2.1 செம்மையாக்கம்
பத்திரிகை அலுவலகத்திற்கு அதிகச் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தையும் பத்திரிகைகளில் வெளியிட முடியாது. அவற்றுள் தேவையான செய்திகளைத் தேவையான அளவு தேர்ந்தெடுத்து, தம் வாசகருக்குப் பழக்கமான மொழி நடையில், அவர்கள் எளிதாகப் படித்து உள்வாங்கும் வகையில் சுவையாக வடிவமைத்துப் பதிப்பிக்கின்ற பணியே செம்மையாக்கமாகும்.
2.1.1 அகராதி தரும் விளக்கம்
செம்மையாக்கத்தை ஆங்கிலத்தில் ‘எடிட்டிங்’ (Editing) என்று கூறுவர். ‘எடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் ‘பதிப்பி, பதிப்பிற்கு வேண்டிய முறையில் திருத்தி அமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராய் இருந்து பணியாற்று' என்று ஆங்கில-தமிழ் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு) விளக்கம் தருகின்றது.
2.1.2 பிற விளக்கங்கள்
செய்திகளைத் தேர்ந்தெடுத்துச் சரியான முறையில் மாற்றித் திருத்தி, வகைப்படுத்தி, தொகுத்து, இறுதி வடிவம் தருவதைச் ‘செம்மையாக்கம்’ எனலாம்.
1) |
தங்கத்தை உருக்கி வடிவமைப்பது போலச் செய்திகளைத் தேர்ந்தெடுத்துச் சரிசெய்து, வாசகர் படிப்பதற்குத் தகுந்தவாறு வெளியிடச் செப்பனிடும் பணியே செம்மையாக்கம் என்பதாகும்.
|
2) |
எழுத்துப் பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை போன்ற பிழைகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்தல்.
|
3) |
சட்டப்படி பார்த்தால் சிக்கல்களை உருவாக்கக்கூடிய பகுதிகளை நீக்குதல்
|
4) |
வாசகர்கள் புரிந்துகொள்ளக் குழப்பமாக இருக்கும் என்று ஆசிரியர் நினைக்கும் பகுதிகளைத் தெளிவு செய்தல். |
5) |
செய்தியின் அளவைத் தேவைக்கு ஏற்பக் குறைத்தல் அல்லது விரித்தல். |
6) |
அச்சுப்படி திருத்துவோர் அவராகவே செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றக் கூடாது. |
போன்ற பணிகளை உள்ளடக்கியதே செம்மையாக்கமாகும்.
செய்தியின் தலைப்பு, செய்தி முன்னுரை, உடல்பகுதி ஆகிய மூன்றுமே செம்மையாக்கத்தில் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.
|