6.2 மின்வெளிச் சட்டத்தின்
முன்னோடிகள்
மின்வணிகம் தொடர்பாகவும்,
கணிப்பொறி வழியிலான மோசடிக் குற்றங்கள் தொடர்பாகவும் முறைப்படியான
சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையை முந்தைய பாடப் பிரிவில் பார்த்தோம்.
அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய பொதுவான அமைப்பான ஐநா மன்றம் உறுப்பு
நாடுகளை நெறிப்படுத்தவும், இக்கட்டான நிலைமைகளில் வழிகாட்டவும் கடமைப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின்வணிகம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஐநா
முன்வந்தது. 1996-ஆம் ஆண்டில் மின்வணிக மாதிரிச் சட்டம் ஒன்றை வெளியிட்டது.
அதுபோல, 2001-ஆம் புடாபெஸ்டில் ஐரோப்பிய ஆட்சிமன்றம் கூட்டிய மாநாடு
மின்வெளிக் குற்றங்கள் பற்றிச் சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனைகளை வெளியிட்டது.
ஐநா மன்றப் பரிந்துரைகள், ஐரோப்பிய ஆட்சிமன்றம் வழங்கிய ஆலோசனைகள்
அடிப்படையில் பல நாடுகள் மின்வணிகம், கணிப்பொறிக் குற்றங்கள் தொடர்பான
சட்டங்களை இயற்றத் தொடங்கின. இத்தகைய முன்முயற்சி நடவடிக்கைகளைப்
பற்றி இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.
6.2.1 ஐநா மன்ற மின்வணிக
மாதிரிச் சட்டம்
ஐநா மன்றத்தின் சர்வதேச வணிகச்
சட்டக் குழு (UN Commission on International Trade Law - UNCITRAL)
ஏற்றுக் கொண்ட மின்வணிக மாதிரிச் சட்டம் (Model Law of Electronic
Commerce) 1996 டிசம்பர் 16-இல் ஐநாவின் பொதுக்குழுவில் 15/162-வது
தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 1966-இல் நிறவேற்றப்பட்ட சர்வதேச
வணிகச் சட்டம், 1985-இல் நிறவேற்றப்பட்ட தானியங்கு தரவுச் செயலாக்கம்
(Automated Data Processing) பற்றிய தீர்மானம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி
மாதிரிச் சட்டத்தை ஐநா முன்மொழிந்தது. இச்சட்டத்தின் அடிப்படையில்
உறுப்பு நாடுகள் ஒரே மாதிரியான சட்டங்களை இயற்ற வேண்டும் அல்லது
ஏற்கெனவே உள்ள சட்டங்களைத் திருத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
இச்சட்டத்தின் சாரமான கூறுகளுள் சிலவற்றை இங்குக் காண்போம்:
(1) கணிப்பொறி வழியாக நடைபெறும் மின்னணுத்
தகவல் பரிமாற்றம், மின்னஞ்சல், தொலைநகல், தொலையச்சு இவைமட்டுமின்றி
மின்னணு, ஒளியிழை, மற்றும் இதுபோன்ற ஊடகங்களின் வழியாக உருவாக்கி,
அனுப்பி, பெற்று, சேமித்து வைக்கப்படும் தகவல்கள் அனைத்தும்
‘துடிமத் தகவல்’ (Digital Information) எனப்படும். இத்தகைய
துடிமத் தகவலைச் சட்ட பூர்வமான தகவலாக ஏற்க வேண்டும். |
(2) குறிப்பிட்ட தகவல் தாளில், எழுத்தில்தான்
இருக்க வேண்டும் என்ற சட்டக் கடமை இருக்குமெனினும் மின்னணுத்
தகவலை அணுகவும், அடுத்தடுத்துக் கையாளவும் முடியுமெனில் அதையும்
எழுத்து பூர்வமான தகவலுக்கு இணையானதாகவே கொள்ள வேண்டும். |
(3) ஒருவரின் கையொப்பம் தேவை எனச் சட்டம்
கூறுகிற இடங்களில், துடிமத் தகவலை இன்னார்தான் அனுப்பினார்
என்பதைச் சரியாக அறிந்து கொள்ளத் துல்லியமான வழிமுறை இருக்குமெனில்
துடிம ஆவணத்தில் அவர் கையொப்பம் இட்டுள்ளதாகக் கருத வேண்டும்.
