4.2 தீர்மானிப்பு
உதவி முறைமையின் செயல்பாடும் பயன்பாடும்
வணிக நடவடிக்கைகளில் மேலாண்மை அமைப்புக்குப் பயன்படக் கூடிய பல்வேறு தகவல் முறைமைகளைப் பற்றி ஏற்கெனவே அறிந்துள்ளோம். அவற்றுள் மேலாண்மைத் தீர்மானிப்புகளில் உதவக்கூடிய சிறப்புவகைத் தகவல் முறைமை ‘தீர்மானிப்பு உதவி முறைமை’ எனப்படுகிறது. இத்தகவல் முறைமை பல்கலைக் கழக ஆய்வுக் கூடங்களில் கருக்கொண்டு, விமானப் போக்குவரத்து மேலாண்மைப் பணிகளில் வளர்ச்சி பெற்றது. இன்றைக்கு மருத்துவம், வங்கி, பங்குச் சந்தை, இயற்கை அறிவியல் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வரையறுப்பினையும் வரலாற்றையும், கட்டமைப்புக் கூறுகளையும், செயல்பாட்டையும் பயன்பாட்டையும், இதனால் பெறப்படும் பலன்களையும் இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.
4.2.1 வரையறுப்பும் வரலாறும்
வணிகம் மற்றும் நிறுவனத் தீர்மானிப்பு நடவடிக்கைகளில் உதவி செய்வதற்கென உருவாக்கப்பட்ட, கணிப்பொறி அடிப்படையிலான சிறப்புவகை தகவல் முறைமை ‘தீர்மானிப்பு உதவி முறைமை’ என்று அழைக்கப்படுகிறது. இது ஊடாடல் மென்பொருளை (Interactive Software) அடிப்படையாகக் கொண்ட முறைமையாகும். உதிரித் தரவுகளிலிருந்து திரட்டப்பட்ட பயனுள்ள தகவல்கள், ஆவணங்கள், சொந்த அறிவு மற்றும் வணிக மாதிரியங்களைக் (business models) கொண்டிருக்கும். நிறுவனச் செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்வு காணவும் முடிவுகளை மேற்கொள்ளவும் தீர்மானிப்பாளர்களுக்கு உதவுகிறது.
1950-களின் பிற்பகுதியிலும், 1960-களின் தொடக்கத்திலும் கார்னெஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிறுவனத் தீர்மானிப்பு (Organisational Decision Making) பற்றிக் கருத்துரு ரீதியான ஆய்வுகள் நடைபெற்று வந்தன. 1960-களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஊடாடல் கணிப்பொறி முறைமைகள் (Interactive Computer Systems) பற்றிய ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த இரு ஆய்வுப் பணிகளின் சங்கமத்தில் 1970-களின் மத்தியில் ’தீர்மானிப்பு உதவி முறைமை’ என்னும் கருத்துரு ஒரு தனி ஆய்வுக் களமாக உருவாகியது. 1980-களில் ஆய்வுப் பணிகள் தீவிரம் அடைந்தன. அதன் பலனாக, ஒற்றைப் பயனர், மாதிரிய அடிப்படையிலான தீர்மானிப்பு உதவி முறைமையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத் தகவல் முறைமை (Executive Information System), குழுத் தீர்மானிப்பு உதவி முறைமை (Group Decision Support System), நிறுவனத் தீர்மானிப்பு உதவி முறைமை (Organisational Decision Support System) ஆகியவை உருவாக்கப்பட்டன.
1987-ஆம் ஆண்டு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் யுனைட்டடு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ‘வாசல் ஒப்படைப்புத் திரைக்காட்சி முறைமை’ (Gate Assignment Display System) என்னும் தீர்மானிப்பு உதவி முறைமையை உருவாக்கிக் கொடுத்தது. இந்த முறைமை முதன்முதலாக சிகாகோவில் ஓ’ஹரே சர்வதேச விமான நிலையத்திலும், டென்வர் கொலோராடோவில் ஸ்டேப்பிள்டன் விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விமான நிலையங்களில் விமானம் தரையிறங்கு நடவடிக்கைகளை மேலாண்மை செய்வதில் இந்த முறைமை உதவி புரிந்தது. விமானப் பயணத் தாமதங்களைக் கணிசமாகக் குறைப்பதில் பங்காற்றியதால் நம்பகமான தீர்மானிப்பு உதவி முறைமையாகச் செல்வாக்குப் பெற்று விளங்கியது.
