"தாத்தா, எதுக்குத் தினமும் நடைப்பயிற்சி போறீங்க?" என்று கேட்டாள் கயல். "நடைப்பயிற்சி செஞ்சா, நம்ம உடலும் மனசும் ரொம்ப நல்லா இருக்கும். அது மட்டுமா? அன்று முழுவதும் புத்துணர்ச்சியா இருக்கும் கயல்" என்றார் தாத்தா. "ஓ! அப்படியா, தாத்தா? அதான் நீங்க நாள் முழுதும் சுறுசுறுப்பாவே இருக்கிங்களா? அது சரி தாத்தா, நடைப்பயிற்சிய வீட்டிலேயே செய்யக் கூடாதா?" என்றாள் கயல். "தாராளமா செய்யலாம். சில பேரு வீட்டிலேயும் சில பேரு மொட்டை மாடியிலேயும் செய்றாங்க. வேறு சிலர் கடற்கரையிலே கூடச் செய்றாங்க" என்றார் தாத்தா." ஆனா தாத்தா, என்னைப் போலச் சின்னப் பொண்ணுங்க நடைப்பயிற்சி செய்யலாமா?" என்று கயல் கேட்டாள். அதைக் கேட்டுச் சிரித்தார் தாத்தா. "கயல், நானும் உன்ன போலச் சின்ன வயசுல இருந்தப்பவே நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிட்டேன். இதுவரைக்கும் எந்த நோயும் வந்ததில்ல. அதனால நீயும் நடைப்பயிற்சி செய்யலாம்" என்றார் தாத்தா. "அப்படீன்னா, நாளையில் இருந்து நானும் உங்க கூட வர்றேன் தாத்தா. என்னையும் கூட்டிட்டுப் போங்க" என்று துள்ளிக் குதித்தாள் கயல்.