-
கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக, மின்னணுத்
தகவல்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப்படும் பணப் பரிமாற்றம்
‘மின்னணுப் பணப் பரிமாற்றம்’ எனப்படும். சுருக்கமாக ‘இஎஃப்டீ’
என்று கூறுவர். இணையம்வழி நடைபெறும் பல்வேறு வகையான பணப்
பரிமாற்றங்களும் ‘இஎஃப்டீ’ என்றே அழைக்கப்படுகின்றன.
-
மாத ஊதியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக
வரவு வைத்தல், கட்டணங்கள், தவணைத் தொகைகளை வங்கிக் கணக்கிலிருந்து
நேரடியாகக் கழித்தல், இணைய வங்கிச் சேவை மூலம் பணம் செலுத்துதல்,
பணம்செலுத்து அட்டைகள் மூலம் அங்காடிகளில் பொருள் வாங்குதல்
- இவையனைத்தும் மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் அடக்கம்.
-
மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும்
பெரும்பாலும் ‘பணம்செலுத்து நுழைவாயில்’ (Payment Gateway)
எனப்படும் தனிச்சிறப்பான தகவல் தொடர்புப் பிணையக் கட்டமைப்பு
வழியாகவே நிறைவேற்றப்படுகின்றன.
-
இணைய அங்காடி வலைத்துறைக்கும் (ஒரு
வலையகம் அல்லது ஐவிஆர்எஸ்) வங்கிக்கும் இடையேயும், வாடிக்கையாளர்
மற்றும் வணிகரின் வங்கிகளுக்கு இடையேயும் பணம்செலுத்து
தகவல் பரிமாற்றங்களை பணம்செலுத்து நுழைவாயில்களே நிறைவேற்றி
முடிக்கின்றன.
-
காசோலை, வரைவோலை வழியான பணப் பரிமாற்றம்
நடந்து முடிய ஐந்து முதல் பத்து நாட்கள் வரை ஆகலாம். மின்னணுப்
பணப் பரிமாற்றம் உடனே நடந்து முடிந்து விடுகின்றது.
-
மின்னணுப் பணப் பரிமாற்றம் எளிதானது,
விரைவானது, துல்லியமானது, செயல்திறன் மிக்கது, பிழையற்றது,
பத்திரமானது, பாதுகாப்பானது, செலவு குறைந்தது, கணக்கு
வைப்புகள் எளிது, மோசடி குறைவு.
-
அமெரிக்க அரசின் புள்ளி விவரப்படி,
ஒரு காசோலை மூலமான பணம் செலுத்துகைக்கு ஆகும் செலவு 1.03
டாலர். ஆனால் இஎஃப்டீ மூலமான பணம் செலுத்துகைக்கு ஆகும்
செலவு 10.5 சென்டுகள் மட்டுமே.
-
மின்னணுப் பணப் பரிமாற்றத்தைத் தொடங்கிவிட்டால்
இடையில் நிறுத்த முடியாது. மோசடி, பழுது, பிழை காரணமாக
இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது தடயங்களைத் திரட்டுவதிலும்,
தகராறுகளைத் தீர்த்து வைப்பதிலும் சிக்கல் உள்ளது. மின்னணுப்
பணப் பரிமாற்றத்தில் நூறு சதவீத தரவுப் பாதுகாப்பு இன்னும்
எட்டப்படவில்லை.
-
மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் பணம்செலுத்து
அட்டைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (1)
கையிருப்பில் இருக்கும் பணத்தைச் செலவழிக்கும் அட்டைகள்.
(2) கையில் பணம் இல்லாத நிலையிலும் கடனாகச் செலவழிக்கும்
அட்டைகள்.
-
பணம்செலுத்து அட்டைகள் பலவகைப்படும்:
கடன் அட்டை: முதன்முதலாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
கையில் பணம் இல்லத போதும் செலவழித்தபின் கடனை அடைக்கலாம்.
கடனில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டு, தொடர்ந்து செலவழிக்கலாம்.
-
பற்று அட்டை: வங்கிக் கணக்கில் கையிருப்புள்ள
பணத்தைச் செலவழிக்க வழங்கப்படுவது. காசோலை போலப் பயன்படுத்தலாம்.
