6.3 சில நாடுகளின்
மின்வெளிச் சட்டங்கள்
கணிப்பொறித் தொழில்நுட்பம்
வளர்ச்சி அடைந்த நாடுகளில் கணிப்பொறிக் குற்றங்களும் சேர்ந்தே வளர்ச்சி
பெற்றன. எனவே அக்குற்றங்களைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள ஏற்கெனவே
உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்யவும், புதிய சட்டங்களை இயற்றவும்
வேண்டிய தேவை அந்த நாடுகளுக்கு ஏற்பட்டது. அந்த வகையில் கணிப்பொறியை
முறைகேடாகப் பயன்படுத்திச் செய்யப்படும் மோசடிகளைத் தண்டிக்க முதலாவதாகச்
சட்டம் இயற்றிய நாடு அமெரிக்காவாகும். அடுத்துக் குறிப்பிட்டுச்
சொல்லக் கூடியது மலேசியா இயற்றிய கணிப்பொறிக் குற்றங்கள் சட்டமாகும்.
ஐநா மன்றத்தின் மின்வணிக மாதிரிச் சட்டத்தை அடைப்படையாகக் கொண்டு
மின்வணிகத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளப் பல நாடுகளும்
உரிய சட்டங்களை இயற்றத் தலைப்பட்டன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்
கூடியது சிங்கப்பூர் இயற்றிய ‘மின்னணுப் பரிமாற்றச் சட்டம்’ ஆகும்.
இந்த மூன்று நாடுகளின் மேற்குறிப்பிட்ட சட்டங்கள் பற்றிச் சுருக்கமாக
இப்பாடப் பிரிவில் காண்போம்.
6.3.1 அமெரிக்கக் கணிப்பொறி மோசடிச் சட்டம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
காங்கிரஸில் 1984-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கணிப்பொறி மோசடி, முறைகேடான
பயன்பாட்டுச் சட்டம் (Computer Fraud and Misuse Act) இன்று பல நாடுகளில்
நிறைவேற்றப்பட்டுள்ள மின்வெளிக் குற்றச் சட்டங்களின் முன்னோடிச்
சட்டம் எனக் கூறலாம். அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தின் அல்லது சில
நிதி நிறுவனங்களின் கணிப்பொறி முறைமைகள் குறிப்பாக மாநிலங்களுக்கு
இடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் அயல்நாட்டு வணிகத்தில் பயன்படுத்தப்படும்
கணிப்பொறி முறைமைகள் மீதான தாக்குதல்கள், குற்றங்களைக் கட்டுப்படுத்தும்
பொருட்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்தகைய கணிப்பொறி முறைமைகள்
வேறு நாட்டில் இருந்தாலும் அவற்றைப் ’பாதுகாக்கப்பட்ட கணிப்பொறி’
என இச்சட்டம் வரையறுக்கிறது. இச்சட்டம் 1986, 1994, 1996, 2001-ஆம்
ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
குற்ற நடவடிக்கைகள் சில:
(1) தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப்
பெற ஒரு கணிப்பொறியைத் தெரிந்தே அனுமதியின்றி அணுகுவது. |
(2) ஒரு நிதி நிறுவனத்தின் நிதிக்கணக்கு
ஏட்டிலிருந்து, அமெரிக்க நாட்டு அரசுத்துறை அல்லது அரசு முகமையிலிருந்து,
மாநிலங்களுக்கு இடையேயான அல்லது அயல்நாட்டு வணிகம் தொடர்பான
பாதுகாக்கப்பட்ட கணிப்பொறியிலிருந்து தகவலைப் பெற உள்நோக்கத்தோடு
அனுமதியின்றி அணுகுதல். |
(3) அரசின் ஒரு கணிப்பொறியை உள்நோக்கத்தோடு
அனுமதியின்றி அணுகி, அரசின் கணிப்பொறிச் செயல்பாட்டுக்குப்
பாதிப்பு ஏற்படுத்துவது. |
(4) மோசடி செய்யவும், மோசடி மூலம் ஆதாயம்
பெறும் நோக்கோடும் பாதுகாக்கப்பட்ட கணிப்பொறியைத் தெரிந்தே
அணுகுவது. |
(5) ஒரு கணிப்பொறி முறைமைக்குக் கேடு விளைவிக்கக்
கூடிய அல்லது அனுமதியின்றி உள்நோக்கத்தோடு அணுகுவதற்கு வழிவகுக்கும்
ஒரு நிரலை, தகவலை, குறிமுறையை, கட்டளையைச் செயல்படுத்தி, அதன்
விளைவாகக் கீழ்க்காணும் குற்றங்கள் நிகழக் காரணமாயிருப்பது:
-
ஒருவருக்கோ அல்லது பலருக்கோ
ஓராண்டில் மொத்தம் 5000 டாலருக்குக் குறையாத இழப்பு
ஏற்படுத்துதல்.
