3.1
நிறுவன வகைப்பிரிவுகள்
ஒவ்வொரு நாட்டிலும் ஏராளமான நிறுவனங்கள்
செயல்படுகின்றன. நிறுவனங்களைப் பல்வேறு வகையில் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
ஒரு நிறுவனம் ஒருநாட்டில் மட்டுமே செயல்படலாம். வேறொரு நிறுவனம் பல நாடுகளிலும்
கிளைகளைப் பரப்பியிருக்க முடியும். அதனைப்¢ பன்னாட்டு நிறுவனம் (Multi-National
Corporation - MNC) என்பர். இவ்வாறு வகைப்படுத்து வதை பரவல் அடிப்படையிலான
வகைப்பாடு எனலாம். இதுபோல நிறுவனங்களை உடைமை (Ownership), நோக்கம், செய்பொருள்
(Product), அளவு (Size) ஆகியவற்றின் அடிப்படையிலும் வேறுபடுத்திப் பார்க்க
முடியும். ஒவ்வொரு வகைப்பாடாக விரிவாகப் பார்ப்போம்.
3.1.1 ஒருநாட்டு
/ பன்னாட்டு நிறுவனங்கள் (National / Multinational Organisations)
ஒரு நாட்டுக்குள்
மட்டுமே தன் கிளைகளைக் கொண்டுள்ள நிறுவனத்தை ஒருநாட்டு நிறுவனம் எனலாம்.
பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பியுள்ள நிறுவனங்களைப் ‘பன்னாட்டு நிறுவனங்கள்’
என அழைக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்றைக்குப் பல்வேறு நிறுவனங்கள்
பிற நாடுகளிலும் தொழில் தொடங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இன்றைக்கு மைக்ரோசாஃப்ட்,
ஐபிஎம், இன்டெல், நோக்கியா, ஹுண்டாய் போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் கிளைகளைத் திறந்துள்ளன.
பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள
நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகின்றன.
எனவே இத்தகைய நிறுவனங்களின் அகக்கட்டமைப்பும், மேலாண்மை அமைப்பும், மேலாண்மைத்
தகவல் முறைமையும் மிகவும் சிக்கலானவை.
பன்னாட்டு நிறுவனத்தின் அகக்கட்டமைப்பைப்
பொறுத்தவரை அதன் ஒவ்வொரு நாட்டுக் கிளையும் ஒரு தனித்த நிறுவனம் போன்றே செயல்படுமாறு
அமைந்திருக்கும். ஒவ்வொரு நாட்டுக் கிளைக்கும் ஒரு தலைவர் (Chairman) இருப்பார்.
அவரின் வழிகாட்டுதலின்படியே அந்நாட்டுக் கிளை செயல்படும். ஒவ்வொரு நாட்டுக்
கிளையின் மேலாண்மை அமைப்பைப் பொறுத்தவரை அக்கிளையின் கட்டமைப்புக்கு ஏற்றவாறு
அமையும். ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் ஒரு மேலாண்மை அமைப்பு இருக்கும். ஒவ்வொரு
நாட்டுக் கிளைத் தலைவரும் அதன் அங்கமாக இருப்பார்.
இன்றைய சூழலில் திறன்மிக்க கணிப்பொறிகளும் அவற்றைப் பிணைக்கும் மிகப்பரந்த
பிணையங்களுமின்றி பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மைத் தகவல் அமைப்பு இயங்க
முடியாது. பல மாநிலங்களில் கிளைகள் பரப்பியுள்ள ஒருநாட்டு நிறுவனங்களும்
கணிப்பொறிப் பிணையங்கள் மூலம் செயல்படும் மேலாண்மைத் தகவல் அமைப்பின்றி பிற
நிறுவனங்களோடு போட்டியிட்டு முன்னேற இயலாது.
3.1.2 பொதுத்துறை
/ தனியார்துறை நிறுவனங்கள் (Public Sector / Private Sector Organisations)
யாருக்குச் சொந்தமானது என்பதன்
அடிப்படையில் ஒரு நிறுவனத்தைப் பொதுத்துறை நிறுவனம் அல்லது தனியார்துறை நிறுவனம்
என வேறுபடுத்த முடியும். நேரடியாக அரசின்கீழ் இயங்கும் அமைப்புகளைப் பொதுவாக
‘அரசுத் துறை’ என்றே அழைக்கிறோம். இரயில் போக்குவரத்துத் துறை அவ்வாறு செயல்படுகிறது.
அவற்றை ‘நிறுவனம்’ என அழைப்பதில்லை. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் பல
நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் கொள்கை முடிவுகளை அரசே எடுக்கிறது.