தனித்திறவி, பொதுத்திறவி பயன்படுத்தித் துடிமக் கையொப்பம்
இடும் முறையை இவ்விதி அங்கீகரிக்கிறது. |
(4) தகவல் அதன் மூல வடிவில் தெரிவிக்கப்படவோ
சேமிக்கப்படவோ வேண்டும் எனச் சட்டம் கருதுகிற இடங்களிலும்,
துடிமத் தகவல் பரிமாற்றத்தில் மூலத் தகவல்கள் சிதையாவண்ணம்
பாதுகாக்கப்படுவதற்கு நம்பகமான வழிமுறை இருக்குமாயின் துடிமத்
தகவலும் அத்தகைய சட்டத் தேவையை நிறைவேற்றுவதாகக் கொள்ளப்படும்.
|
(5) எந்தச் சட்ட நடவடிக்கையிலும் ஒரு தரவு
துடிமத் தரவாக இருக்கிற ஒரே காரணத்தால் தடயமாக ஏற்றுக் கொள்ள
இயலாது எனக் கூறக் கூடாது. துடிமத் தரவுகளுக்கும் உரிய மதிப்பளித்துத்
தடயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். துடிமத் தகவல் உருவான, சேமிக்கப்பட்ட,
அனுப்பிவைக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, தகவலின் சொந்தக்காரர்
அடையாளம் காணப்பட்ட முறையின் நம்பகத்தன்மைக்கு ஏற்ப அத்தகவலைத்
தடயமாக ஏற்க வேண்டும். |
(6) துடிமத் தகவல் மூலமே ஓர் ஒப்பந்தத்தின்
கோரிக்கையும், ஏற்பும் செய்ய முடியும். துடிமத் தகவல் பரிமாற்றம்
மூலமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக
அந்த ஒப்பந்தம் செல்லாது எனக் கூறக் கூடாது. |
(7) துடிமத் தகவலை அனுப்பிய, பெற்ற இடம்
எதுவெனச் ஒரு சட்டவிதி விளக்கமாகக் கூறுகிறது. தகவலை அனுப்பியவரும்,
பெற்றவரும் வேறுவிதமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் ஒழிய, அனுப்பியவரின்
வணிக அலுவலகத் திலிருந்தே தகவல் அனுப்பப்பட்டதாகவும் அதேபோலப்
பெற்றவரின் வணிக அலுவலகத்திலேயே தகவல் பெறப்பட்டதாகவும் கருதப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வணிக அலுவலகம் இருப்பின் அனுப்பப்பட்ட
தகவல் அனுப்பியவரின் எந்த வணிகம் தொடர்பானதோ அந்த வணிகம் நடைபெறும்
அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டதாகக் கொள்ளப்படும்.
பொதுவான தகவல் எனில் அனுப்பியவரின் தலைமை அலுவலகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாகக் கருதப்படும். அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும்
வணிக அலுவலகம் இல்லையெனில் அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து
அனுப்பப்பட்டதாகவும், பெறப்பட்டதாகவும் கருதப்படும். |
மேற்கண்ட சட்ட விதிகள் ஒவ்வொன்றுக்கும்
சில விதிவிலக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐநா மன்றத்தின் பரிந்துரையில்
குறிப்பிடப்பட்ட துடிமத் தகவல் பற்றிய நெறிமுறைகளை அடிப்படையாகக்
கொண்டே பின்னாளில் இயற்றப்பட்ட பல்வேறு நாட்டுச் சட்டங்களும் அமைந்துள்ளன.
