என்பனவாகும்.
    இப்பிரிவில் ஒரு கண்காணிப்பாளர் தலைமைப்
பொறுப்பில் இருப்பார். அவருக்குக் கீழ், தட்டச்சில் நன்கு
தேர்ச்சிப் பெற்ற உதவியாளர்கள் பணிபுரிவர். செய்திப் பிரிவில்
இருந்து வரும் செய்திகள், கட்டுரைகள் போன்றவை அச்சுக்
கோர்ப்புப் பிரிவின் கண்காணிப்பாளர் மேஜைக்கு வந்து
சேரும். அவர் அவற்றைத் தமது மேற்பார்வையில் தக்கபடி
அச்சுக் கோப்பதற்கு ஏற்பாடு செய்வார். அச்சுக் கோத்த
செய்திகளைப் படியெடுத்துப் பிழை திருத்துவதற்காக அப்
படிகளைச் செய்தியாளர் பிரிவுக்கு அனுப்பி வைப்பார்.
பிழைதிருத்தம் செய்து வந்ததும் அதிலுள்ள திருத்தங்களுக்கும்
மாற்றங்களுக்கும் ஏற்ப மீண்டும் அச்சுக் கோப்பில் திருத்தும்
பணி தொடரும்.
    இப்பிரிவில் அச்சு எழுத்துக்கள் இருக்கும். சில அச்சுப்
பிரிவில் அவ்வப்போது அச்செழுத்துகளைப் புதிதாக வார்த்துத்
தனி எழுத்தாகவும் அச்சுக் கோக்கும் வசதியும் இருக்கும்.
அவற்றைக் கொண்டு அச்சுக் கோப்பது மூன்று வகைகளாக
அமையும்.
•	 கையால் அச்சுக் கோத்தல்
    ‘கேஸ்’     (Case)     என்று     அழைக்கப்படும்
அச்செழுத்துப் பெட்டியில் தனித்தனியாக இருக்கும்
எழுத்துகளை அச்சுக் கோப்பவர் ஒவ்வொன்றாக எடுத்துக்
கையால் பிடித்துள்ள ‘ஸ்டிக்’ (Stick) என்னும் அச்சடுக்கிச்
சட்டத்தில் வார்த்தைகள் உருவாகுமாறு     வரிசையாக
அடுக்குவார். இம்முறை இன்றும் சிறு பத்திரிகைகளில்
பின்பற்றப்படுகிறது.
 6.1.2 அச்சு வார்ப்புமுறை
    தனி எழுத்து (மோனோ) அச்சுவார்ப்புமுறை, தொடர்
எழுத்து (லைனோ) அச்சுவார்ப்பு முறை என அச்சுவார்ப்பு
முறை இருவகைப்படும்.
•	 தனி எழுத்து (மோனோ) அச்சுவார்ப்பு முறை
    தனியெழுத்து அச்சு வார்ப்பு முறை இயந்திரங்களில்
ஒவ்வொரு எழுத்தாகப் புத்தம் புதியனவாக வார்த்து உருவாகி
அச்சுக்     கோக்கப்படுகிறது.     தனியெழுத்து அச்சு
இயந்திரங்களில், தட்டச்சாளர் செய்திகளைத் தட்டச்சு
செய்வார். அது முதலில் ஒரு நீண்ட தாள்சுருளில் புள்ளித்
துவாரக் குறியீடாகப் (Punching Codes) பதிக்கும். அந்தப்
பதிவுசெய்த தாள்சுருள் திரும்பச் சுழற்றப்பட்டு (Rewind)
அச்சுவார்க்கும் இயந்திரத்தில் பொருத்தப்படும். அதில்
பதிவாகியிருக்கும் குறியீடுகளுக்கு ஏற்ப அந்த இயந்திரம்
தனித்தனி எழுத்தை வார்த்தெடுத்து அடுக்கும். அந்த
இயந்திரத்தின் கொதிகலத்தில் உருகும் ஈயத்திலிருந்து
எழுத்துக்கள் ஒவ்வொன்றாக     உருவாகும். தனித்தனி
எழுத்துகளும் இடநிரப்பிகளும் இணைந்து ஒவ்வொரு பத்தியாக
அச்சுக்     கோக்கும். இது     ஒரு தொகுப்பாளரால்
படியெடுக்கப்படும். படியினைப் பிழைதிருத்தம் செய்தபிறகு,
தவறான எழுத்துகளை மாற்றியமைக்க இவ்வியந்திரத்தில்
வசதியுண்டு.
        
