உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.2 படிப்போம்

இணையத்தில் தமிழ்

மணிமொழி டெக்சாஸில் வசிக்கிறாள். அவளுடைய அத்தை சென்னையில் வசிக்கிறார். இருவரும் புலனம் (Whatsapp) வாயிலாகக் காணொலியில் கலந்துரையாடுகிறார்கள்.

மணிமொழி : ஹாய் அத்தை. எப்படி இருக்கிறீர்கள்?
அத்தை : நன்றாக இருக்கிறேன், மணிமொழி. அதுசரி, நீ ஏன் ஒரு வாரமாக என்னுடன் பேசவில்லை?
மணிமொழி : நான் உங்களுடன் தொடர்புகொள்வதற்கு வேறு ஒருவழியைப் பின்பற்ற நினைத்தேன். ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை.
அத்தை : அது என்ன வழி?
மணிமொழி : சொல்கிறேன் அத்தை. இதுநாள்வரை, நான் உங்களுக்கு ஆங்கில மொழியில்தானே செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தேன். இந்த முறை தமிழில் அனுப்பலாம் என நினைத்தேன். ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை.
அத்தை : அட… இதுதான் உன் பிரச்சனையா? கவலையை விடு, மணிமொழி. நான் உனக்குத் தமிழில் செய்தி அனுப்பச் சொல்லித் தருகிறேன்.
மணிமொழி : அது சரிதான் அத்தை. ஆனால், கணினியில் (Computer) தட்டச்சு (Typing) செய்வதற்கு ஆங்கில எழுத்துகள்தாம் உள்ளன. அங்குத் தமிழில் எப்படித் தட்டச்சு செய்ய முடியும்?
அத்தை : மிக நல்ல கேள்வி மணிமொழி. உன்னைப்போலத்தான் பலருக்கும் இத்தகைய ஐயம் முன்பு எழுந்தது.ஆனால், இப்போது தமிழில் தட்டச்சு செய்வதற்கான இடைமுகம் (Interface) எழுத்துருக்களைப் (Font) பதிவிறக்கம் (Download) செய்து தட்டச்சு செய்யலாம்.
மணிமொழி : ஓ! அப்படியா அத்தை? ஆனால் எனக்குத்தான் தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதே?
அத்தை : அதனால் என்ன? நீ ஒலிப்பு (Phonetic) முறையிலேயே தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யலாம். அதாவது, நீ ஆங்கிலத்தில் ammA என்று தட்டச்சு செய்தால், தமிழில் அம்மா என வரும். முயற்சி செய்துதான் பாரேன்.
மணிமொழி : அட… இது நல்லா இருக்கே! கட்டாயம் செய்கிறேன், அத்தை. ஆனால், எனக்கு இன்னும் ஓர் ஐயம்….
அத்தை : மீண்டும் என்ன ஐயம்?
மணிமொழி : அது வந்து . . . அத்தை, நான் ஒலிப்பு முறையைப் (Phonetic) பயன்படுத்தித் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பினால், உங்களால் படிக்க முடியுமா?
அத்தை : மணிமொழி, நீ நன்றாகச் சிந்திக்கிறாய். நீ பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய தமிழ் எழுத்துரு என்னிடமும் இருக்கவேண்டும். அப்போதுதான், அதனை என்னால் படிக்கமுடியும் என்றுதானே நினைக்கிறாய். இப்போது நீ கூறியதை, முன்னரே வல்லுநர்களும் நினைத்தார்கள். அதனால்தான், மற்ற மொழிகளுக்கு ஒருங்குறி அமைப்பு இருப்பதுபோலத் தமிழுக்கும் ஒருங்குறி (UNICODE) உருவாக்கியுள்ளார்கள்.
மணிமொழி : தமிழ் ஒருங்குறியா? அப்படி என்றால் என்ன, அத்தை?
அத்தை : சொல்கிறேன், கேள். முன்பெல்லாம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்வதற்கு எனப் பொதுவான எழுத்துரு இல்லை. அதனால், எந்த எழுத்துருவைப் பயன்படுத்துகிறோமோ, அதனையும் செய்தியோடு சேர்த்து அனுப்பினால்தான் மற்றவர்களால் படிக்க இயலும். இப்போது அப்படியில்லை. ஆங்கிலத்தைப் போலத் தமிழுக்கும் பொதுவான எழுத்துருவைக் கண்டறிந்துள்ளார்கள். அதனை, இணையத்திலிருந்து (Internet) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சரி, மணிமொழி தமிழில் தட்டச்சு செய்வது குறித்து அறிந்துகொண்டாய் என நினைக்கிறேன். சரிதானே?
மணிமொழி : சரிதான் அத்தை. மிக்க நன்றி.
அத்தை : நல்லது மணிமொழி. அம்மாவையும் அப்பாவையும் கேட்டதாகச் சொல். மீண்டும் தொடர்புகொள்வோம்.

பொருள் அறிவோம்

1. தட்டச்சு - கணினியில் எழுத்துகளைப் பதிப்பித்தல்
2. எழுத்துரு - தட்டச்சு செய்யப் பயன்படும் எழுத்துகளின் வரிவடிவம்
3. ஒருங்குறி - கணினி வழியாக தமிழில் தட்டச்சு செய்யப் பயன்படும் பொதுவான எழுத்துரு

விடை காண்போம்

முதலில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பினால் அதனுடன் எழுத்துருவும் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு எழுத்துருவை பதிவிறக்கம் செய்யாமல் மற்ற மொழிகளுக்கு ஒருங்குறி எழுத்துரு இருப்பதுபோன்று தமிழுக்கும் ஒருங்குறி (UNICODE) எழுத்துரு உருவாக்கப்பட்டது.

எழுத்துருக்கள் என்பது தட்டச்சு செய்யப் பயன்படும் எழுத்துகளின் வரிவடிவம் ஆகும். படிப்போரின் கவனத்தை ஈர்த்தல், படிப்பதை எளிதாக்குதல், குறிப்பிட்ட உணர்வை கடத்துதல் ஆகியவை எழுத்துருக்களின் பயன்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழில் தட்டச்சு செய்து அனுப்பும்போது அதனுடன் தமிழ் எழுத்துருவும் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். தற்போது தமிழில் எளிமையாக ஒலிப்பு முறையைப் (Phonetic) பயன்படுத்தி ஒருங்குறி (UNICODE) மூலம் தமிழ்மொழியில் தட்டச்சு செய்து அனுப்பலாம். அதனை, இணையத்திலிருந்து (Internet) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மணிமொழி தன் அத்தையின் மூலம் தெரிந்துகொண்டாள்.