ஏடீஎம்மில் பணம் எடுக்கலாம். ’காசோலை அட்டை’, ‘ஏடீஎம்
அட்டை’ என்றும் கூறுவர்.
-
கட்டண அட்டை: குறுகிய காலக் கடன்
அட்டை. அந்தந்த மாதத்தில் ஏற்படும் கடனை அந்தந்த மாதத்திற்குள்
முழுமையாக அடைத்துவிட வேண்டும். கடனுக்கு வட்டி கிடையாது.
-
பண அட்டை: பற்று அட்டையில் ஒருவகை.
வங்கியில் பணம் செலுத்தி வாங்கலாம். முன்செலுத்திய தொகை
அளவுக்குச் செலவழிக்கலாம். பணம் தீர்ந்தபின் ஏடீஎம்மில்
பணத்தை ஏற்றிக் கொள்ளலாம்.
-
மதிப்பு இருத்திய அட்டை: பண அட்டையில்
ஒருவகை. மதிப்பு அட்டையிலேயே இருத்தி வைக்கப்படிருக்கும்.
வாங்கியபின் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். போகுவரத்துக்
கட்டண அட்டை, தொலைபேசி அழைப்பு அட்டை இந்த வகையைச் சேர்ந்தவை.
-
வாகன அட்டை: வாகனங்களுக்கு எரிபொருள்
வாங்க, பழுது மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டும்
பயன்படுத்தலாம். முதன்முதலில் வெளியிடப்பட்ட கடன் அட்டை
வாகன அட்டையே ஆகும்.
-
அன்பளிப்பு அட்டை: வங்கிகளும், சில்லரை
அங்காடிகளும் வாடிக்கை யாளர்களுக்கு வழங்குவது. வங்கிகள்
வழங்குவதை எந்தச் செலவுக்கும் பயன்படுத்தலாம். அங்காடி
வழங்குவதை அங்காடியில் மட்டுமே பயன்படுத்தலாம். மதிப்பு
இருத்திய அட்டையைப் போன்றது.
-
சூட்டிகை அட்டை: பல்பயன் அட்டை. நுண்சில்லு
பொருத்தப்பட்டது. அடையாள அட்டையாகவும், வாகன ஓட்டுரிமமாகவும்,
பண அட்டையாகவும் பயன்படுதலாம். பல்வேறு தகவல்களைப் பதியலாம்.
மாற்றியமைக்கலாம்.
-
மின்பணம்: அட்டை எதுவுமே இல்லாமலும்
பணப் பரிமாற்றம் சாத்தியம். ஊதியத்தை வங்கிக் கணக்கில்
வரவு வைத்தல், இணைய வங்கிச் சேவை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து
பணம் செலுத்துதல் ஆகியவற்றையில் பயன்படுத்தப்படுவது ‘மின்பணம்’
எனலாம்.
-
பணம்செலுத்து அட்டைகள் மூலம் வங்கிக்
கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம், பணம் போடலாம், பணம் செலுத்தலாம்,
பணம் ஏற்றலாம். பொருள் வாங்கலாம், கடன் பெறலாம், குறு
அறிக்கை பெறலாம்.
-
பணம்செலுத்து அட்டைகளை எடுத்துச்
செல்லல், பாதுகாத்தல், கையாளல் எளிது. எதிர்பாராத செலவுகளுக்குக்
கைகொடுக்கும். தொலைந்தாலும், களவு போனாலும் உடனே செயலிழக்கச்
செய்யலாம். வேறெவரும் பயன்படுத்தி இழப்பு ஏற்படுத்த முடியாது.
ரகசியக் குறியீட்டு எண்ணால் பாதுகாப்புண்டு.
-
பணம்செலுத்து அட்டைகளில் சில பலவீனங்களும்
உண்டு. கையில் பணம் இல்லாத போது கடன்வாங்கிச் செலவழிக்கத்
தூண்டும். கடவுச்சொல்லைத் திருடி மோசடி செய்யவும் வாய்ப்புள்ளது.
