4.1 மேலாண்மை அடுக்குகளும்
மேலாண்மை முடிவுகளும்
மேலாண்மை அடுக்குகளைப் பற்றியும், மேலாண்மையின் பல்வேறு அடுக்குகளுக்குப் பயன்படும் தகவல் முறைமைகள் (Information Systems) பற்றியும் நாம் ஏற்கெனவே முந்தைய பாடம் (பாடம் 1.3 - நிறுவனத்தின் அகக்கட்டமைப்பு) ஒன்றில் சுருக்கமாகப் படித்திருக்கிறோம். அப்பாடத்தில் ஒரு நிறுவனத்தின் அகக்கட்டமைப்பு எப்படி அமைந்துள்ளது, எப்படிச் செயல்படுகிறது என்கிற கண்ணோட்டத்தில் பல விவரங்களை அறிந்து கொண்டோம். அவற்றுள் சில விவரங்களை மீண்டும் இங்கே நினைவு கூர்வோம். ஒவ்வொரு மேலாண்மை அடுக்கிலும் ஒவ்வொரு வகையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, எந்த அடுக்கில் எந்த வகையான முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றியும், அம்முடிவுகளின் தனிச்சிறப்பான பண்பியல்புகள் பற்றியும் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.
4.1.1 மேலாண்மை அடுக்குகள் (Management Levels)
ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில்
ஏதேனும் ஒரு நடவடிக்கையில் தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும
(Decision Making) அதிகாரம் பெற்ற அமைப்பே ’மேலாண்மை அமைப்பு’ எனக்
கருதப்படுகிறது. மேலாண்மை அமைப்பு என்பது நிறுவனத்தின் தலைவர் தொடங்கி
அனைத்து மட்டங்களிலுமுள்ள கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள், இயக்குநர்கள்,
செயலதிகாரிகள், கணக்காளர்கள் போன்ற நிர்வாகிகள் அனைவரையும் உள்ளடக்கியதாகும்.
முடிவெடுக்கும் அதிகாரமற்ற பணியாளர்கள் (workers) மேலாண்மை அமைப்பின்
அங்கமாகக் கருதப்படார். ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு பெரும்பாலும்
மூன்று அடுக்குகளாக அமையும்:
(1) கீழ்நிலை மேலாண்மை (Low Level Management):
இந்த அடுக்கில் அனைத்துப் பணிப்பிரிவுகளிலும் உள்ள மேற்பார்வையாளர்களும், கண்காணிப்பாளர்களும் அடங்குவர். இடைநிலை மேலாண்மை வகுத்துக் கொடுத்த இலக்குகளின்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளைத் திட்டமிடுவதும் அவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கொடுப்பதும் இவர்களின் பணியாகும். மூன்று அடுக்குகளையும் ஒப்பிடுகையில் இவ்வடுக்கில் இடம்பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கீழ்நிலை மேலாண்மை அமைப்பினர் உற்பத்தி, வினியோகம், விற்பனை போன்ற அன்றாடப் பணிகளை மேலாண்மை செய்கின்றனர். |
(2) இடைநிலை மேலாண்மை (Middle Level Management):
இடைநிலை மேலாண்மை என்பது, பல்வேறு பணிப்பிரிவுகளின் மேலாளர்கள் (Managers), துணை மேலாளர்களை (Assistant Managers) உள்ளடக்கியதாகும். உற்பத்தி, வினியோகம், விற்பனை, நிதி ஆகியவற்றில் மேல்நிலை மேலாண்மை வரையறுக்கும் இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடலும், பல்வேறு பணிப்பிரிவினருக்குப் பணி இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைச் செய்துமுடிப்பதற்கான செயல்நுட்பங்களை வகுத்துக் கொடுப்பதும் இவர்களின் வேலையாகும். அவ்வப்போது கூடி அதுவரை அடைந்த பலன்களை மதிப்பீடு செய்வதும், தேவைப்படின் பணி இலக்குகளை மறுநிர்ணயம் செய்வதும் இவர்களின் பணியாகும். |
(3) மேல்நிலை மேலாண்மை (High Level Management):
மேல்நிலை மேலாண்மை என்பது இயக்குநர்களின் குழுவையும் (Board of Directors) அக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் (Chairman), ஒரு முதன்மைத் தலைமை அதிகாரி (Chief Executive Officer - CEO) அல்லது மேலாண்மை இயக்குநரையும் (Managing Director - MD), துணைத் தலைவர்களையும் (Vice-Presidents), நிர்வாகக் குழுவையும் கொண்டிருக்கும். தலைவர் என்பவர் நிறுவனத்தின் உடைமையாளர் அல்லது முதலாளியாக இருக்கலாம். நிறுவனத்தின் உள்ளார்ந்த குறிக்கோள்களையும் நோக்கங்களையும் திட்டங்களையும் இவர்களே முடிவு செய்வர். |
4.1.2 செயல்பாட்டு முடிவுகள் (Operational Decisions)
ஒவ்வொரு நாளும் எந்த எந்திரத்தை இயக்குவது, எந்த
எந்திரத்துக்குப் பராமரிப்புப் பணிக்காக ஓய்வு கொடுப்பது, எத்தனை
பணியாளர்களுக்கு விடுப்புக் கொடுப்பது, அப்படிக் கொடுத்தால் எவருக்கெல்லாம்
கூடுதல் பணிநேரம் (overtime) வழங்குவது, ஒவ்வொரு விற்பனை முனையத்துக்கும்
எவ்வளவு பொருட்களை அனுப்புவது என்பது போன்ற முடிவுகளை ’செயல்பாட்டு
முடிவுகள்’ (Operational Decisions) என்கிறோம். இத்தகைய செயல்பாட்டு
முடிவுகளை மேற்கொள்வதும் அவற்றை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவதும்
கீழ்நிலை மேலாண்மையின் தலையாய பணியாகும். செயல்பாட்டு முடிவுகள்
சில குறிப்பிட்ட பண்பியல்புகளைக் கொண்டுள்ளன:
-
முற்றிலும் கட்டமைக்கப்பட்ட முடிவுகளாகும்
(structured decisions).