6.2.2 ஐரோப்பிய மின்வெளிக் குற்றங்கள் மாநாடு
ஐரோப்பியக் கூட்டமைப்பின்
ஆட்சிமன்றம் (Council of Europe) 2001-ஆம் ஆண்டு நவம்பர் 23-இல்
மின்வெளிக் குற்றங்கள் தொடர்பாகப் புடாபெஸ்டில் ஒரு மாநாட்டைக் (Convention
on Cyber Crimes) கூட்டியது. பிற நாடுகளும் அதில் கலந்து கொண்டன.
மாநாட்டின் முடிவில் மின்வெளிக் குற்றங்கள் பற்றிச் சட்டம் இயற்றுவதற்கான
ஆலோசனைகளை வெளியிட்டது. ஆலோசனைகளை ஒப்புதல் கையொப்பம் வேண்டி உறுப்பு
நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. உறுப்பு நாடுகள் கீழ்க்காணும் செயல்பாடுகளைக்
குற்றம் என்று நிலைநாட்ட ஏதுவான சட்டத்தை இயற்றத் தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி,யது:
பிரிவு-2:- சட்டப்புறம்பான அணுகல் (Illegal
Access):
கணிப்பொறித் தரவினைப் பெற நேர்மையற்ற எண்ணத்துடன்
உள்நோக்கத்தோடு ஒரு கணிப்பொறி முறைமையை முழுதுமாக அல்லது ஒரு
பகுதியை அத்துமீறி அணுகுவது. |
பிரிவு-3:- சட்டப்புறம்பான வழிமறிப்பு (Illegal
Interception):
ஒரு கணிப்பொறி முறைமைக்குள் அல்லது கணிப்பொறி
முறைமைகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை உள்நோக்கத்தோடு
அத்துமீறி வழிமறிப்பது. |
பிரிவு-4:- தரவுக் குறுக்கீடு (Data Interference):
உள்நோக்கத்தோடு அத்துமீறிக் கணிப்பொறித் தரவினைச்
சேதப்படுத்தல், அழித்தல், சிதைத்தல், திருத்துதல் அல்லது மறைத்தல். |
பிரிவு-5:- முறைமைக் குறுக்கீடு (System
Interference):
கணிப்பொறித் தரவினை உள்ளிட்டு, வெளிச்செலுத்தி,
பாதிப்பு ஏற்படுத்தி, அழித்து, சிதைத்து, திருத்தி அல்லது
மறைத்து ஒரு கணிப்பொறி முறைமையின் செயல்பாட்டுக்கு உள்நோக்கத்தோடு
அத்துமீறிக் கேடு விளைவிப்பது. |
பிரிவு-6: சாதனங்களை முறைகேடாகப் பயன்படுத்தல்
(Misuse of Devices):
(i) பிரிவு-2 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட
குற்றங்களுள் ஒன்றைச் செய்வதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட
அல்லது தகவமைக்கப்பட்ட ஒரு கணிப்பொறி நிரல் அல்லது ஒரு சாதனத்தை
உருவாக்குவது, விற்பது, வாங்குவது, ஏற்றுமதி செய்வது, வினியோகிப்பது
அல்லது எவ்வாறேனும் கிடைக்கும்படி செய்வது. (ii) மேற்கண்ட
குற்றங்களுள் ஒன்றைச் செய்யப் பயன்படுத்தும் நோக்கத்தில் ஒரு
கணிப்பொறி முறைமையை முழுமையாக அல்லது ஒரு பகுதியை அணுகுவதற்குரிய
கடவுச்சொல், அணுகல் குறிமுறை அல்லது அதுபோன்ற தரவினை உருவாக்குவது,
விற்பது, வாங்குவது, ஏற்றுமதி செய்வது, வினியோகிப்பது அல்லது
எவ்வாறேனும் கிடைக்கும்படி செய்வது. மேற்கண்ட குற்றங்களில்
ஒன்றைச் செய்யும் நோக்கத்தில் (i), (ii) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவற்றைக்
கைவசம் வைத்திருப்பது. |
பிரிவு-7:- கணிப்பொறி தொடர்பான பொய்க் கையொப்பம்
(Computer-related Forgery):
ஒரு பொய்யான தரவினைச் சட்ட ரீதியான மெய்யான
தரவாகக் கருதப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அத்துமீறி
ஒரு கணிப்பொறித் தரவினை உள்ளிடுவது, திருத்துவது, அழிப்பது
அல்லது மறைப்பது. |
பிரிவு-8:- கணிப்பொறி தொடர்பான மோசடி (Computer-related
Fraud):
தனக்கு அல்லது வேறொருவருக்குப் பொருளாதார ஆதாயம்
பெறுகின்ற மோசடி அல்லது நேர்மையற்ற நோக்கத்துடன், மற்றவரின்
சொத்துக்கு இழப்பு ஏற்படும் வகையில் அத்துமீறி ஒரு கணிப்பொறித்
தரவினை (அ) உள்ளிடுவது, திருத்துவது, அழிப்பது அல்லது மறைப்பது.
