1.1 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி
தகவல்
தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்பாகத்
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கணிப்பொறித் தொழில்நுட்பம் மற்றும்
தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
அண்மைக் காலங்களில் இவ்விரு தொழிநுட்பங்களும் மாபெரும் வளர்ச்சியைக்
கண்டுள்ளன. வணிகத்தின் இருபெரும் பிரிவுகளான பொருள் விற்பனை, சேவை
வழங்கல் - இவ்விரண்டையும் பிரித்தறிய வேண்டும். ஒரு கணிப்பொறியை
விற்பது பொருள் விற்பனையில் அடங்கும். அக்கணிப்பொறியில் அவ்வப்போது
ஏற்படும் பழுதுகளைக் களைதல் சேவை வழங்கல் ஆகும். சேவை என்றால் கருணை
அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுவது என்று எண்ணிவிடக் கூடாது. அதுவும்
ஒரு பொருளை விற்பதுபோல விலைக்கு விற்கப்படுவதுதான். ஒரு மென்பொருளை
உருவாக்கிப் பலருக்கும் விற்பது பொருள் விற்பனையில் அடங்கும். குறிப்பிட்ட
வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஒரு மென்பொருளை உருவாக்கி வழங்குவதுடன்
அதனை நடைமுறைப்படுத்தித் தொடர்ந்து பராமரித்து வருவது சேவையில் அடங்கும்.
இந்தப் புரிதலின் அடிப்படையில் தகவல் தொழிநுட்பச் சேவைகளைப் பற்றியும்
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பற்றியும் இப்பாடப் பகுதியில்
அறிந்து கொள்வோம்.
1.1.1 உலகப் பொருளாதார வளர்ச்சி
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாக்கலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புள்ளவை. எனவே தகவல் தொழிநுட்ப வளர்ச்சியோடு தொடர்புடைய உலகப் பொருளாதார வளர்ச்சியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உலகப் பொருளாதார வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும். உலகின் செல்வ வளம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. அத்தகைய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்கள் தாம் பெறும் ஊதியத்தின் மதிப்புக்கு ஈடான உழைப்பைவிட அதிகமான உழைப்புச் சக்தியை உற்பத்தியில் செலவழிக்கின்றனர். இந்த உழைப்புச் சக்தியால் பெறப்படும் உபரி உற்பத்தி சந்தையில் உபரி மதிப்பாக மாறுகிறது. இந்த உபரி மதிப்பின் ஒருபகுதி முதலாளிக்கு இலாபமாகப் போய்ச் சேர்கிறது. இந்த இலாபமே மூலதனமாக உருவெடுக்கிறது.
உலகச் சந்தைகளில் உற்பத்தியாளர்களிடையே நிலவும் போட்டியினால் இலாபத்தைப் பெருக்கவும் அல்லது குறைந்த பட்சம் முந்தைய இலாபத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இயலாதது ஆகிவிடுகிறது. அவ்வாறு நிலைநிறுத்திக் கொள்ள ஏதேனும் செய்தாக வேண்டும். பொருளின் விலையைக் கூட்டலாமா? முடியாது. பொருளின் விலையைச் சந்தையில் நிலவும் போட்டியே நிர்ணயிக்கிறது. விலையைக் கூட்டினால் விற்பனை குறையும். இலாபமும் குறையும். எனவே (1) உற்பத்தியைப் பெருக்கலாம். (2) உற்பத்திச் செலவினைக் குறைக்கலாம். உற்பத்தியாளர்கள், முடிந்த அளவுக்கு உற்பத்தியைப் பெருக்கவும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கின்றனர். உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்களையும் புதிய வழிமுறைகளையும் புகுத்துகின்றனர்.
முதலாவதாக, உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறையைப் பார்ப்போம். முந்தைய உற்பத்தி முறைகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முடியாது. இக்காலச் சூழ்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்கவும் முடியாது. எனவே உற்பத்தியில் புதிய உற்பத்தி முறைகளைப் புகுத்த வேண்டும். உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்த வேண்டும். ஆக, உற்பத்திக்கான நவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது உற்பத்தியாளர்களின் கட்டாயத் தேவை ஆகிவிடுகிறது. இத்தகைய தேவைகளின் காரணமாகத் தகவல் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டது. அனைத்து உற்பத்தித் துறைகளிலும் சேவைத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்பட்டன. கணிப்பொறி மென்பொருள் பல விந்தைகளைப் புரிந்தது. கணிப்பொறி மென்பொருள் புகுத்தப்படாத உற்பத்தித் துறைகளோ சேவைத் துறைகளோ இல்லை என்கிற நிலை உருவானது. தனிப்பயனாக்க மென்பொருள்களின் (Customized Software) தேவை அதிகரித்தது. இதன் காரணமாய்த் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் வளர்ச்சி கண்டன. அச்சேவைகளை வழங்குவதற்கென்றே பல நிறுவனங்கள் உருவாயின.