-
பெரும்பாலும் முன்பே வரையறுக்கப்பட்ட
புறமுக முடிவுகளாக (objective decisions) இருக்கும்.
-
உற்பத்தி, வினியோகம், விற்பனை தொடர்பான
உள்ளீடுகளின் அடிப்படையில் தானியக்க முறையில் நிர்ணயிக்கப்படும்
முடிவுகளாக இருக்கும்.
-
பெரும்பாலும் கணிப்பொறி நிரலே முடிவுகளை
வெளியிடும். மேலாண்மை அமைப்பில் உள்ளவர்களின் அகமுகத்
தலையீடு (subjective cosideration) தேவையில்லை.
-
அன்றாடச் செயல்பாடுகளை நெறிப்படுத்துபவை.
-
அடிக்கடி எடுக்கப்பட வேண்டியிருக்கும்.
தினமும், ஒருநாளில் பலமுறைகூட எடுக்க வேண்டியிருக்கும்.
|
4.1.3 செயல்நுட்ப முடிவுகள் (Tactical Decisions)
இடைநிலை மேலாண்மையானது,
பல்வேறு பணிப்பிரிவினருக்குப் பணி இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைச்
செய்து முடிப்பதற்கான செயல்நுட்பங்களை வகுத்துக் கொடுத்து, உற்பத்தி,
வினியோகம், விற்பனை, நிதி ஆகியவற்றில் இலக்குகளை எட்டுவதற்காக எடுக்கப்படும்
முடிவுகளும், மேல்நிலை மேலாண்மையின் செயல்திட்டங்களை நிறைவேற்ற அவ்வப்போது
மேற்கொள்ளும் முடிவுகளும் செயல்நுட்ப முடிவுகள் (Tactical Decisions)
எனப்படுகின்றன. செயல்நுட்ப முடிவுகள் சில பண்பியல்புகளைக் கொண்டுள்ளன:
-
ஓரளவு கட்டமைக்கப்பட்ட முடிவுகளாகும்
(semi-structured decisions).
-
பெரும்பாலும் முன்வரையறுக்கப்பட்ட
புறமுக முடிவுகளாக (objective decisions) இருக்காது. ஓரளவு
அகமுகத் தலையீடு (subjective cosideration) தேவைப்படும்
முடிவுகளாக இருக்கும்.
-
அடிக்கடியோ, எப்போதோ எடுக்கப்படும்
முடிவுகள் அல்ல. அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளாகும்.
|
4.1.4 செயல்திட்ட முடிவுகள் (Strategic Decisions)
நிறுவனத்தை விரிவாக்குதல்,
பிற நிறுவனத்தை வாங்குதல், புதிய பொருளை உற்பத்தி செய்தல், இழப்பு
ஏற்படும் பொருளின் உற்பத்தியை நிறுத்திவிடல், வேறு வணிகத்தில் முதல¦டு
செய்தல் போன்ற நிறுவனம் தொடர்பான அதிமுக்கிய முடிவுகள் செயல்திட்ட
முடிவுகள் (Strategic Decisions) எனப்படுகின்றன. இத்தகைய செயல்திட்ட
முடிவுகளை மேல்நிலை மேலாண்மையே எடுக்கும். நிறுவனத்தின் உள்ளார்ந்த
குறிக்கோள்களையும் நோக்கங்களையும் திட்டங்களையும் இவர்களே முடிவு
செய்வர். செயல்திட்ட முடிவுகள் சில பண்பியல்புகளைக் கொண்டிருக்கும்:
-
முற்றிலும் கட்டமைக்கப்படாத முடிவுகளாகும்
(unstructured decisions).
-
மேலாண்மைத் தகவல் முறைமை முடிவெடுக்க
ஆலோசனை மட்டுமே வழங்கும். முடிவெடுப்பதில் மேலாண்மை அமைப்பில்
உள்ளவர்களின் அகமுகத் தலையீடு (subjective cosideration)
தேவை.
-
அடிக்கடி எடுக்கப்பட வேண்டிய முடிவுகள்
அல்ல. எப்போதேனும் அரிதாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளாகும்.
|
|