தன்னதிகாரம் பெற்ற அரசு நிறுவனங்களும் உள்ளன. அரசு நிறுவனங்களை பொதுத்துறை
நிறுவனம் (Public Sector Unit - PSU) என்றழைக்கிறோம். இந்திய உணவுக் கழகம்
(FCI), பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) ஆகியவை பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும்.
அரசு நிறுவனங்கள் அல்லாத பிற
நிறுவனங்கள் அனைத்தும் தனியார்துறை (Private Sector) நிறுவனங்கள் ஆகும்.
இவை தனிநபர் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ சொந்தமாக இருக்கும். பொதுத்துறை
நிறுவனம் தனியாருக்கு மாற்றப்படுவதும், தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தை
அரசு எடுத்து நடத்துவதும் உண்டு. இவ்விருவகை நிறுவனங்களுமே பொதுமக்களிடமிருந்து
முதலீட்டைப் பெறுவதும் உண்டு.
நிறுவன அகக்கட்டமைப்பைப் பொறுத்தவரை
இருவகை நிறுவனங்களுக்கும் வேறுபாடில்லை. ஆனால் மேலண்மை அமைப்பில் வேறுபாடு
உண்டு. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிக உயர்ந்த மேலாண்மை அமைப்பாக அரசுத்
துறை அதிகாரிகளும், அமைச்சரும், நாடாளுமன்றமும் உள்ளன. இருவகை நிறுவனங்களிலும்
மேலாண்மை அமைப்பின் பொறுப்புச் சுமைகள் (Responsibilities) பெரிதும் வேறுபடுகின்றன.
மேலாண்மைத் தகவல் அமைப்பைப் பொறுத்தவரை பெரிதும் வேறுபாடில்லை.
அரசும் தனியாரும் சேர்ந்து நடத்தும்
(Joint Sector) நிறுவனங்களும் உள்ளன. முதலீட்டின் பங்கு யாருக்கு அதிகம்
என்பதைப் பொறுத்து நிறுவனத்தின் பண்பியல்புகள் அமையும்.
3.1.3
இலாப நோக்கு / இலாப நோக்கில்லா நிறுவனங்கள் (Profit / Non-Profit Organisations)
பொதுவாக மூலதனம் போட்டு நிறுவனம்
அமைப்பது இலாபம்¢ பெற்று நிறுவனத்தை மென்மேலும் வளர்ப்பதற்குத்தான் என்றபோதிலும்
இலாப நோக்கில்லாமல் நடத்தப்படும் நிறுவனங்களும் உள்ளன. அரசு நிறுவனங்களும்
பொதுத்துறை நிறுவனங்களும் இலாப நோக்கின்றி நடத்தப்படுபவை என்று பொதுவான ஒரு
கருத்து உண்டு. பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறே உள்ளது. ஆனால் இன்றைய
சூழலில் அவ்வாறு இருக்க முடியாது. தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுத்
தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இலாப நோக்குத் தேவைப்படுகிறது.
அரசுத் துறையில் செயல்படும் கல்வி
நிறுவனங்கள், மருத்துவ மனைகள், ஆய்வு-மேம்பாட்டு நிறுவனங்கள் போன்றவை இலாப
நோக்கின்றி நடத்தப் படுபவை. ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புகளின் உதவியுடன்
நடத்தப்படும் நிறுவனங்களும் இந்த வகையைச் சார்ந்தவையே. தனியாரால் நடத்தப்படும்
காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பல்வேறு சேவை நிறுவனங்களும் இலாப
நோக்கமின்றி நடத்தப்படுபவையே. நல்லெண்ணம் படைத்த கொடையாளிகளின் முன்முயற்சியில்
உருவாக்கப்பட்ட கொடையாண்மை (Trust) மூலமாகவும் பல்வேறு நிறுவனங்கள் இலாப
நோக்கின்றி நடத்தப்படுகின்றன.
இருவகை நிறுவனங்களின் அகக்கட்டமைப்பிலும்,
மேலாண்மை அமைப்பு முறையிலும், மேலாண்மைத் தகவல் முறைமையிலும் பெரிதாக வேறுபாடு
எதுவும் இல்லை. இலாப நோக்கின்றி நடத்தப்படும் நிறுவனமாயினும் சிறந்த மேலாண்மை
அமைப்பு இருக்க வேண்டும். சிறந்த தகவல் முறைமையும் இன்றியமையாதது ஆகும்.