1990-களின் தொடக்கத்தில் மீவுரை (Hyper Text), தரவுக் கிடங்கு (Data Warehousing), நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம் (On-Line Analytical Processing - OLAP) ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தீர்மானிப்பு உதவி முறைமையின் செயல்பரப்பை விரிவாக்கியது. தரவுத்தள ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மனிதர்-கணிப்பொறி ஊடாடல் (Human-Computer Interaction), பாவிப்பு வழிமுறைகள் (Simulation Methods), மென்பொருள் பொறியியல் (Software Engineering), தொலை தகவல்தொடர்பு (Telecommunication) ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புத்தாக்கங்கள் தீர்மானிப்பு உதவி முறைமையின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தன. காலப்போக்கில் மேலாண்மையில் மிகவும் இன்றியமையாத கூறாகத் தீர்மானிப்பு உதவி முறைமை இடம்பெறலாயிற்று.
4.2.2 கட்டமைப்பும் செயல்பாடும்
தீர்மானிப்பு உதவி முறைமையின் கட்டமைப்புப்
பல்வேறு உறுப்புகளை உள்ளடக்கியது. அவற்றுள் இன்றியமையாத உறுப்புகளாக
ஐந்தினைக் குறிப்பிடலாம்:
(1) கணிப்பொறிப் பிணையம் (Computer Network):
குறும்பரப்பு, விரிபரப்புப் பிணையங்கள் (LANs, WANs), தரவுத்தள வழங்கிகள் (Database Servers), தொலை தகவல் தொடர்பு இணைப்புகள் (Telecommunication Links), பயனர் இடைமுகச் சாதனங்கள் (User Interface Devices) ஆகியவற்றை உள்ளடக்கியது. |
(2) தரவுத்தளம் (Database):
அகநிலை (Internal), புறநிலை (External), நிகழ்நிலை (On-line), அகல்நிலைத் (Off-line) தரவுகளை உள்ளடக்கியது. |
(3) பகுப்பாய்வுக் கருவிகள் (Analytical Tools):
தீர்மானிப்பு மாதிரியங்கள் (Decision Models), கணித மாதிரியங்கள் (Mathematical Models), புள்ளியியல் கருவிகள் (Statistical Tools), பகுப்பாய்வு வழிமுறைகள், செயல்முறைகள், தேடு பொறிகள் (Search Engines), ஊகிப்புப் பொறிகள் (Inference Engines) ஆகியவற்றை உள்ளடக்கியது. |
(4) பயனர் இடைமுகம் (User Interface):
வரைகலை இடைமுகம் (Graphical Interface), இயற்கை
மொழி இடைமுகம் (Natural Language Interface), வலைப் பயனர்
இடைமுகம் (Web-user Interface), தொடுதிரை இடைமுகம் (Touch
Screen Interface), வாய்மொழி இடைமுகம் (Voice Interface) ஆகியவற்றை
உள்ளடக்கியது. |
(5) பயனர்கள் (Users):
தரவு திரட்டுவோர், தரவு உள்ளிடுவோர், கள வல்லுநர்கள்,
முறைமை வல்லுநர்கள், ஆலோசகர்கள், தீர்மானிப்பாளர்கள் ஆகியோரை
உள்ளடக்கியது. |
தீர்மானிப்பு உதவி முறைமையின் அறிவுத் தளம் அவ்வப்போது புதுப்பிக்கப் படுகிறது. தரவு உள்ளீட்டாளர்கள் இப்பணியைக் கவனித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான தரவுகள் நிகழ்நேர, நிகழ்நிலைத் தரவுத்தளங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முறைமையைப் பயன்படுத்தும் மேலாளர்கள் பயனர் இடைமுகம் வழியாகத் தேவையான தகவல்களை அறிக்கை, அட்டவணை, வரைபடம், புள்ளி விவரங்கள், ஆலோசனைகள் வடிவில் பெறுகின்றனர். தீர்மானிப்பு உதவி முறைமைகள் தாமே முடிவெடுத்துச் செயல்படுத்துவதில்லை. சேமிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், பகுப்பாய்வு மாதிரியங்கள், கருவிகள் மற்றும் ஊகிப்புப் பொறியின் உதவியுடன், முடிவெடுப்பதற்கு உதவுகின்ற தகவல்களையும் ஆலோசனைகளையும் மட்டுமே வழங்குகின்றன. மேலாளர்கள் அவற்றின் அடிப்படையில் தம் சொந்த அனுபவ அறிவையும் பயன்படுத்தி உகந்த முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
4.2.3 பயன்பாடுகள்
தீர்மானிப்பு உதவி முறைமைகள் தொடக்க காலங்களில்
இரயில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்த
போதிலும் தற்போது வங்கி, பங்குச் சந்தை, மருத்துவம், பொறியியல் துறைகளில்
பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் சிலவற்றைப் பட்டியலிடுவோம்:
-
மருத்துவத் துறையில் மருத்துவ நோயாய்வு
(medical diagnosis) செய்து, சிகிச்சையை முடிவு செய்ய.
