5.1 தகவல் களஞ்சியம்

கணிப்பொறியின் கண்டுபிடிப்பில் விளைந்த நன்மைகளுள் குறிப்பிடத் தக்கது அதன் தகவல் சேமிப்புத் திறன் என்பதைப் பார்த்தோம். ஒரு நூலகத்திலுள்ள அனைத்து நூல்களின் தகவல்களையும் ஒரு கணிப்பொறியில் ஒரு கையகல மின்காந்த வட்டில் சேமிக்க முடியும். அப்படியெனில் பல கணிப்பொறிகளைக் கொண்ட பிணையத்தில் எவ்வளவு தகவல்களைச் சேமிக்க முடியும்? பல்லாயிரக் கணக்கான கணிப்பொறிப் பிணையங்களை உள்ளடக்கிய இணையத்தில் எவ்வளவு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள். எண்ணிப் பார்க்க முடியாத அளவு தகவல்கள் இணையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மனித குலம் இதுவரை திரட்டிய அறிவுக் களஞ்சியம் முழுக்க இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில் மிகையாகாது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், இலக்கியம் போன்ற வெவ்வேறு துறைகள் சார்ந்த தகவல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன. கலைக் களஞ்சியங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆலோசனை மையங்கள் என்னும் பல்வேறு வடிவங்களில் அவை சேமிக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், பதிப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வலையகங்களிலும் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலான தகவல்கள் இணையப் பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்பதும், குறிப்பிட்ட தகவல் எந்த நாட்டில், எந்தக் கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமலே அத்தகவலை மிக எளிதாகத் தேடிப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். தகவல் களஞ்சியங்களையும் தகவலைத் தேடிப்பெறும் முறைகளையும் இப்பாடப் பிரிவில் காண்போம்.

5.1.1 கலைக்களஞ்சியங்கள் (Encyclopedias)

அனைத்துவகைத் தகவல்களையும் அகரவரிசையில் அல்லது துறை வாரியாகத் தரும் நூலினைக் ’கலைக்களஞ்சியம்’ (Encyclopedia) என்கிறோம். ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா’ (Encyclopedia Britannica) மிகவும் செல்வாக்குப் பெற்ற கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அண்மைக்காலப் பதிப்பு (2007) 32 தொகுதிகளைக் கொண்டது. 65 ஆயிரம் கட்டுரைகளில் 4 கோடியே 40 லட்சம் சொற்களைக் கொண்டது.

24 ஆயிரம் விளக்கப் படங்கள் உள்ளன. இந்தக் கலைக் களஞ்சியம் புத்தக வடிவில் மட்டுமின்றி இணையத்தில் http://www.britannica.com என்னும் வலையகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவலை 7 நாட்களுக்கு மட்டும் இலவசமாகப் பெறலாம். அதன்பிறகு ஆண்டுக்கு 70 டாலர் கட்டணம் செலுத்திப் பெறலாம். இதேபோல 30 தொகுதிகளைக் கொண்ட ‘என்சைக்ளோபீடியா அமெரிக்கானா’ (Encyclopedia Americana) என்னும் கலைக்களஞ்சியமும் கட்டண அடிப்படையில் இணையத்தில் கிடைக்கிறது. இவை தவிர, ’காம்ப்டன்ஸ் என்சைக்ளோபீடியா’, ‘வேர்ல்டு புக் என்சைக்ளோபீடியா’ போன்ற கலைக் களஞ்சியங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. http://www.encyclopedia.com என்னும் வலையகம் 49 கலைக்களஞ்சியங்கள், 73 அகராதிகள் (Dictionaries) மற்றும் சொற்களஞ்சியங்களிலிருந்து (Thesaurus) தகவலைத் தேடித் தரும்.

‘விக்கிப்பீடியா’ என்பது இணையத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற கலைக்களஞ்சியம் (http://www.wikipedia.org) ஆகும். இதன் சிறப்புக் கூறுகள்: (1) இதில் தமிழ் உட்பட உலகின் 265 மொழிகளில் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. (2) எவர் வேண்டுமானாலும் தகவல்கள் தரலாம். (3) சேமிக்கப்பட்டுள்ள தகவல்களில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம், திருத்தம் செய்யலாம். (4) விக்கிப்பீடியாவின் அனைத்துத் தகவல்களும் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. ’விக்கி மீடியா ஃபவுண்டேஷன்’ என்னும் நிறுவனம் இணையப் பயனர்களின் பங்களிப்போடு இந்தத் திட்டப்பணியைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறது. http://ta.wikipedia.org என்னும் வலையகத்தில் தமிழ் மொழியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தேடிப் பெறலாம். பிற மொழிகளைவிட ஆங்கிலத்தில் கூடுதலான நிறைவான தகவல்கள் கிடைக்கின்றன (http://en.wikipedia.org)

