இகரம்
(இரண்டாம் பருவம்)
உலக உணவு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறுகிறது. குமரன் தன் அம்மாவுடன் அந்தக் கண்காட்சிக்குச் செல்கிறான். அங்கிருக்கும் காய்கனிகள் குமரனிடம் பேசத் தொடங்குகின்றன.
![]() |
குமரா! எங்கே பார்க்கிறாய்? வியப்பாக இருக்கிறதா? நான்தான் கேரட் பேசுகிறேன். என்னைப் பற்றி நீ தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? சொல்கிறேன் கேள். என்னிடம் உயிர்ச்சத்து ‘ஏ‘ உயிர்ச்சத்து ‘சி‘ அதிகமாகவே இருக்கின்றன. கண்கள் மற்றும் இதயத்தின் நலன் காப்பது என் முதன்மைப் பணி. என்னை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் கண் மருத்துவரே தேவையில்லை. அது மட்டுமா, உன் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பேன். |
![]() |
வா, வா, குமரா! என்னைப் பார்க்காமல் சென்று விடுவாய் என நினைத்தேன். நான்தான் வாழைப்பழம். நான் மிகவும் மிருதுவாக இருப்பேன். ஆண்டு முழுவதும் கிடைப்பேன். என்னிடம் பொட்டாசியம், உயிர்ச்சத்து ஏ, பி, பி2, சி ஆகியவை நிறைந்துள்ளன. மூளையின் செயலினை அதிகரிப்பதே என் வேலை. இரைப்பையிலும் குடலிலுமுள்ள உணவுக் கழிவுகளை வெளியேற்றும் மருத்துவர் நானே! |
![]() |
குமரா என்னருகில் வா. நான்தான் மாம்பழம் பேசுகிறேன். முக்கனியுள் முதன்மையான பழம் நானே! என்னுள் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், மற்றும் கொழுப்பைக் குறைத்து உடல்நலம் காப்பேன். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பேன். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்னை எடுத்துக் கொண்டால் நலம் பெறலாம். |
![]() |
நான்தான் வெண்டைக்காய். மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்க நான் பயன்படுகிறேன். குழந்தைகள் கல்வியிலும் நினைவாற்றலிலும் சிறந்து விளங்க உணவில் என்னை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நான் நலம் புரிகிறேன். |
![]() |
என்னை மட்டும் பார்க்காமல் போகிறாயே! குமரா! முதுமையை வராமல் தடுக்கும் தனிச்சிறப்பு எனக்கு உண்டு. என்னிடம் அதிக அளவில் உயிர்ச்சத்து ‘சி‘ உள்ளது. ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிளுக்குச் சமம் என்று சொல்கிறார்கள். என்னுள் பல மருத்துவக் குணங்கள் உண்டு. |
![]() |
குமரா, உன் பார்வையை என் பக்கம் திருப்பு. கண்ணாடி அணிவதைத் தடுக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. கொழுப்பைக் குறைக்கும் திறன் இருப்பதால், இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் என்னை உணவாக எடுத்துக் கொள்ளலாம். நான் இரத்தத்தையும் தூய்மை செய்வேன். என்னிடம் சுண்ணாம்புச் சத்து இருப்பதால், பற்களையும் எலும்புகளையும் உறுதியாக்குவேன். |
![]() |
உடல்நலம் காக்கும் பயறு வகைகளில் நானே முதலிடத்தில் உள்ளேன். என்னுள் பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. என்னை முளைகட்டிச் சாப்பிட்டு வந்தால் முழுப்பயனும் கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கவும், வயிற்றுச்சிக்கலைச் சரி செய்யவும், இரத்த அழுத்தத்தைச் சரி செய்யவும் சர்க்கரை நோயைக் குணப்படுத்தவும் நான் உதவுகிறேன். |
குமரா! குமரா! அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினான் குமரன். காய்கனிகள் பேசியவற்றை அம்மாவிடம் கூறினான். உடல்நலம் காக்கும் உணவுகளைத் தான் அறிந்து கொண்டதோடு, தன் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறுவேன் என்றான். அவன் கூறியதைக் கேட்டு, அம்மா மிகவும் பாராட்டினார்.
1. | பணி | - | வேலை | ||
2. | சக்தி | - | ஆற்றல் | ||
3. | முக்கனி | - | மா, பலா, வாழை |
குமரன் உணவு கண்காட்சிக்குச் சென்றான்
கேரட், என்னிடம் உயிர்ச்சத்து ‘ஏ‘ உயிர்ச்சத்து ‘சி‘ அதிகமாகவே இருக்கின்றன. கண்கள் மற்றும் இதயத்தின் நலன் காப்பது என் முதன்மைப் பணி. என்னை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் கண் மருத்துவரே தேவையில்லை மற்றும் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பேன் என்றது.
முக்கனியுள் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைத்து உடல்நலத்தைக் காக்கிறது.