6.1 மின்வெளிச் சட்டத்தின்
தேவைக்கான சூழல்
மரபுவழி வணிகத்தில் கணிப்பொறியும்,
இணையமும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. தாள் ஆவணங்களுக்குப்
பதிலாக மின்னணு ஆவணங்கள், எழுத்து மூலமான கையொப்பத்துக்குப் பதிலாக
மின்னணுக் கையொப்பங்கள். இதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்களை ‘மின்வணிகம்’
என்னும் பாடத்தில் (பாடம் 4.3) விரிவாகப் பார்த்தோம். அதுபோலவே அத்துமீறிகள்
மற்றும் தீங்குநிரல்களால் கணிப்பொறி முறைமைக்கு ஏற்படும் பாதிப்புகள்
பற்றி முந்தைய பாடத்தில் படித்தோம். அவற்றை மீண்டும் இங்கே நினைவு
கூர்வோம். பதிப்புரிமையை மீறிச் சட்டத்துக்குப் புறம்பாக மென்பொருள்கள்
நகலெடுக்கப்படுகின்றன. பிறரின் நடவடிக்கைகளை வேவு பார்த்தல், பிறரின்
சொந்த விவரங்களை அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்தல் போன்ற குற்றங்களும்
பெருகிவிட்டன. ஆபாசப் படங்கள், தகவல்கள், சாதி, மத, இன, மொழி வெறியைத்
தூண்டி மக்களிடையே பகைமை வளர்க்கும் செய்திகள், பொய்யான தகவல்கள்
இணையத்தில் பெருகிவிட்டன. இத்தகைய குற்றங்களை இப்போதுள்ள குற்றவியல்
சட்டங்களின்படி தண்டிக்க முடியுமா? புதிய சூழலில் புதிய சட்டங்களுக்கான
தேவையை இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.
6.1.1 மின்வணிகத்தில் சட்டச்
சிக்கல்கள்
மரபுவழி வணிக நடைமுறையில்
இல்லாத, எதிர்பாராத சிக்கல்கள் மின்வணிகத்தில் ஏற்படுகின்றன. அவற்றின்
முடிச்சுகளை அவிழ்ப்பதற்குப் போதுமான சட்ட நடைமுறைகள் ஏற்கெனவே உள்ள
சட்டங்களில் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்கள் சிலவற்றை இங்குப் பார்ப்போம்:
(1) வணிக ஒப்பந்தம்:
மரபுவழி வணிக ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பினரால்
கையொப்பம் இடப்படுகிறது. ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பற்றிய
விவரங்கள் வெளிப்படையானவை. ஆனால் மின்வணிகத்தில் இன்னார் என்று
அறிவித்துக் கொள்ளாமலே ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். யார்
என்று சொல்லாமலே ஒருவர் வணிக ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் அது
செல்லுபடி ஆகிற ஒப்பந்தமாகக் (valid contract) கருதப்படுமா?
அந்த நடவடிக்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு இப்போதிருக்கும்
ஒப்பந்தச் சட்டங்கள் (Contract Laws) செல்லுமா? இணையத்தில்
உலாவரும் நபர் ’துடிம நபர்’ (Digital Person) அல்லது ‘மெய்நிகர்
நபர்’ (Virtual Person) எனப்படுகிறார். குழுமச் சட்டம் (Company
Law) பதிவு செய்யப்பட்ட ஒரு குழுமத்தைச் சட்ட நபராக அங்கீகரிக்கிறது.
ஒரு குழுமத்தைக் குடிமையியல், குற்றவியல் நடவடிக்கைக்குப்
பொறுப்பாக்க முடியும். அதுபோல, துடிம நபரையும் ஒரு சட்ட நபராகக்
கருதிக் குடிமை மற்றும் குற்ற நடவடிக்கைக்குப் பொறுப்பாக்க
முடியுமா? |
(2) துடிமக் கையொப்பம் (Digital Signature):
மரபுவழி வணிக நடைமுறைகளில் வணிக ஒப்பந்தங்கள்
தாள்வடிவில் தயாரிக்கப்பட்டுக் கையொப்பம் இடப்படுகின்றது.