5.1.2 ஆவணக் காப்பகங்கள் (Archives)

உலகின் மிகச்சிறந்த நூலகங்களில் சேமிக்கப்பட்டுள்ள நூல்களின் தொகுப்புகளை இணையத்தில் தேடிப்பெற முடியும். உலகப் புகழ்பெற்ற அனைத்துப் படைப்பாளிகளின் படைப்புகளும் இணையத்திலுள்ள ஆவணக் காப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, வில்லியம் சேக்ஷ்பியரின் அனைத்துப் படைப்புகளும் http://shakespeare.mit.edu என்னும் வலையகத்தில் கிடைக்கின்றன. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் அனைத்துக் கவிதைகளையும் http://www.wordsworthvariorum.com> என்னும் வலையகத்தில் காணலாம். (http://www.marxists.org) என்னும் வலையகத்தில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் அனைத்துப் படைப்புகளுடன் உலகின் 40 மொழிகளில் 400 ஆசிரியர்கள் மார்க்ஸியம் பற்றி எழுதியுள்ள நூல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

’இணைய ஆவணக் காப்பகம்’ (Internet Archive) என்பது ப்ரூஸ்டர் காலே (Brewster Kahle) என்பவர் 1996-இல் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் உருவாக்கியது. அதில் உலகப் புகழ்பெற்ற நூல்கள், படங்கள், நிகழ்படங்கள், பேச்சுரைகள், இசைப்பாடல்கள், கணிப்பொறி மென்பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன. http://www.archive.org என்னும் வலையகத்தில் இவற்றை இலவசமாகப் பெறலாம். இந்த வலையகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் ஏறத்தாழ 85 பில்லியன் பக்கங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ’நிகழ்நிலை இலக்கியம்’ (http://www.online-literature.com) என்னும் வலையகத்தில் ஆன்டன் செக்காவ், பைரன், டார்வின், டால்ஸ்டாய், கீட்ஸ், மாக்ஸிம் கார்க்கி போன்ற 260 படைப்பாளிகளின் 2874 நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

‘மதுரைத் திட்டப்பணி’ (Project Madurai) என்பது உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் திட்டமாகும். இதன்படி சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கிய நூல்கள் வரை எண்ணற்ற தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகள் இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. http://www.projectmadurai.org.vt.edu என்னும் வலையகத்தில் இவற்றை இலவசமாகப் பெறலாம். ஞாநி, எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், இரா.முருகன் போன்ற இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் அவர்களுக்கென வலையகங்கள் வைத்துள்ளனர். அவற்றில் அவர்களுடைய படைப்புகளைச் சேமித்து வைத்துள்ளனர். ‘தமிழ் மின்நூலகம்’ என அழைக்கப்படும் வலையகம் (http://www.tamilelibrary.org) தமிழ், தமிழர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஓரிடத்தில் திரட்டித் தருகிறது.

5.1.3 ஆலோசனை மையங்கள்

நமது உடல்நலம் குன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகிறோம். அதுபோல வழக்குகளை எதிர்கொள்ளும்போது வழக்குரைஞரிடம் ஆலோசனை பெறுகிறோம். குழந்தை வளர்ப்பு, மனநலம், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிய அந்தந்தத் துறையின் வல்லுநரை நாடுகிறோம். இதுபோல நம் வாழ்வின் பல்வேறு பிரச்சனை களுக்குத் தீர்வுதரும் ஆலோசனை மையங்கள் இணையத்தில் இருக்கின்றன. இணையத்தில் பெறப்படும் ஆலோசனை ‘மின்-ஆலோசனை’ (e-counseling) எனப்படும். பெரும்பாலான ஆலோசனைகள் இலவசமாகவும், குறிப்பிட்ட சில கட்டண அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன.

http://www.ecounselling.com என்னும் வலையகத்தில் காதல், திருமணம், குடும்பம், உடல்நலம், உணவுப் பழக்கம், குடிப்பழக்கம், கோபம், குழந்தைநலம், மன அழுத்தம், மணமுறிவு, பணம், இழப்பு, கவலை போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகள் கிடைக்கின்றன. http://www.webmd.com மற்றும் http://healthcare.indiamart.com போன்ற வலையகங்கள் ஏராளமான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றன. மருத்துவ ஆலோசனையுடன் ஒவ்வொரு மருந்தின் பண்புகள் மற்றும் பக்க விளைவுகளையும் விரிவாகத் தரும் வலையகங்களும் உள்ளன. நோய்கள், மருந்துகள் பற்றிய ஐயங்களுக்கு விளக்கமும் பெறலாம். http://www.doctorndtv.com என்பது அத்தகைய வலையகங்களுள் ஒன்று.