-
ஒரு நபரின் அல்லது பலரின் மருத்துவப்
பரிசோதனை, நோயாய்வு, சிகிச்சை, கவனிப்பு ஆகிய விவரங்களில்
திருத்தம் செய்தல்.
-
ஒரு நபருக்கு உடல் ரீதியான
காயம் ஏற்படுத்துதல்.
-
பொதுச் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும்
கேடு விளைவித்தல்.
- அரசுக் கணிப்பொறி ஒன்றுக்குச் சேதம் விளைவித்தல்.
|
|
(6) ஒரு கணிப்பொறியை அணுகுவதற்குப் பயன்படும்
கடவுச்சொல் அல்லது அதுபோன்ற தகவலில் அனுமதியின்றித் தெரிந்தே
உள்நோக்கத் தோடு மோசடி செய்தல் அல்லது களவாடல். |
6.3.2 மலேசியக் கணிப்பொறிக் குற்றங்கள் சட்டம்
கணிப்பொறிக் குற்றங்கள் தொடர்பாக
மலேசிய நாட்டில் 1997-ஆம் ஆண்டு நிறவேற்றப்பட்ட ‘கணிப்பொறிக் குற்றங்கள்
சட்டம்’ (Computer Crimes Act) ஒரு முன்னோடியான சட்டம் எனக் கூறலாம்.
கணிப்பொறிக் குற்றங்களின் வரையறுப்புகளும் அவற்றுக்குரிய தண்டனைகளும்
இச்சட்டத்தின் இரண்டாம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கிய
கூறுகள் சில:
பிரிவு-3:
எந்தவொரு கணிப்பொறியிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள
ஏதேனும் ஒரு நிரல் அல்லது தரவினை அனுமதியின்றித் தெரிந்தே
அணுகுவது குற்றமாகும். இக்குற்றத்துக்கு 50 ஆயிரம் ரிங்கித்துக்கு
மிகாத தண்டம் அல்லது 5 ஆண்டுக்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது
இரண்டும் விதிக்கப்படும். |
பிரிவு-4:
பிரிவு-3 குறிப்பிடும் குற்றத்தை மோசடி அல்லது
நேர்மையற்ற நோக்குடன் அல்லது தண்டனைச் சட்டம் (Penal Code)
வரையறுத்துள்ள காயம் (Injury) ஏற்படும் வகையில் அவரே செய்திருந்தாலும்
அல்லது வேறொருவர் மூலமாகச் செய்திருந்தாலும், 150 ஆயிரம் ரிங்கித்துக்கு
மிகாத தண்டம் அல்லது 10 ஆண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது
இரண்டும் விதிக்கப்படும். இக்குற்றம் அனுமதியின்றி அணுகியபோதே
நடந்ததா அல்லது அணுகலுக்குப் பிறகு நடந்ததா என்பது முக்கியமில்லை. |
பிரிவு-5:
ஏதேனும் ஒரு கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள
தகவலை அனுமதியின்றி மாற்றியமைக்கும் என்று தெரிந்தே செய்யும்
எந்தவொரு செயல்பாடும் குற்றமாகும். கணிப்பொறியில் உள்ள குறிப்பிட்ட
நிரல் அல்லது தரவினைக் குறிவைத்துச் செய்யப்படவில்லை என்றாலும்
குற்றமே. தகவலில் அனுமதியின்றிச் செய்த அல்லது செய்யத் துணிந்த
மாற்றம் நிரந்தரமானது அல்லது தற்காலிகமானது என்கிற வேறுபாடு
முக்கியமில்லை. இக்குற்றத்துக்கு 100 ஆயிரம் ரிங்கித்துக்கு
மிகாத தண்டம் அல்லது 7 ஆண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது
இரண்டும் விதிக்கப்படும். தண்டனைச் சட்டம் வரையறுத்துள்ள ’காயம்’
(Injury) ஏற்படுத்தும் நோக்கத்தில் இக்குற்றம் செய்யப்பட்டிருப்பின்
150 ஆயிரம் ரிங்கித்துக்கு மிகாத தண்டம் அல்லது 10 ஆண்டுக்கு
மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். |
பிரிவு-6:
ஒரு கணிப்பொறியை அணுகுவதற்கு உரிய எண், குறிமுறை,
கடவுச்சொல் அல்லது வேறு வழிமுறையை ஒரு குறிப்பிட்ட நபருக்குத்
தெரிவிக்க முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டிருக்கையில், அவரல்லாத
வேறொரு நபருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிப்பது குற்றமாகும்.