கையொப்பம் இட்டவர் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்படுகிறார். ஒப்பந்தம்
மீறப்பட்டு வழக்கு ஏற்படும்போது சான்றுகள் காட்டித் தீர்வு
காண்பது எளிது. ஆனால் மின்வணிகத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும்
கணிப்பொறி வழியாகவே நடைபெறுகின்றன. கணிப்பொறி ஆவணத்தில் இடப்படும்
கையொப்பம் ‘துடிமக் கையொப்பம்’ (Digital Signature) என்றும்,
அது மறைக்குறியீட்டியல் (Cryptography) முறையில் தனித்திறவி,
பொதுத்திறவி அடிப்படையிலானது என்றும் ஏற்கெனவே பார்த்தோம்.
துடிமக் கையொப்பமிட்ட மின்னணு ஆவண ஒப்பந்தங்களை அங்கீகரிக்க
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தச் சட்டங்களில் வழிமுறைகள்
இல்லை. |
(3) வணிகப் பெயரும் வலையகப் பெயரும்:
ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும் வணிகப் பெயரும்
(Trade Name), வணிகச் சின்னமும் (Trade Mark) உள்ளன. இவற்றை
நெறிமுறைப்படுத்த எல்லா நாடுகளிலும் சட்டங்கள் உள்ளன. இணையத்தில்
ஒருவர் தாம் விரும்பும் பெயரில் வலையகத்தைப் பதிவு செய்துகொள்ள
முடியும். ஏற்கெனவே அப்பெயரில் ஒரு வலையகம் இருக்கக் கூடாது
என்பதே நிபந்தனை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுள்ள
ஒரு நிறுவனத்தின் பெயர்களில்கூட சிலர் வலையகங்களைப் பதிவு
செய்து வைத்திருந்தனர். அந்த நிறுவனம் தன் பெயரில் வலையகம்
நிறுவ முடியாமல் போனது. பல கோடி டாலர்கள் கொடுத்து அப்பெயரை
வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய மோசடிகளைத் தடுப்பது
எப்படி? வலையகத்தின் பெயரை வணிகப் பெயர் அல்லது வணிகச் சின்னமாகக்
கருத முடியுமா? வலையகப் பெயரும் வணிகச் சின்னமே எனப் பல வழக்குகளில்
வாதிக்கப்பட்ட போதிலும் இருக்கின்ற சட்டங்களை வைத்து இதுபோன்ற
வழக்குகளில் வெற்றிபெற முடியவில்லை. |
(4) செயல்பாட்டெல்லை (Jurisdiction):
ஒரு நாட்டைச் சேர்ந்த வணிக நிறுவனம் வேறொரு
நாட்டு இணையச் சேவை நிறுவனத்தில் வலையகம் நிறுவி மின்வணிகத்தில்
ஈடுபடலாம். மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த வலையக
அங்காடியில் பொருள் வாங்கலாம். அதற்கான பணப் பரிமாற்றம் நான்காவதாக
ஒரு நாட்டின் வங்கி மூலமாக நடைபெறலாம். இந்த வணிகப் பரிமாற்றம்
எந்த நாட்டில் நடைபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படும்? இதில்
அந்நியச் செலவாணிச் சட்டம் தலையிடுமா? எந்த நாட்டின் அந்நியச்
செலவாணிச் சட்டம் தலையிடும்? இந்த வணிகப் பரிமாற்றத்தில் ஏதேனும்
சிக்கல் ஏற்பட்டு, வழக்குத் தொடுக்க நேர்ந்தால் எந்த நாட்டு
நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது? |
(5) விற்பனை வரி:
சில பொருட்களின் விற்பனை நடவடிக்கை முழுக்கவும்
இணையம் வழியாகவே நடந்து முடிந்து விடுகிறது. மென்பொருள்கள்,
நிகழ்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள், வரைகலைப் படங்கள்,
வாழ்த்து அட்டைகள், ஆலோசனைகள் இவற்றை இணைய அங்காடியில் வாங்குவதோடு,
இணையம் வழியாகவே நமது கணிப்பொறியில் பதிவிறக்கிக் கொள்கிறோம்.
இந்த விற்பனையை வரி விதிப்புக்குள் கொண்டு வருவது எப்படி?