(ஆ) ஒரு கணிப்பொறி முறைமையின் செயல்பாட்டில் எவ்வகையிலேனும்
குறுக்கிடுவது. |
பிரிவு-9:- குழந்தைப் பாலியல் தொடர்பான குற்றங்கள்
(Offences related to Child Pornography):
குழந்தைப் பாலியல் தொடர்பான தகவல்களை ஒரு கணிப்பொறி
முறைமை வழியாக வினியோகிக்கும் நோக்கில் உருவாக்குவது, ஒரு
கணிப்பொறி முறைமையில் பிறர் காண ஏற்பாடு செய்வது, ஒரு கணிப்பொறி
முறைமை வழியாக வினியோகிப்பது, அனுப்புவது, பெறுவது, ஒரு கணிப்பொறி
முறைமை அல்லது தரவுச் சேமிப்பு ஊடகத்தில் வைத்திருப்பது. |
பிரிவு-10:- பதிப்புரிமையைப் பாதிக்கும்
குற்றங்கள் (Copyright Infringements):
பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை தொடர்பாகச்
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்கள் வகுத்துள்ள உரிமைகளை
வணிக ரீதியில் ஒரு கணிப்பொறி முறைமை மூலமாக வேண்டுமென்றே மீறுவது.
|
பிரிவு-11:- முயல்வது, உதவுவது அல்லது தூண்டுவது
(Attempt and Aiding or Abetting):
பிரிவு-2 முதல் 10 வரை கூறப்பட்ட குற்றச் செயல்களுக்கு
உதவுவது அல்லது தூண்டுவது. பிரிவு 3, 5, 7, 8, 9 ஆகியவற்றில்
கூறப்பட்ட குற்றங்களைச் செய்ய முயல்வது.
|
பிரிவு-12:- நிறுவனப் பொறுப்பு (Corporate
Liability):
ஒரு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற,
நிறுவனத்தின் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ள, நிறுவனத்தில்
மேலாண்மை செய்யும் அதிகாரமுள்ள ஒருவர் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள
குற்றங்களில் ஈடுபட்டிருப்பின் அத்தகைய குற்றங்களுக்கு அந்த
நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும்.
|
பிரிவு-13:- தண்டனைகளும் நடவடிக்கைகளும்:
பிரிவு-2 முதல் 11 வரை கூறப்பட்ட குற்றங்களுக்கு
சிறைத்தண்டனை உட்படத் தீர்மானகரமான, பொருத்தமான, இனி அவர்
குற்றம் செய்யாதிருக்கும் வகையான தண்டனைகளை வரையறுக்க வேண்டும்.
நிறுவனங்களைப் பொறுப்பாக்கும் போது தண்டம் விதிக்கலாம்.
|
குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு
ஊறு விளைவிக்காத வகையில் மேற்கண்ட சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது.