இக்குற்றத்துக்கு 25 ஆயிரம் ரிங்கித்துக்கு மிகாத தண்டம் அல்லது
3 ஆண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். |
பிரிவு-7:
இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்
ஒரு குற்றத்தைச் செய்வதற்குப் பிறரைத் தூண்டுபவர் அல்லது குற்றம்
செய்ய முயற்சி செய்கிறவர் அக்குற்றத்தைச் செய்தவராகவே கருதப்பட்டு
அக்குற்றத்துக்கு உரிய தண்டனை விதிக்கப்படும். ஆனால் சிறைத்தண்டனைக்
காலம் அக்குற்றத்துக்குரிய உச்ச அளவில் பாதிக்கு மிகாமல் இருக்க
வேண்டும். |
பிரிவு-8:
ஏதேனும் ஒரு கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்ட
அல்லது ஏதேனும் ஒரு கணிப்பொறியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
ஏதேனும் ஒரு நிரல், தரவு அல்லது தகவலைத் தன்னுடைய பாதுகாப்பு
அல்லது கட்டுப்பட்டில் வைத்திருக்க அனுமதியில்லாத ஒருவர் அவ்வாறு
தன்னுடைய பாதுகாப்பு அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பின்,
அவ்வாறில்லை என்று நிரூபிக்கப்பட்டால் ஒழிய, அந்த நிரல், தரவு
அல்லது தகவலை அவர் அனுமதியின்றி அணுகியதாகக் கருதப்பட்டுத்
தண்டனை விதிக்கப்படும். |
மேற்கண்ட குற்றங்களில் தொடர்புடைய
கணிப்பொறி, நிரல் அல்லது தரவு மலேசியாவில் இருப்பின் அல்லது அக்கணிப்பொறி
மலேசியாவிலுள்ள கணிப்பொறியோடு இணைக்கப்பட்டதாய் இருப்பின் அல்லது
அந்நிரல் அல்லது தகவல் மலேசியக் கணிப்பொறிக்கு அனுப்பப்பட அல்லது
மலேசியக் கணிப்பொறியால் பயன்படுத்தப்படுவதாய் இருப்பின் குற்றம்
மலேசியாவுக்குள் அல்லது மலேசியாவுக்கு வெளியே நடந்திருப்பினும்,
குற்றம் செய்தவர் எந்த நாட்டவராயினும் இச்சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்.
6.3.3 சிங்கப்பூர் மின்னணுப் பரிமாற்றச் சட்டம்
மின்வெளிச் சட்டங்களில்
அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது சிங்கப்பூர் அரசு 1998-ஆம்
ஆண்டு இயற்றிய மின்னணுப் பரிமாற்றச் சட்டமாகும் (Electronic Transactions
Act). இச்சட்டம் முழுக்க முழுக்க மின்வணிகத்தை ஒழுங்குபடுத்தும்
சட்ட விதிகளைக் கொண்டுள்ளது. ஐநா மன்றத்தின் மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக்
கொண்டே இதிலுள்ள சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் சிறப்புக்கூறுகள்
சிலவற்றைக் காண்போம்:
(1) தனித்திறவி மூலம் மறையாக்கப்பட்டு,
பொதுத்திறவி மூலம் மறைவிலக்கப்படும் மறைக்குறியீட்டு ஒப்பம்
‘துடிமக் கையொப்பம்’ என்றும், ஒரு மின்னணு ஆவணத்தைச் ஒப்புச்சான்றளிக்கும்
அல்லது அங்கீகரிக்கும் முகத்தான் இயல்பாக அதனோடு சேர்த்து
இடப்படும் துடிம வடிவிலான எழுத்துகள், குறியீடுகள், எண்கள்
அல்லது வேறெந்த அடையாளமாயினும் அது ’மின்னணுக் கையொப்பம்’
என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. |
(2) உயிலை உருவாக்குதல், உயிலைச் செயல்படுத்தல்,
மாற்றுமுறை ஆவணங்கள் (Negotiable Instruments), அறக்கட்டளைகள்
உருவாக்குதல், ஒப்பாணை (Power of Atterney) வழங்கல், அசையாச்
சொத்துகளை விற்பதற்கான ஒப்பந்தம், விற்பனைப் பத்திரம், சொத்துரிமை
ஆவணங்கள் ஆகியவற்றுக்கு இச்சட்டம் பொருந்தாது என விலக்களிக்கப்பட்டுள்ளது. |
(3) துடிம (மின்னணு) ஆவணங்களைச் சட்டப்படியான
ஆவணங்களாகவும். ஓர் ஆவணத்தில் கையொப்பம் தேவை என்ற நிலையில்
மின்னணுக் கையொப்பம் அதற்கான தேவையை நிறைவு செய்வதாகவும் கருதப்படும்.
ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டிய சூழ்நிலைகளில் பின்னாளில்
அதை மூல வடிவில் படித்தறிய முடியுமெனில் அவற்றை மின்னணு வடிவில்
சேமித்து வைக்கலாம், |
(4) இணையத்திலுள்ள சட்டத்துக்குப் புறம்பான
தகவல்களைப் பயனர்கள் அணுக வழியமைத்துத் தந்தார் என்ற காரணத்துக்காக
ஓர் இணையச் சேவையாளரைக் குடிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைக்கு
உட்படுத்தக் கூடாது. ஆனால், ஒப்பந்தம், சட்டம் அல்லது நீதிமன்றம்
சில கடமைகளைச் சுமத்தியிருப்பின் அதற்கு அவர் கட்டுப்பட வேண்டும். |
(5) மின்னணு ஆவணம் மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்கள்
செல்லுபடியாகும். மின்னணு ஆவணம் மூலமாக உருவாக்கப்பட்டது என்ற
ஒரே காரணத்துக்காக அந்த ஒப்பந்தம் செல்லாது எனக் கருதக் கூடாது. |
(6) ஒரு மின்னணு ஆவணம் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின்
திருத்தப்படவில்லை என்பதைச் சரிபார்க்க, இரு தரப்பினராலும்
ஒப்புக் கொள்ளப்பட்ட அல்லது வணிக ரீதியில் நியாயமான ஒரு பாதுகாப்புச்
செயல்முறை, முறைப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது எனில் அந்தக்
குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்து, பரிசோதிக்கும் காலம்வரை
அந்த ஆவணம் ஒரு பாதுகாப்பான மின்னணு ஆவணமாகவே கருதப்படும். |
(7) இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட அல்லது வணிக ரீதியில்
நியாயமான ஒரு பாதுகாப்புச் செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட
ஒரு மின்னணுக் கையொப்பம், (அ) அதை உருவாக்கிய நேரத்தில் உருவாக்கியவருக்கு
மட்டுமே உரியது (ஆ) அதன்மூலம் அதன் உரிமையாளரை அடையாளம் காண
முடியும் (இ) அதை உருவாக்குவது உரிமையாளரின் முழுக் கட்டுப்பாட்டில்
உள்ளது (ஈ) அக்கையொப்பம் எந்த மின்னணு ஆவணத்தோடு தொடுப்புடையதோ,
அந்த ஆவணம் திருத்தப்பட்டால், மின்னணுக் கையொப்பம் செல்லாதது
ஆகிவிடும் என்ற வகையிலே சோதித்து அறிய முடியும் - என்கிற நிபந்தனைகளை
நிறைவேற்றும் எனில், அது பாதுகாப்பான மின்னணுக் கையொப்பமாகவே
கருதப்படும். |
(8) சட்டப்படியான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம் வழங்கும் தனித்திறவி,
பொதுத்திறவி அடிப்படையிலான துடிமக் கையொப்பம் சட்டப்படியான கையொப்பமாகக்
கருதப்படும். மின்னணு ஆவணத்தின் ஒரு பகுதிக்குத் துடிமக் கையொப்பம்
இடப்பட்டிருப்பின் அக்கையொப்பமே ஆவணத்தின் அப்பகுதிக்கு இடப்பட்ட
பாதுகாப்பான மின்னணுக் கையொப்பமாகக் கருதப்படும். |
(9) வெளிப்படையான சட்டத்தடை இல்லாதபோது, சேமித்து வைக்கப்படும்
ஆவணங்கள், வழங்கப்படும் அனுமதி, அங்கீகாரம், உரிமம் - இவை அனைத்தும்
மின்னணு வடிவில் இருக்கலாம். பணம் செலுத்துதலும் மின்னணு வடிவில்
இருப்பதை இச்சட்டம் அனுமதிக்கிறது. அரசின் ஓர் அமைச்சகம், துறை
அல்லது நிறுவனம், மின்னணு ஆவணங்கள் இந்த முறையில் இந்த வடிவில்
இருக்க வேண்டும், துடிம அல்லது மின்னணுக் கையொப்பம் இடப்பட வேண்டும்
என்கிற நெறிமுறைகளை வகுக்கலாம். ஆனால் எந்த ஆவணமும் துடிம ஆவணமாகத்தான்
இருக்க வேண்டும் என அரசின் ஓர் அமைச்சகம், துறையை அல்லது நிறுவனத்தை
இச்சட்டம் கட்டாயப்படுத்த முடியாது. |
(10) சட்டத்தின் இறுதிப் பகுதியில் துடிம ஆவணம் மற்றும் அது
தொடர்பான நடைமுறைகளில் இழைக்கப்படும் குற்றங்கள், அவற்றுக்கான
தண்டம், தண்டனைகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாட்டெல்லை
ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் காரணமாகப் பொருள்விளக்கச்
சட்டம் (Interpretation Act), தடயச் சட்டம் (Evidence Act) ஆகியவற்றில்
செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. |
|