-
அமெரிக்காவில்தான் முதன்முதலில் கடன்
அட்டை அறிமுகப்படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு
அட்டைகளும் வெளிவந்தன. பணம்செலுத்து அட்டைகள் மூலமான பணப்
பரிமாற்றம் பெருமளவு வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து மோசடிகளும்,
சிக்கல்களும் பெருகின. எனவே வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு
அளிக்க, அமெரிக்க அரசு 1978-இல் மின்னணுப் பணப் பரிமாற்றச்
சட்டத்தை இயற்றியது.
-
மின்னணுப் பரிமாற்றம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு
அளிக்கப்படும் அறிக்கைகளில் பிழைகள் இருந்தாலோ, விவரங்கள்
விடுபட்டிருந்தாலோ எழுத்து மூலமாகப் புகார் அளித்து நிவாரணம்
தேடச் சட்டம் வழிசெய்கிறது.
-
அறிக்கையில் உள்ள பிழைகள் பற்றிப்
புகார் அளித்து பத்து நாட்களுக்குள் விசாரணை செய்து விளக்கம்
தரவேண்டும். புகார் அளிக்கப்பட்ட இழப்புத் தொகையை வாடிக்கையாளர்
கணக்கில் செலுத்திவிட்டு, விசாரணைக்கு 45 நாட்கள் எடுத்துக்
கொள்ளலாம்.
-
அங்காடிகளில் பொருள்வாங்க அட்டை மூலம்
பணம் செலுத்தலில் பிழை ஏற்பட்டுள்ளதை அறிக்கையில் அறியவந்தால்
உடனே புகார் அளிக்கலாம். 10 நாட்களுக்குள் விசாரித்து
விளக்கம் தரவேண்டும். வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இழப்புத்
தொகையைச் செலுத்திவிட்டு விசாரணை செய்ய 90 நாட்கள் எடுத்துக்
கொள்ளலாம்.
-
கடன் அட்டை தொலைந்து போனால் வாடிக்கையாளருக்கு
ஏற்படும் அதிகப் பட்ச இழப்பு 50 டாலர் மட்டுமே. பற்று
அட்டை தொலைந்து போனால் 48 மணி நேரத்துக்குள் புகார் செய்தால்
50 டாலர் இழப்பு. 60 நாட்களுக்குள் புகார் அளித்தால் 500
டாலர் இழப்பு. அதன்பிறகு அளித்தால் ஏற்படும் இழப்புகளுக்கு
நிறுவனம் பொறுப்பேற்காது.
-
வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து
மூன்றாவது நபருக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவுகளில் பணம்செலுத்த
முன்-அனுமதிக்கப்பட்ட பணப் பரிமாற்றங் களை வாடிக்கையாளரின்
வாய்மொழி அல்லது எழுத்து மூலமான கோரிக்கை மூலம் நிறுத்தி
வைக்கலாம். வாய்மொழிக் கோரிக்கை எனில் 14 நாளுக்குள் எழுத்து
மூலமான வேண்டுகோளை அனுப்பிவிட வேண்டும். பிற மின்னணுப்
பணப் பரிமாற்றங்களை இடையில் நிறுத்த முடியாது.
-
முன் அனுமதிக்கப்பட்ட மின்னணுப் பரிமாற்றங்களில்
தொகையில் மாறுபாடு இருப்பின் அதுபற்றி முன்கூட்டியே வாடிக்கையாளருக்குத்
தெரிவிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள
வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவ்விதி பொருந்தாது.
-
அமெரிக்கச் சட்டம் வாடிக்கையாளருக்குப்
பல சட்ட உரிமைகளை வழங்குகிறது. மின்னணுப் பணப் பரிமாற்றச்
சேவையை வழங்கும் நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்கு பல்வேறு
தகவல்களை வழங்க வேண்டும்: அனுமதிக்கப்படும் பரிமாற்ற வகைகள்,
அவற்றுக்கான கட்டணங்கள், பரிமாற்ற எண்ணிக்கை தொடர்பான
வரம்புகள், பணப் பட்டுவாடாவை நிறுத்தி வைக்கும் உரிமைகள்,
பிழைகள் பற்றிய புகார் அளிக்கும் நடைமுறைகள், புகார் தெரிவிக்க
நிதி நிறுவனப் பிரதிநிதியின் தொலைபேசி எண், முகவரி போன்ற
விவரங்கள், வாடிக்கையாளர் கணக்கின் நிலை, பரிமாற்றங்கள்
பற்றிய காலக்கெடு அறிக்கைகள், இன்னும் பல.