-
வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவரின்
தகுதியறிந்து கடன் வழங்கலாமா கூடாத என முடிவெடுக்க.
-
பொறியியல் நிறுவனம் பல்வேறு திட்டப்பணிகளுள்
ஆதாயமுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதல¦டு செய்ய.
-
பங்குச் சந்தையில் முதல¦டு செய்வதில்
ஆலோசனை வழங்க.
-
வணிக நிறுவனங்கள் வணிக வளங்களைச்
சிறப்பான முறையில் ஒதுக்கீடு செய்ய. சந்தையின் சாதக, பாதகப்
போக்குகளை அறிந்துகொள்ள. புதிய உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தக்கூடிய
பகுதியைத் தீர்மானிக்க.
-
வேளாண்மை உற்பத்தி, சந்தைப்படுத்தலில்
சரியான முடிவுகள் எடுக்க.
-
கனடா நாட்டில் தேசிய இரயில்வே அமைப்பில்
இரயில் தண்டவாளங்கள் மற்றும் பிற எந்திரங்களைக் குறிப்பிட்ட
காலக்கெடுவுகளில் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கத் தீர்மானிப்பு
உதவி முறைமைகள் பயன்பட்டு வருகின்றன. இதன்மூலம் இரயில்
தடம் புரளல் குறைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நாட்டில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் உருவாக்கிய ‘அமெரிக்கப் பகுப்பாய்வுத் தகவல்
மேலாண்மை முறைமையை’ இன்றைக்குப் பல்வேறு விமானப் போக்குவரத்து
நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
|
1.2.4 பலன்கள்
தீர்மானிப்பு உதவி முறைமைகள்
எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது எனப் பார்த்தோம். முடிவுகள் எடுப்பதில்
பயனருக்கு உதவுகிறது என்பது மட்டுமின்றி, அதனால் பெறப்படும் பலன்கள்
பன்முகப்பட்டவை. தீர்மானிப்பு உதவி முறைமைகளின் பலன்களைக் கீழ்க்காணுமாறு
பட்டியலிடலாம்:
-
முறைமையைப் பயன்படுத்தும் ஒருவரின்
செயல்திறனை மேம்படுத்துகிறது.
-
சிக்கலுக்கான தீர்வுகாணலை விரைவுபடுத்துகிறது.
-
பணியாளர்களிடையே தகவல் தொடர்புக்கு
வகைசெய்கிறது.
-
கற்றலுக்கும் பயிற்சிக்கும் ஊக்கம்
தருகிறது.
-
நிறுவனக் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது.
-
எடுக்கும் ஒரு முடிவுக்கு ஆதரவாகப்
புதிய தடயத்தை உருவாக்குகிறது.
-
வணிகத்தில் போட்டியாளரைவிட அதிக
அனுகூலத்தை உருவாக்குகிறது.
-
வணிக நடவடிக்கைகளில் முடிவெடுப்பவரின்
கூர்ந்தாய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
-
சிக்கல் வெளியில் (Problem Space)
சிந்திப்பதில் புதிய அணுகுமுறைகளை வெளிப்படுத்துகிறது.
|
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
மேலாண்மை அடுக்குகள் பற்றி விளக்கிக் கூறுக.
|
விடை |
2. |
கீழ்நிலை மேலாண்மை முடிவுகள் யாவை? எப்படிப்பட்டவை?
|
விடை |
3. |
செயல்நுட்ப முடிவுகள் பற்றிக் குறிப்பு வரைக.
|
விடை |
4. |
மேல்நிலை மேலாண்மை எப்படிபட்ட முடிவுகளை எடுக்கும்?
|
விடை |
5. |
தீர்மானிப்பு உதவி முறைமையை வரையறுத்து
அதன் வரலாறு கூறுக.
|
விடை
|
6. |
தீர்மானிப்பு உதவி முறைமையின் கட்டமைப்பை விளக்குக
|
விடை |
7. |
தீர்மானிப்பு உதவி முறைமைகள் எந்தத் துறைகளில் பயன்படுகின்றன?
|
விடை
|
8. |
தீர்மானிப்பு உதவி முறைமைகளின் பலன்களைப் பட்டியலிடுக.
|
விடை |
|
|