எந்த நாட்டில் உள்ள எந்தக் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது
என்பதைக் கண்டறிவது கடினமான பணி. எந்த நாட்டின் விற்பனைவரிச்
சட்டத்தின்படி வரி விதிப்பது? |
(6) பதிப்புரிமை (Copyright):
இணையத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் இசைப்பாடலை
ஒருவர் விலைகொடுத்து வாங்குகிறார். அப்பாடலைத் தன்னுடைய வலையகத்தில்
சேமித்து வைக்கிறார். யார் வேண்டுமானாலும் அப்பாடலை இலவசமாகப்
பதிவிறக்கிக் கொள்ள அனுமதிக்கிறார். எந்தச் சட்டத்தின்கீழ்
இது குற்றம். தனது வலையகத்தில் பதிவு செய்து வைத்தது குற்றமா?
அல்லது அதனைப் பிறர் இலவசமாகப் பதிவிறக்கம் செய்வது குற்றமா?
அல்லது இரண்டுமே குற்றமா? இப்போதுள்ள பதிப்புரிமைச் சட்டத்தில்
இதற்குத் தீர்வு உள்ளதா? இணையத்தில் இசைப்பாடல்கள் எம்பீ-3
என்னும் இறுக்கிச் சுருக்கிய வடிவில் கிடைக்கின்றன. பதிப்புரிமை
பெற்ற ஓர் ஒலிநாடாவிலுள்ள பாடலை ஒருவர் எம்பீ-3 வடிவில் மாற்றித்
தனது வலையகம் மூலம் இலவசமாக வழங்குகிறார். எம்பீ-3 வடிவிலுள்ள
பாடல் ஒலிநாடாவிலுள்ள பாடலின் அப்பட்டமான நகல் என்று கூற முடியுமா?
இது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வருமா? |
6.1.2 கணிப்பொறிக் குற்றங்கள்
மின்வெளிச் சட்டங்களுக்கான
முன்தேவை மின்வணிகத்தின் விரைவான வளர்ச்சியினால் எழுந்தது என்ற போதிலும்,
மின்வெளிச் சட்டத்தின் தேவைக்கு வேறுபல காரணங்களும் உள்ளன. அவற்றுள்
முதன்மையானது இணையத்தில் வளர்ந்துவரும் குற்ற நடவடிக்கைகள் ஆகும்.
மின்வணிக நடைமுறைகளிலும் அதற்கு அப்பாலும் கவலையளிக்கும் குற்ற நடவடிக்கைகள்
பெருகியுள்ளன. கணிப்பொறிக் குற்றம் (Computer Crimes), மின்வெளிக்
குற்றம் (Cyber Crimes), மின்னணுக் குற்றம் (Electronic Crimes),
மின்-குற்றம் (e-crimes), உயர்-தொழில்நுட்பக் குற்றம் (Hightech
Crimes) என்பவை கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையம் அல்லது இணையத்தை
மூலமாக, கருவியாக, இலக்காக அல்லது இடமாகக் கொண்ட குற்றங்களைக் குறிக்கும்
’ஒருபொருட் பன்மொழி’ ஆகும். பெருகிவரும் இத்தகைய குற்ற நடவடிக்கைகளுள்
சிலவற்றைக் காண்போம்:
(1) வலையக உள்ளடக்கம்: இணையத்தில்
அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கின்றன. என்பது பெருமைக்குரிய
செய்தி என்ற போதிலும் சில வேளைகளில் அதுவே கவலையளிக்கும் செய்தியாகவும்
ஆகி விடுகிறது. இணையத்தில் ஆபாசப் படங்களும், செய்திகளும்
நிறைந்த வலையகங்கள் ஏராளமாய் உள்ளன. இத்தகைய வலையகங்கள் பல்வேறு
நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. அந்த நாட்டுச் சட்டம் இதனை அனுமதிக்கலாம்.
ஆனால் அவ்வலையகத் தகவலை அனைத்து நாட்டினரும் காண முடிகிறது.
இந்தியாவில் ஆபாசத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால்
இச்சட்டத்தின் மூலம் இணையம்வழிப் பெறப்படும் ஆபாசத் தகவல்களைத்
தடுக்க முடியாது. இளைஞர்கள் கெட்டுப்போக இது வாய்ப்பளிக்கிறது.