இரண்டாவதாக, உற்பத்திச் செலவினைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். உற்பத்தியில் நவீன எந்திரங்களைப் புகுத்துவதன் மூலமும் விரையங்களைத் தவிர்ப்பதன் மூலமும் ஓரளவு உற்பத்திச் செலவுகளைக் குறைக்கலாம். இதற்கும் தொழில்நுட்பத்தின் தயவையே நாட வேண்டியுள்ளது. உற்பத்திச் செலவுகளைக் குறைக்க, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது அவசியமாகிறது. ஆதி காலம்தொட்டே நேரடியாகவும் மறைமுகமாகவும் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நவீன காலச் சூழலில் ஓர் தொழிலாளிக்கு ஏற்கெனவே கொடுத்துவரும் ஊதியத்தை நேரடியாகக் குறைக்க இயலாது. எனவே இதற்கான மாற்று வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியதாயிற்று. அத்தகைய மாற்று வழிமுறைதான் ‘அயலாக்கம்’ (Outsourcing) என்பது. அதாவது அதே வேலையை ஊதியம் குறைவாகப் பெற்றுக் கொண்டு செய்து முடித்துத்தரும் உழைப்பாளர்கள் இருக்கும் நாட்டுக்கே அத்தகைய வேலைகளைக் கொண்டுபோய் விடுவது. இவ்வாறு உற்பத்தி முறையில் புதிதாகப் புகுத்தப்பட்ட அயலாக்க நடைமுறைதான் தகவல் தொழிநுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கு ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை நவீனப்படுத்த உதவிய தகவல் தொழில்நுட்பச் சேவைகளைப் பற்றி அடுத்த பாடப் பிரிவிலும், ஊதியத்தைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்க உதவிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் குறித்து அதற்கடுத்த பாடப் பிரிவிலும் காண்போம்.
1.1.2 தகவல் தொழிநுட்பச் சேவைகள் (ITS)
தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறித்
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் அறிவோம். கணிப்பொறித்
தொழில்நுட்பம் இருபெரும் பிரிவுகளைக் கொண்டது.
(1)வன்பொருள் (Hardware):
உற்பத்தி (Production), பரிசோதிப்பு
(Testing), தரக்கட்டுப்பாடு (Quality Control), தொகுப்பாக்கம்
(Assembly), விற்பனை (Sale), நிறுவுகை (Installation), பராமரிப்பு
(Maintenance), பழுதுபார்ப்பு (Servicing), ஆய்வு மற்றும்
மேம்பாடு (Research and Development) எனப் பல்வேறு உட்பிரிவுகளை
உள்ளடக்கியது. இவற்றுள் நிறுவுகை, பராமரிப்பு, பழுதுபார்ப்பு
ஆகியவற்றைத் தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் (IT Services)
உள்ளடக்கலாம். வன்பொருள் நிறுவனங்கள் பெரும்பாலும் இச்சேவைகளைப்
பிற நிறுவனங்களின் மூலமாகவே வழங்குகின்றன. |
(2) மென்பொருள் (Software):
பகுப்பாய்வு (Analysis),
வடிவாக்கம் (Design), நிரலாக்கம் (Programming), பரிசோதிப்பு
(Testing), தரக்கட்டுப்பாடு (Quality Control), விற்பனை (Sale),
நிறுவுகை (Installation), பராமரிப்பு (Maintenance), ஆய்வு
மற்றும் மேம்பாடு (Research and Development) எனப் பல்வேறு
உட்பிரிவுகளைக் கொண்டது. இவை அனைத்தையுமே தகவல் தொழில்நுட்பச்
சேவையில் அடங்கலாம். |
இவைதவிர இரண்டுக்கும் பொதுவான
முறைமை நிர்வாகம் (System Administration), பிணைய நிர்வாகம் (Network
Administration), பிணைய மேலாண்மை (Network Management), பிணையப்
பாதுகாப்பு (Network Security), தரவுத்தள நிர்வாகம் (Database Administration)
போன்றவையும் தகவல் தொழில்நுட்பச் சேவையில் அடங்குகின்றன. உலகெங்குமுள்ள
நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை
வழங்கி வருகின்றன. அத்தகைய நிறுவங்களுள் குறிப்பிடத் தக்கவை: (1)
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (2) இன்ஃபோசிஸ் (3) காக்னிசன்ட் டெக்னாலஜீஸ்
(4) விப்ரோ (5) சத்யம் (6) போலாரிஸ் (7) பட்னி. இவை வழங்கும் தகவல்
தொழிநுட்பச் சேவைகளுள் சில:
-
முறைமை ஒருங்கிணைப்புச் சேவைகள் (Systems
Integration Services)
-
தகவல் மேலாண்மைச் சேவைகள் (Information
Management Services)
-
-
பயன்பாட்டு மேலாண்மை (Application
Management)
-
-
நிறுவனத் தரக்கட்டுப்பாட்டுச் சேவைகள்
(Enterprise Quality Services)
-
அகக்கட்டமைப்புச் சேவைகள் (Infrastructure
Services)
-
பழையன கழித்துப் புதியன புகுத்தல்
(Legacy Migration)
|
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்
உட்பட உலகில் பல்வேறு நாடுகளிலுள்ள வங்கி, காப்பீடு, நிதித் துறைகளைச்
சேர்ந்த நிறுவனங்கள் பலவற்றுக்கும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை
இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
1.1.3 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ITES)
உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவைகள் (ஐடீஇஎஸ் சேவைகள்) பல வளர்ச்சி பெற்றன எனப் பார்த்தோம்.
அவை நேரடியான வன்பொருள் மென்பொருள் தொடர்புடைய சேவைகள் அன்று. தகவல்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வணிகச் சேவைகள் ஆகும்.
வாகனங்கள், எந்திரங்கள், புத்தக வெளியீடு போன்ற உற்பத்தித் துறைகள்,
வங்கி, காப்பீடு, தொலைதொடர்பு, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள்
ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஐடீஇஎஸ் ஊடுருவியுள்ளது. இவ்வாறு பல
தரப்பட்ட துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ள ஐடீஇஎஸ் சேவைகள் சிலவற்றைப்
பட்டியலிடுவோம்:
-
அழைப்புதவி மையங்கள் (Call Centres)
-
நிதி மற்றும் கணக்குவைப்பு (Finance
and Account)
-
மனிதவளச் சேவைகள் (Human Resource
Services)
-
ஆவணமாக்கம் (Transcription)
-
மொழிபெயர்ப்பு (Translation)
-
வலையகச் சேவைகள் (Website Services)
-
பொறியியல் மற்றும் வடிவாக்கம் (Engineering
and Disign)
-
பல்லூடக உள்ளடக்க உருவாக்கம் (Multimedia
Content Development)
-
நிகழ்நிலைக் கல்வி (Online Education)
-
தரவு உள்ளீடும் தரவு வடிவ மாற்றமும்
(Data Entry & Data Coversion)
-
தகவல் சேமிப்பும் தகவல் தேடலும் (Data
Storage & Data Search)
-
சந்தை ஆய்வும் சந்தைப்படுத்தலும் (Market
Research Marketting)
-
நிகழ்நிலை விற்பனை (Online Sales)
-
நூல் வெளியீட்டு அச்சக முன்வேலைகள்
(Book Publishing Pre-press)
-
பிணைய மேலாண்மையும் பாதுகாப்பும் (Network
Management & Security)
|
இச்சேவைகளை பலவாறு வகைப்படுத்த முடியும். பின்புல
வணிகச் செயல்பாடுகள் (Back Office Operations), அறிவுச் செயல் அயலாக்கம்
(Knowledge Process Outsourcing), வாடிக்கையாளர் தொடர்பு சேவைகள்
(Customer Interactive Services), உள்ளடக்க உருவாக்கம் (Content
Development) என்றெல்லாம் வகைப்படுத்துவர். இவற்றுள் சிலவகைச் சேவைகளை
இனிவரும் பாடப் பிரிவில் படிப்போம். |