6.2.3 சட்ட முன்முயற்சிகள்
மின்வெளிக் குற்றங்களைத்
தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சட்ட முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் சில தோல்வி கண்டன. எடுத்துக்காட்டாக,
இணையத்திலுள்ள ஆபாசத் தகவல்களைச் சிறுவர்கள் காண்பதற்குத் தடைவிதித்து
அமெரிக்காவில் 1996-ஆம் ஆண்டு நாகரிகத் தகவல்தொடர்புச் சட்டம் (Communications
Decency Act) கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்க நீதிமன்றம் ’ரீனோ
எதிர் ஏசிஎல்யூ’ (Reno v ACLU) என்ற வழக்கில் அச்சட்டம் செல்லாது
எனத் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள
அடிப்படை உரிமைகளுக்கு அச்சட்டம் எதிரானது என்பது நீதிமன்றத்தின்
கருத்து. ஆனாலும் அடிப்படை உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையில்
இணையத் தகவல்களுக்கு ஒருவகைத் தணிக்கைமுறை இருக்க வேண்டும் என்று
பல நாடுகளும் அப்போது கருத்துத் தெரிவித்தன.
அறிவுடைமையே சொத்துரிமை ஆகும்.
அறிவினால் உருவாக்கப்படும் படைப்புகளும் சொத்துகளாகவே மதிக்கப்பட
வேண்டும். இதன் அடிப்படையில் 1996-இல் உலக அறிவுசார் சொத்துரிமை
அமைப்பு (World Intellectual Property Organisation - WIPO) ஜெனீவாவில்
கூடி உருவாக்கிய இரண்டு உடன்படிக்கை களை மின்வெளிச் சொத்துரிமை (Cyber
Property), அதற்கான பதிப்புரிமை, காப்புரிமை தொடர்பான முன்னோடிச்
சட்ட வடிவு எனக் கருதலாம். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மின்னணுக்
களவுத்தடைச் சட்டமும் (No Electronic Theft Act), துடிம நூற்றாண்டுப்
பதிப்புரிமைச் சட்டமும் (Digital Millienium Copyright Act) இயற்றப்பட்டன.
ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் மின்வணிகச் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக
‘எக்லிப்’ (ECLIP - Electronics Commerce Legal Issues Platform)
என்ற குழுவை அமைத்தது. மின்வெளிச் சட்டம் பற்றிய பல வழிகாட்டு நெறிமுறைகளை
இக்குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் ஐரோப்பியக் கூட்டமைப்பின்
உறுப்பு நாடுகள் மின்வணிகம் தொடர்பான சட்டங்களை இயற்றின. அந்த வகையில்
மின்வணிகம் தொடர்பாக முன்னோடியாகத் திகழ்வது 1995-இல் அமெரிக்காவின்
உட்டா மாநிலம் நிறைவேற்றிய துடிமக் கையொப்பச் சட்டம் (Digital Signature
Act) ஆகும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
மின்வணிகத்தில்
ஏற்படும் சட்டச் சிக்கல்களை விளக்குக. |
விடை |
2. |
கணிப்பொறிக்
குற்றங்களை வகைப்படுத்துக. |
விடை |
3. |
இணையம்வழிக்
குற்றங்கள் பற்றி இன்டர்போல் தலைமைச் செயலரின் கருத்துகள்
யாவை? |
விடை |
4. |
இங்கிலாந்தில்
நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு பற்றி
விளக்கிக் கூறுக. |
விடை |
5. |
ஐநா மன்ற
மின்வணிக மாதிரிச் சட்டத்தின் கூறுகளைச் சுருக்கி வரைக. |
விடை
|
6. |
ஐரோப்பிய
ஆட்சிமன்ற மாநாடு வழங்கிய ஆலோசனைகள் யாவை? |
விடை |
7. |
மின்வெளிச்
சட்டங்கள் இயற்றுவதற்கான முன்முயற்சிகளைக் கூறுக. |
விடை
|
|
|