பாலியல் பற்றிய கண்ணோட்டமும், கருத்தோட்டமும் நாட்டுக்கு நாடு,
சமூகத்துக்குச் சமூகம் வேறுபடுகின்றன. எனவே இச்சிக்கலுக்கு
உலகப் பொதுவான தீர்வும் சட்டமும் இருக்க முடியாது. வேறு ஊடகங்களில்
சட்டங்களினால் தடை செய்யப்பட்டுள்ள தகவல்கள் வலையகங்களில்
வெளியிடப்படுகின்றன. சாதி, மத, மொழி, இன வெறியைத் தூண்டும்
தகவல்களைக் காண முடிகிறது. இவை சமூகக் குழுக்களிடையே கசப்புணர்வை
வளர்க்கும். மின்வெளியிலும் தீவிரவாதம் (Cyber Terrorism)
பரவியுள்ளது கவலைக்குரிய செய்தியாகும். |
(2) தீங்குநிரல்கள்: அண்மைக்
காலத்தில் உலகெங்கிலுமுள்ள கணிப்பொறிகளை ஒரே நாளில் தாக்கிக்
கேடு விளைவித்த ‘ஐலவ்யூ’, ‘செர்னோபில்’ ‘மெலிசா’ போன்ற நச்சுநிரல்கள்
பற்றி நாம் அறிவோம். இதுபற்றிய தகவல்களை நாம் முந்தைய பாடத்தில்
விரிவாகப் பார்த்தோம். குறிப்பிட்ட நச்சுநிரல் எந்த நாட்டிலிருந்து,
எந்த வழங்கிக் கணிப்பொறியிலிருந்து ஏவப்பட்டது என்பதைத் துல்லியமாகக்
கண்டறியும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நச்சுநிரலை
யார் பரப்பியது என்றுகூடக் கண்டுபிடித்துவிட முடிகிறது. ‘ஐலவ்யூ’
நச்சுநிரலைப் பரப்பிய ஃபிலிப்பைன்ஸ் நாட்டு இளைஞரை உடனே கைது
செய்ய முடிந்தது. ஆனால் அவர் இழைத்த குற்றத்துக்கு ஏற்ற தண்டனை
வழங்க அந்த நாட்டுச் சட்டத்தில் இடமில்லாமல் போய்விட்டது. |
(3) அத்துமீறல்கள்:
கணிப்பொறி முறைமையின் பாதுகாப்புச் சுவர்களை
உடைத்துக் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்து கேடு விளைவிக்கும்
வேடதாரிகள், துரோகிகள், உளவாளிகள், பொழுதுபோக்கிகள் பற்றியும்,
அவர்களின் தாக்குதல் முறைகள் பற்றியும் முந்தைய பாடத்தில்
விரிவாகப் படித்தோம். தாக்குதலுக்கு ஆளான நிறுவனத்துக்கு அத்தாக்குதல்
காரணமாக ஏதேனும் இழப்பு ஏற்படுகிறது எனில் அத்தாக்குதல் குற்றமாகக்
கருதப்பட்டுக் காரணமானவர் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான
சட்டங்களைப் புதியதாக இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. |
(4) மென்பொருள் களவு:
உலகம் முழுதும் களவு, குற்றமாகக் கருதப்படுகிறது.
அதற்குரிய தண்டணை சட்டங்களில் விளக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி
உலகில் களவு பல வடிவங்களில் நிலவுகிறது. மென்பொருள் களவு (Piracy)
என்பது இன்றைக்குப் பெருமளவு நடைபெறுகிறது. அதாவது விலைக்கு
விற்கப்படுகின்ற ஒரு மென்பொருளைக் காசு கொடுத்து வாங்காமல்
அதனைச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் நகலெடுத்துக் கணிப்பொறியில்
பயன்படுத்திக் கொள்வதே மென்பொருள் களவு எனப்படும். சில நிறுவனங்கள்
தமது மென்பொருளைப் பயனர்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு
நகலெடுத்து வீட்டுக் கணிப்பொறிகளில் பயன்படுத்திக் கொள்வதைக்
குற்றமாகக் கருதுவதில்லை. ஆனால் அவ்வாறு நகலெடுத்த மென்பொருள்களை
ஆதாயம் பெறும் வணிக நடவடிக்கைகளில் பயன்படுத்துவது குற்றமாகக்
கருதப்படுகிறது. இது தவிர கணிப்பொறி முறைமைக்குள் அத்துமீறி
நுழைந்து முக்கிய தகவல்களை கவர்ந்து கொள்வதும் களவாகவே கருதப்பட
வேண்டும். ஆனால் இதற்கு முறையான விதிமுறைகள் தற்போதைய சட்டங்களில்
இல்லை. |
(5) பண மோசடிகள்:
இணையம்வழி நடைபெறும் மின்வணிகம், வங்கிச் சேவைகளில்
பணப் பரிமாற்றத்துக்குக் கடன் அட்டை, பற்று அட்டையின் விவரங்களும்,
பயனர் பெயர், கடவுச்சொல் போன்ற இரகசிய விவரங்களும் உள்ளீடு
செய்யப்படுகின்றன. இவற்றைத் தந்திரமான முறையில் அறிந்து வைத்துக்
கொண்டு, மோசடியில் ஈடுபடும் குற்றங்கள் தற்காலத்தில் அதிகரித்துள்ளன.
