இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.2 படிப்போம்

ஷேக்ஸ்பியர்

இலண்டன் மாநகரில் நாடகங்கள் புகழ்பெற்றிருந்த காலம் அது. குதிரை வண்டிகளில் சென்று நாடகங்கள் பார்ப்பதை மக்கள் பொழுதுபோக்காகக் கருதினர்.

நாடக அரங்கத்திற்கு வெளியே குதிரை வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை ஒருவர் காவல் காத்தார்.

நாடகக் காட்சியின் வசனங்களைக் கேட்டு, மனப்பாடம் செய்வது அந்தக் குதிரைக் காப்பாளரின் வழக்கம். அவருக்கு நினைவாற்றல் மிகுதி. தாம் கேட்ட வசனங்களைப் பிழையின்றி, ஏற்ற இறக்கங்களுடன் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்பார்.

வழக்கம்போல் அன்றும் நாடகம் தொடங்கியது. ஆனால், அந்நாடகத்தில் முதன்மையாக நடிக்க வேண்டிய நடிகர் வரவில்லை. அவருக்குப் பதிலாக, அந்தக் குதிரைக் காப்பாளர் நடித்தார். அனைவரும் அவரது நடிப்பைப் பாராட்டினர். அதன்பின், தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார்.

பின்னாளில் அவர் நிறைய நாடகங்களை எழுதினார். அவர் எழுதிய நாடகங்களில், கதைமாந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவரது நாடக வசனங்கள் உயிரோட்டத்துடன் இருந்தன.

அவர், தாம் எழுதிய நாடகங்கள் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். அவருடைய நாடக உரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் ஆங்கில அகராதியில் இடம்பெற்றுள்ன. அவர்தான், நவீன ஆங்கில இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் உலகப்புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் ஆவார்.

(ஷேக்ஸ்பியர் பற்றி நிலவும் கற்பனைக் கதைகளுள் இதுவும் ஒன்று)

பொருள் அறிவோம்

1. நாடக அரங்கு - நாடகம் நடக்கும் இடம்
2. வசனங்கள் - நாடக உரையாடல்கள்

விடை காண்போம்

நாடகங்கள் பார்ப்பதை மக்கள் பொழுதுபோக்காகக் கருதினர்.

நாடகத்தில் முதன்மையாக நடிக்க வேண்டிய நடிகர் வரவில்லை. அதனால் நாடகத்தில் நடிக்க குதிரைக் காப்பாளருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஷேக்ஸ்பியர் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார். பின்னாளில் அவர் நிறைய நாடகங்களை எழுதி நாடக ஆசிரியரானார்.

ஷேக்ஸ்பியர், அவர் எழுதிய நாடகங்கள் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

கதை மாந்தர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்.