இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.2 படிப்போம்

சித்தன்னவாசல்

நாள் – 05.03.2023,
21ஸ்மைலி என்கிளேவ்,
அப்போலோ அவென்யு,
இங்கிலாந்து.

அன்புள்ள செல்வி,

நான் நலமாக உள்ளேன். நீயும் நலமாக இருப்பாய் என நினைக்கிறேன். இரு வாரத்திற்கு முன்பு நானும்என் குடும்பத்தினரும் தமிழ்நாட்டிற்குச் சென்றோம். அங்கு, சித்தன்னவாசல் என்னும் இடத்தைப் பார்த்தோம். அந்த இடம், குகை ஓவியங்களுக்குப் புகழ்பெற்றது. அதன் சிறப்பைப் பற்றி உன்னிடம் கூற விரும்புகிறேன். அங்கு அழகான நுழைவாயிலைக் கண்டேன். அதன்வழியே சென்றேன். ஓர் இடத்தில் செதுக்கப்பட்ட பாதை இருந்தது. அதன்மீது ஏறினேன். அங்கே பாறையைக் குடைந்து செய்த குகைபோன்ற அமைப்பு இருந்தது. அதுதான் குடைவரைக் கோவில் என்று என் பெற்றோர் கூறினர். குகையின் மேல்பகுதியில் ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது. அதில் குளம், தாமரை மலர்கள், தாமரை மொட்டுகள் முதலான காட்சிகள் இருந்தன. அந்தக் குளத்தில் ஆண்கள், பெண்கள், அன்னங்கள், மீன்கள் நீந்தி விளையாடும் காட்சிகளும் இருந்தன.

இடப்பக்கத் தூணில் நடனப் பெண்ணின் ஓவியம் ஒன்றும் இருந்தது. இந்த ஓவியங்களிலுள்ள வண்ணங்கள் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இவற்றை நான் கண்டு மகிழ்ந்ததைப் போல நீயும் காண விரும்புவாய் என எண்ணுகிறேன். உன் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
கலை.

உறைமேல் முகவரி
செல்வி,
25/4561 கேம்ப் தெரு,
டர்கம் நகர், டொரண்டோ,
கனடா.

பொருள் அறிவோம்

1. குகை ஓவியங்கள் - பாறையைக் குடைந்து வரையப்படும் ஓவியங்கள்
2. புகழ்பெற்றது - சிறப்புடையது