இவற்றைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்கள் தேவை. |
(6) அந்தரங்கத்தில் தலையீடு (Breach of
Privacy):
மின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், வலைப்பதிவு,
உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்று இணையத்தில் கிடைக்கும்
எண்ணற்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வோர் தம்மைப் பற்றிய
விவரங்களைப் படிவத்தில் உள்ளிட்டுப் பதிவு செய்து கொள்கின்றனர்.
அத்தகைய சொந்த விவரங்களை அச்சேவையை வழங்கும் நிறுவனமோ அல்லது
பிறரோ அப்பயனரின் அனுமதி இல்லாமல் வேறு செயல்பாடுகளுக்குப்
பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஒருவரின் அந்தரங்கத்தில்
தலையிடுவது போன்றது. சில புத்திசாலி நிரலர்கள் பிறருடைய மின்னஞ்சல்
பெட்டியை அத்துமீறித் திறந்து அவருக்கு வரும் மடல்களையெல்லாம்
படித்துவிடுவர். பிறருக்கு வரும் மின்னஞ்சல்களைத் தம்முடைய
மின்னஞ்சல் முகவரிக்குத் திருப்பிவிடும் திறமையான நச்சுநிரலர்களும்
உள்ளனர். இவற்றைப் பொழுதுபோக்காகச் செய்வோரும் உண்டு. ஒருவருடைய
தனிப்பட்ட சொந்த விவரங்களை அவருடைய அனுமதி இல்லாமல் அறிந்து
கொள்வதும், அறிந்த விவரங்களை முறைகேடான வகையில் பயன்படுத்திக்
கொள்வதும் குற்றமாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப் புதிய
சட்டவிதிகளை உருவாக்க வேண்டும். |
இணையம்வழி நடைபெறும் குற்றங்கள் பற்றி இன்டர்போல் அமைப்பின் தலைமைச் செயலர் ரேமன்ட் கென்டல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறிய சில கருத்துகளை இங்குக் காண்போம்:
-
இணையக் குற்றங்களால் பொருளாதாரக் குற்றங்கள்
அதிகரித்து விட்டன. இவற்றைத் தடுக்க சர்வதேச ஒத்துழைப்புத்
தேவை.
-
இன்று அமெரிக்கா உட்படப் பல நாடுகளில்
வங்கிப் பணப் பரிமாற்றங்கள் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன.
சர்வதேசப் பங்குச் சந்தைகளிலும் இணையம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் மோசடியின் அளவு அதிகரித்துள்ளது.
-
சில தனிப்பட்ட குற்றவாளிகள் செய்யும்
இணையக் குற்றங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. தனிநபர்
இரகசியக் காப்புரிமை, அடிப்படை மனித உரிமை, வங்கிகளின்
இரகசியக் கணக்குமுறை விதிகள், பணப் பரிமாற்றக் கண்காணிப்புக்
கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவை இன்டர்போல் விசாரணையில்
பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.
-
இணையத் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும்
வகையில் சர்வதேசச் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் இணையத்
தொடர்புகளையும் அவர்களின் வலையகங்களையும் கண்காணிக்க இன்டர்போலுக்கு
அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய குற்றங்களைக்
கட்டுப்படுத்த முடியும்.