•	 தொடர் எழுத்து (லைனோ) அச்சுவார்ப்பு முறை
    தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறை இயந்திரத்தில்
செய்திகளைத் தட்டச்சு செய்யும் போது அச்செழுத்துகள்
வரிவரியாக வெளிவரும். தட்டச்சுக் கருவியும் அச்சுக்களை
வார்க்கும் கருவியும் இணைந்த இயந்திரமாக இது இருக்கும்.
ஆதலால் தட்டச்சு செய்கிற போதே ஈயம் உருகி, எழுத்துக்கள்
ஒரு பத்தி அகலத்தில் வரிவரியாக உருவாகும். சூடாக
இருக்கும் அந்த அச்சுக்கட்டை வரிகளில் தண்ணீர்
பீச்சியடிக்கப்படும். அப்போது எழுத்துக்கள் குளிர்ந்து
வரிவரியாக அடுக்கப்படும். இதில் ஒரு வரியில் ஓர் எழுத்து
மட்டும் பிழையானாலும் அந்த வரியையே புதிதாக மாற்ற
வேண்டி வரும். விரைந்து அச்சுக் கோப்பதற்கு இந்த
இயந்திரம்     உதவியாக     இருந்தாலும்     இவ்வகை
இயந்திரங்களுக்குத்     தற்போது,     இம்முறையைப்
பயன்படுத்திவந்த எல்லா இந்தியப் பத்திரிகைகளுமே
விடைகொடுத்து அனுப்பிவிட்டன. காரணம், இதைவிட எளிய
டைப்செட்டிங் முறை கணினியின் உதவியால் கிடைக்கப்
பெற்றதேயாகும்.
        
 6.1.3 போட்டோ டைப் செட்டிங் முறை
    கணினி உதவியுடன் தற்போது போட்டோ டைப் செட்டிங்
முறையில் அச்செழுத்துகள் கோக்கப்படுகின்றன. எல்லாப்
பத்திரிகைகளும் இவ்வகை அச்சுக் கோக்கும் முறையையே
தற்போது பயன்படுத்துகின்றன. இம்முறையால் அச்சுக்களை
உருவாக்கும் ஈயத்திற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.
போட்டோ டைப் செட்டிங் முறையில் விரைவும் நேர்த்தியும்
ஏற்படுகின்றன. இம்முறையில் கிடைக்கும் நேர்த்தியைப் பிற
அச்சுக் கோக்கும் முறையில் காண இயலாது. அச்சுக்
கோப்பிற்குப் பின்னர் செய்திகளின் படிகள் ‘புரோமைடு’
தாளில் பதிவு செய்யப்பட்டுப் பிழைதிருத்தம் செய்ய
அனுப்பப்படுகின்றன.
 6.1.4 அச்சு வார்ப்புப் பிரிவு
    அச்சுக் கோத்தவற்றைப் பக்க அமைப்புச் செய்து அதை
மிக விரைந்து அச்சடிக்கும் சுழல் அச்சு (Rotary)
இயந்திரங்களில் பொருத்துவதைத் தனிப்     பகுதியினர்
கவனிக்கின்றனர். பக்க அமைப்பு முடிவுற்றவுடன் பக்கங்களின்
மீது ‘மேட்’ எனப்படும் வளையும் தன்மையுடைய ஒருவகை
ரப்பர் கட்டையை வைத்து அழுத்தி, எழுத்துக்கள் மற்றும்
படங்கள் முதலிய பிற பதிவுகளை அதில் படியச் செய்வார்கள்.
பின்பு அதை அரை உருளை வடிவத்தில் வளைத்து, ஓர்
உருளையோடு பொருத்துவர். இதில் ஒவ்வொரு பக்கத்திற்கும்
தனித்தனியே அச்சுவார்ப்புகளை உருவாக்குவர். இவ்வச்சு
வார்ப்புகளைக் கடைசல் இயந்திரங்களில் பொருத்தி, பிசிறு
நீக்கிச் சுழல் அச்சு இயந்திரத்தில் பொருத்தும் அளவிற்குச்
செப்பம் செய்வர்.
 
 
 | 
 
 |  தன் மதிப்பீடு : வினாக்கள் - I  |  
 | 1. | தற்போது நாளிதழ்களில் அதிகமாக அச்சுக்கோக்கப் பயன்படுத்தப்படும் முறை எது?
 | விடை |  
 | 2. | போட்டோ டைப் செட்டிங் முறையில் அச்சுக்கோப்பிற்குப் பின் செய்தித்தாளின் படிகள்
 எந்தத் தாளில் பதிவு செய்யப்படும்?
 
 | விடை |  
 | 3. | அச்சு வார்ப்புப் பிரிவில் பக்கங்களின் மீது வைத்து அழுத்தப்படும் கட்டையின் பெயர்என்ன?
 
 | விடை |  |