3.1.4
பொருள் விற்பனை / சேவை வழங்கு நிறுவனங்கள் (Goods Sales / Service Providing
Organisations)
வணிக நிறுவனம் என்றாலே பொருட்களை
உற்பத்தி செய்து விற்பனை செய்கின்ற நிறுவனங்களே நினைவுக்கு வரும். பெரும்பாலான
நிறுவனங்கள் பொருளுற்பத்தி, பொருள் விற்பனை நிறுவனங்களாகவே இருக்கின்றன.
இயற்கையில் விளையும் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்;
கச்சாப் பொருட்களை வாங்கி, பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரித்து விற்கும்
நிறுவனங்கள்; கணிப்பொறி முதல் கப்பல் வரை விற்பனை செய்யும் நிறுவனங்களைப்
பார்க்கிறோம்.
ஆனாலும், ஒரு வணிக நிறுவனத்தின்
செய்பொருள் (Product) கண்ணால் கண்டு கையால் தொட்டுணரும் பருப்பொருளாகத்தான்
இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சேவையாகவும் இருக்கலாம். அஞ்சல், தொலைதொடர்பு,
வங்கி, ஆயுள் காப்பீடு, மருத்துவம், சட்டம், போக்குவரத்து, பயிற்சி, ஆலோசனை
போன்ற துறைகளில் பருப்பொருள்கள் எதுவும் விற்கப்படுவதில்லை. சேவைகளையே வணிகப்
பொருளாகக் கையாள்கின்றனர். சேவைகளைச் சந்தைப் படுத்தல் (Marketting the Services),
சேவைகளை விற்றல் (Sale of Services) என்றெல்லாம் இப்போது பேசப்படுகிறது.
இன்றைய பொருளாதார அமைப்பு முறையில்
சேவை என்பதும் ஒரு வணிகப் பொருளாகவே கருதப்படுவதால் இவ்விருவகை நிறுவனங்களின்
கட்டமைப் பிலும், மேலாண்மை அமைப்பு முறையிலும், மேலாண்மைத் தகவல் அமைப்பிலும்
பெரிதாக வேறுபாடுகள் இல்லை.
3.1.5
சிறிய / நடுத்தர / பெரிய நிறுவனங்கள் (Small / Medium / Large Size Organisations)
முதலீடு, விற்றுவரவு, மனித பலம்,
கிளைகள் போன்ற அளவுகளின் அடிப்படையில் நிறுவனங்களை சிறியவை, பெரியவை, நடுத்தரமானவை
எனப் பிரிக்கலாம். ஒரு நபரால் மட்டுமே நடத்தப்படும் மிகச்சிறிய நிறுவனங்களும்
உள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் பணிபுரியும் மிகப்பெரிய நிறுவனங்களும் உள்ளன.
நிறுவனத்தின் அளவைப் பொறுத்து
அதன் அகக்கட்டமைப்பு நிச்சயமாக வேறுபடும். மேலாண்மை அமைப்பு முறையும் பெரிதும்
வேறுபடும். ஓரிருவர் பணிபுரியும் சிறிய நிறுவனங்களில் மேலாண்மை அமைப்பு என்பது
முதலாளி மட்டுமே. பல்லாயிரக் கணக்கானோர் பணிபுரியும் பெரிய நிறுவனங்களில்
மேலாண்மை அமைப்பில் பல்வேறு அடுக்குகள் இருக்கும்.
மேலாண்மைத் தகவல் அமைப்பும் நிறுவனத்தின்
அளவைப் பொறுத்துப் பெரிதும் வேறுபடும். ஒருவர் நடத்தும் நிறுவனத்தில் கணக்கு
வழக்குகளை அவர் தம் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும். சிறிய நிறுவனங்களில்
அதிக அளவாக ஒரு கணிப்பொறியும் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருளும் (Office
Application Software) இருந்தால் போதும், வணிகப் பரிமாற்றங்களைக் கவனித்துக்கொள்ள
முடியும். பெரிய நிறுவனமாயின் கணிப்பொறிப் பிணையமும் பல்வேறு மேலாண்மைத்
தகவல் மென்பொருள்களும் தேவைப்படும்.
எந்தவொரு நிறுவனத்தையும் மேற்கண்ட
ஐந்து வகைப்பாட்டின் அடிப்படை யிலும் இரண்டிலொரு பிரிவில் அடக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, இந்திய அரசின் தொலை தகவல்தொடர்பு நிறுவனம் (BSNL), இந்தியாவில்
மட்டும் (பரவல்) - இலாப நோக்கில் (நோக்கம்) - சேவைகளை வழங்கும் (செய்பொருள்)
- மிகப்பெரிய (அளவு) - பொதுத்துறை (உடைமை) - நிறுவனம் ஆகும்.
|