|
6.1.3 இங்கிலாந்து நாட்டில் ஒரு வழக்கு
இங்கிலாந்து நாட்டில் 1984-1988
ஆண்டுகளில் நடைபெற்ற ஆர் எதிர் கோல்டு மற்றும் சிஃப்ரீன் (R v Gold
& Schifreen) என்னும் வழக்கு, கணிப்பொறிக் குற்ற வரலாற்றில்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும். பிரிட்டிஷ் டெலிகாம்
நிறுவனம் ‘பிரஸ்டெல்’ (Prestel) என்னும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு
வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் ஒரு சேய்மைக் கணிப்பொறியில் சேமித்து
வைக்கப்படுள்ள நிகழ்படத் தகவல்களைக் கட்டண அடிப்படையில் தொலைபேசி
இணைப்பு வழியாகத் தங்கள் கணிப்பொறித் திரையில் காண முடியும். 1984-ஆம்
ஆண்டின் இறுதியில் ஸ்டீஃபன் கோல்டு, ராபர்ட் சிஃப்ரீன் ஆகிய இருவரும்
வீட்டுக் கணிப்பொறி மற்றும் இணக்கியின் (modem) உதவியுடன் பிரஸ்டெல்
சேவையில் அத்துமீறி நுழைந்தனர். பிரஸ்டெல் பொறியாளர் ஒருவரின் பயனர்
பெயர் 22222222, கடவுச்சொல் 1234 எனக் கண்டறிந்து கூறினர். அதன்மூலம்
பிரஸ்டெல் முறைமைக்குள் நுழைந்து இளவரசர் ஃபிலிப்பின் சொந்தச் செய்திப்
பெட்டியை அணுக முடியும் என்பதையும் செய்து காட்டினர். பிரிட்டிஷ்
டெலிகாம் பிணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு
எழுந்தது. விழித்துக் கொண்ட பிரஸ்டெல், ஐயத்துக்குரிய பயனர்களின்
நடவடிக்கைகளைக் கண்காணித்தது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில்
கோல்டு, சிஃப்ரீன் இருவரும் கைது செய்யப்பட்டனர். பொய்க் கையொப்பம்
மற்றும் ஏமாற்று ஆவணச் சட்டத்தின் (Forgery and Counterfeit Act)
கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தின்
சேவையைப் பயன்படுத்த ஒரு கள்ளப்பண ஆவணம் (false instrument - பொய்க்
காசோலை போன்றது) தயார் செய்து ஏமாற்றியதாகக் குற்றம் சாற்றப்பட்டனர்.
கீழ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இருவரும் தண்டம் செலுத்தும்படித்
தண்டிக்கப்பட்டனர். தண்டத்தொகை மிகவும் குறைவாக இருந்த போதிலும்,
மேல் நீதிமன்றத்தில் இருவரும் முறையீடு செய்தனர். தங்கள் செயல்களால்
பொருள் ரீதியான ஆதாயம் அடைந்தனர் என்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை
என்றும், ஏமாற்று ஆவணச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்றும் அவர்களது வழக்குரைஞர் எடுத்துக் காட்டினார். நீதிபதி லேன்
பிரபு அவ்வாதத்தை ஏற்று இருவரையும் விடுதலை செய்தார். அரசுத் தரப்பு,
பிரபுக்கள் சபையில் மேல் முறையீடு செய்தது. 1988-ஆம் ஆண்டு பிரபுக்கள்
சபை இருவரின் விடுதலையையும் உறுதி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க
தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில் டேவிட் பிரென்னன்
பிரபு இவ்வாறு கூறினார்: “இந்த வழக்கில் நிலவியதாகக் காட்டப்பட்ட
சூழலுக்குப் பயன்படுத்தும் நோக்கில் மேற்கண்ட சட்டத்தின் விதிகள்
வகுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயல்பாட்டின் சாரம்
நேர்மையற்ற முறையில் பிரஸ்டெல் தரவு வங்கியை ஒரு தந்திரம் மூலம்
அணுகினார்கள் என்பதே. இது குற்றச் செயல் அன்று. இச்செயலைக் குற்றம்
என்று ஆக்க விரும்பினால் அவ்வேலையைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றமே
அல்லாது நீதிமன்றம் அன்று”. இத்தீர்ப்புக்குப் பின் அப்போதிருந்த
சட்டங்களின்படி கணிப்பொறி முறைமை மீதான தாக்குதல் (Hacking) சட்டப்புறம்பான
செயல் இல்லை என்பதைப் பல சட்ட வல்லுநர்களும் சுட்டிக் காண்பித்தனர்.
இங்கிலாந்துச் சட்ட ஆணையம் இச்சிக்கலைத் தீவிரமாகப் பரிசீலித்தது.
அதன் பரிந்துரைப்படி இதுபோன்ற குற்றங்களைத் தண்டிக்க 1990-ஆம் ஆண்டு
‘கணிப்பொறி முறைகேட்டுச் சட்டம்’ (Computer Misuse Act) இங்கிலாந்து
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
|