-
வாடிக்கையாளர் தனது சம்பளம் மற்றும்
பிற பலன்களை இஎஃப்டீ மூலம் பெற, தாம் விரும்பும் வங்கி
அல்லது நிதிநிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வாடிக்கையாளருக்கு
உண்டு.
-
இந்திய ரிசர்வ் வங்கி 1994-இல் திரு.டபிள்யூ.எஸ்.சரஃப்
அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தியாவில்
மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமையை நிறுவ அக்குழு பரிந்துரைத்தது.
-
மின்னணுப் பணப் பரிமாற்றம் தொடர்பான
சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கிட, 1995-ஆம் ஆண்டு
ரிசர்வ் வங்கி, திருமதி.கே.எஸ்.ஷீரே தலைமையில் ஒரு குழுவை
அமைத்தது.
-
ஷீரே குழு, ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்
கீழ் இஎஃப்டீ விதிமுறைகளை வெளியிடவும், வங்கியாளரின் நூல்கள்
தடயச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யவும், மின்னணுப்
பணப் பரிமாற்றச் சட்டம், கணிப்பொறி முறைகேடு மற்றும் தரவுப்
பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை இயற்றவும் பரிந்துரைத்தது.
-
இந்திய அரசு ரிசர்வ் வங்கிச் சட்டம்
58-வது பிரிவின் கீழ் ஆர்பிஐ-இஎஃப்டீ (RBI-EFT) விதிமுறைகளை
வகுத்தது. வங்கியாளர் நூல்கள் தடயச் சட்டத்தில் திருத்தங்கள்
செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் இயற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச்
செய்தது.
-
ரிசர்வ் வங்கிச் சட்டம் 58-வது பிரிவின்
கீழ் வகுக்கப்பட்ட ஆர்பிஐ-இஎஃப்டீ விதிமுறைகள் ‘தேசிய
மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமையாக’ 2005-இல் நடைமுறைக்கு
வந்தது. நாட்டிலுள்ள 85 வங்கிகளின் 44,731 கிளைகள் இந்த
முறைமையில் பங்கு வகிக்கின்றன.
-
மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும்
ரிசர்வ் வங்கியின் வழியாகவே நடைபெறும். அனைத்து வங்கிகளும்
மின்னணுப் பணப் பரிமாற்றத் தகவல்களை உடனுக்குடன் ரிசர்வ்
வங்கி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும்
குறிப்பிட்ட நேரங்களில் இந்தப் பரிமாற்றங்களை ரிசர்வ்
வங்கி செயல்படுத்தும்.
-
மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் ஒரு
பரிமற்றத்தில் அனுப்பப்படும் தொகைக்கு உச்ச வரம்பு எதுவும்
இல்லை. ரிசர்வ் வங்கிக்குச் செயலாக்கக் கட்டணம் எதுவும்
செலுத்தத் தேவையில்லை. வங்கிகள் தம் விருப்பப்படி சேவைக்
கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
-
மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் தனியார்
மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் பங்கு 43%, பொதுத்துறை
வங்கிகளின் பங்கு மிகவும் குறைவு (12%).
-
இந்தியாவில் மொத்தம் 36,314 ஏடீஎம்கள்
உள்ளன. அவற்றுள் மூன்றில் இருபங்கு பொதுத்துறை வங்கிகளைச்
சேர்ந்தவை. ஆனால் தனியார் வங்கிகளின் குறைவான ஏடீஎம்களைப்
பொதுத்துறை வங்கிகளுக்கு இணையான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
-
பொதுத்துறை வங்கிகளின் பொதுவான வணிக
நடவடிக்கைகள் பலமடங்கு வளர்ச்சி பெற்றுள்ள போதிலும் கடன்
அட்டைப் பணப் பரிமாற்றங்களில் தனியார் வங்கிகளோடு போட்டி
போட முடியவில்லை.
-
பொதுத்துறை வங்கிகள் இன்னும் சிறந்த
முறையில் ஏடீஎம் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.