுக.

விடை