3.3 சிற்றிதழ்களும் தலையங்கமும்

எண்ணிக்கையில் குறைந்த, படித்த வாசகர்களை மட்டுமே
கொண்ட சிற்றிதழ்களில் அந்தந்த இதழ் நடத்தும் ஆசிரியரின்
கருத்துகளே தலையங்கமாக அமைகிறது.

இலக்கியத் தரமான     தலையங்கமே அனைத்துச்
சிற்றிதழ்களிலும் இடம் பெறுகின்றது.

காலச்சுவடு இதழில் தலையங்கம் என்ற பெயரிலே
இடம் பெறுகின்றது. புதிய பார்வை, தலித் முரசு போன்ற
இதழ்களில் எந்தப் பெயரும் இல்லாமல் முதல் பக்கத்திலேயே
தலையங்கம் அமைந்து விடுகிறது. உயிர்மை இதழில் எந்தப்
பெயரும் இல்லாமல் தலையங்கம் அமைந்தாலும் இறுதியில்
ஆசிரியரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிற்றிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இடம்
பெறுகிறது. இது சென்ற மாத இதழ் குறித்த விமர்சனமாகவும்,
இலக்கியம் சார்ந்த இம்மாத முக்கிய நிகழ்வுகள் பற்றியதாகவும்
அமையலாம்.

இலக்கியத் தரமான பல இதழ்களில் இப்படி அமைவதுண்டு.
மேலும், தொடர்ந்து இதழ் நடத்த முடியாத பொருளாதாரச்
சூழலில் உள்ள சில சிற்றிதழ்களில் தலையங்கம், ஆசிரியர்
படிப்பவரிடம் சந்தா கேட்டு முறையிடும் தலையங்கமாகவும்
அமையும்.