4.0 பாட முன்னுரை
மேலாண்மைத் தகவல் முறைமைகள் (Management Information Systems) பல வகைப்படும். எனினும் ‘சரியான தகவலை (right information), சரியான நேரத்தில் (at right time), சரியான நபருக்கு (to right person), சரியான வடிவமைப்பில் (in right format) தந்து, சரியான முடிவெடுக்க (to take right decision) உதவுவதே மேலாண்மைத் தகவல் முறைமைகளின் பொதுவான பண்புக்கூறாகும். மேலாண்மைத் தகவல் முறைமை என்றாலே சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தீர்மானிப்பதில் உதவுவது என்ற போதிலும், மேலாண்மை அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்கில் ’தீர்மானிப்பு உதவி முறைமை’ (Decision Support System) என்னும் ஒரு தனிச்சிறப்பான மேலாண்மைத் தகவல் முறைமை உருவாக்கப்பட்டது.
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு, கீழ்நிலை, இடைநிலை, மேல்நிலை என மூன்று அடுக்குகளாக அமைகின்றது. இந்த மூன்று அடுக்குகளும் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக, முறையே, செயல்பாட்டு (Operational), செயல்நுட்ப (Tactical), செயல்திட்ட (Strategic) முடிவுகளை மேற்கொள்கின்றன. முடிவெடுக்கும் பணியில் பல்வேறு வகையான தகவல் முறைமைகள் உதவுகின்றன என்ற போதிலும் தீர்மானிப்பு உதவி முறைமையானது ஓரளவு இடைநிலை மேலாண்மைக்கும், பெருமளவு மேல்நிலை மேலாண்மைக்கும் தீர்மானிப்பில் உதவி புரிகின்றது.
தீர்மானிப்பு உதவி முறைமைகள் வணிக நிறுவனங்களின் மேலாண்மைக்கென உருவாக்கப்பட்ட போதிலும் காலப்போக்கில் அவை மருத்துவம், வங்கி, பங்குச் சந்தை, பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளிலும் பயன்படுத்தப் படலாயிற்று. முறைமையோடு பயனருக்கு இருக்கும் உறவுநிலை, பொதுப்படையான செயல்பாடு, உதவும் பாங்கு இவற்றின் அடிப்படையில் தீர்மானிப்பு உதவி முறைமைகளை வல்லுநர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.
கணிப்பொறியியல் ஆய்வில் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) ஒரு முக்கிய மைல்கல்லாகும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானிப்பு உதவி முறைமை ‘அறிவுசார் முறைமை’ (Knowledge-based System) அல்லது ’வல்லுநர் முறைமை’ (Expert System) என்று அழைக்கப்படுகிறது. வல்லுநர் முறைமைகள் பல புதிய துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கே உரிய சிறப்புக்கூறுகளும் வரம்பெல்லைகளும் உள்ளன. தீர்மானிப்பு உதவி முறைமைகளைப் பற்றிப் பொதுவாகவும், வல்லுநர் முறைமை பற்றிச் சிறப்பாகவும் இப்பாடத்தில் கற்போம்.
|