5.1.4 தகவல் தேடல்

இணையத்தில் தகவல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், தேவையான தகவலைத் தேடிப் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டால்தான் இணையத்தின் முழுப்பயனையும் நாம் நுகர முடியும். இரண்டு வகையாக இணையத்தில் தகவலைத் தேடிப் பெறலாம்:

(1) வலையகம் வழியாக: இந்த முறையில் தகவலை அறிய உங்களுக்குத் தேவையான தகவல் சேமித்து வைக்கப்பட்டுள்ள வலையகத்தின் முகவரியை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வலை உலாவியின் (Web Browser) முகவரிப் பட்டையில் அந்த வலையகத்தின் முகவரியை உள்ளிட்டு இயக்கினால் வலையகத்தின் முகப்புப் பக்கம் திறக்கும். அவ்வலையகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் தலைப்பு வாரியாகப் பட்டியலிடப்பட்டிருக்கும். பட்டியலில் உங்களுக்குத் தேவையான தொடுப்பினை (Link) இயக்கினால் தகவல் பக்கம் திறக்கப்படும். சில வேளைகளில் உள் தலைப்புகள் வழியாகவும் தகவல் பக்கத்தைச் சென்றடைய வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் தொடர்பான தகவல் http://www.ecounselling.com என்னும் வலையகத்தில் இருப்பதாக அறிய வருகிறீர்கள் எனில் அந்த வலையகம் திறந்து அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் Physical Health என்னும் தலைப்பில் Food, Diet and Exercise என்னும் தொடுப்பை இயக்க உங்களுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். பெரும்பாலான வலையகங்களில் முகப்புப் பக்கத்தில் தேடல் தொடுப்பு (Search Link) இருக்கும். உரைப்பெட்டியில் (Text Box) தேட விரும்பும் தகவலுக்கான சொல் அல்லது சொல்தொடரை உள்ளிட்டு Search என்னும் பொத்தானை அழுத்த, வேண்டிய தகவல் கிடைத்துவிடும்.

(2) தேடுபொறி வழியாக: இணையத்தில் தகவலைத் தேடித் தருவதற்கென்றே தனிச்சிறப்பான மென்பொருள்கள் உள்ளன. அவை ‘தேடுபொறிகள்’ (Search Engines) என்று அழைக்கப்படுகின்றன. கட்டுரைகள், படங்கள், பாடல்கள், செய்திகள், நூல்கள் எனக் குறிப்பிட்ட வகைத் தகவலைத் தேடுவதற்கெனத் தனிச்சிறப்பான தேடுபொறிகளும், அனைத்துவகைத் தகவலுக்கும் பொதுவான தேடுபொறிகளும் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பொதுப்பயன் தேடுபொறிகள் சில - அவற்றின் வலையக முகவரிகளுடன்:

(i) கூகுள் - http://www.google.com
(ii) யாகூ - http://www.yahoo.com
(iii) லைவ்சர்ச் - http://www.live.com
(iv) ஆஸ்க் - http://www.ask.com

லைவ்-சர்ச் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தேடுபொறியாகும். முன்பு ‘எம்எஸ்என் சர்ச்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. தேடுபொறி வழியாகத் தகவல் தேட வலையக முகவரி தெரிந்திருக்க வேண்டியதில்லை.

தேடுபொறியின் வலையகத்துக்குள் நுழைந்து, அதிலுள்ள தேடல் உரைப்பெட்டியில், தேட விரும்பும் தகவலைச் சரியாக உணர்த்தும்படியான சொல் அல்லது சொல்தொடரை உள்ளிட்டு, ‘தேடுக’ பொத்தானை அழுத்தினால் போதும். அது தொடர்பான தகவல் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து வலையகங்களின் பட்டியலும் கிடைக்கும். ஒவ்வொரு தொடுப்பாக இயக்கித் தகவல்களைப் படித்துக் கொள்ளலாம். சொல் அல்லது சொல்தொடரைத் தமிழ் மொழியிலும் உள்ளிடலாம். எடுத்துக்காட்டாக, கூகுள் தேடுபொறியின் வலையகத்தில் நுழையுங்கள். தேடல் உரைப்பெட்டியில் “தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்” என உள்ளிட்டு Google Search என்னும் பொத்தான் மீது சொடுக்கவும். சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்கள் பட்டியலிடப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் உள்ளிட வேண்டும்.

தேடுபொறி வலையகங்களின் ‘ஸ்பைடர்’ (Spider), ‘கிராலர்’ (Crawler) என்னும் தானியங்கு நிரல்கள், குறிப்பிட்ட காலக்கெடுவில் (தினமும் அல்லது வாரம்தோறும்), இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள வலைப் பக்கங்களைத் தேடி எடுத்துப் பொருள்வாரியாகத் தரவுத்தளத்தில் சேமித்துக் கொள்கின்றன. நாம் தகவல் தேடும்போது, தேடுபொறி மென்பொருள் அத்தகைய தரவுத்தளத்திலிருந்து பக்கங்களைத் தேடியெடுத்துத் தருகிறது