உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.2 படிப்போம்

ஜப்பான் நாட்டின் பண்பாட்டுச் சிறப்புகள்

பண்பாடு என்பது, மக்களின் உணவு, உடை, பழக்கவழக்கம், விளையாட்டு போன்றவற்றைக் குறிக்கும். ஒரு நாட்டின் பெருமைக்கும் சிறப்புக்கும் அங்கு வாழும் மக்களின் பண்பாடே காரணமாகிறது. பண்பாடு நாட்டிற்கு நாடு வேறுபடும். ஜப்பான் நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை நாம் இங்கு அறிந்துகொள்வோம்.

ஜப்பானியப் பாரம்பரிய உணவு வகைகளை

"வாஷோகு" (Washoku) என்று அழைப்பர்.

அவர்களின் உணவில் அரிசி, மீன், பச்சைக்

காய்கறிகள் ஆகியவை முதன்மை இடத்தைப்

பெறுகின்றன. சுஷி, சஷிமி, மிசோ சூப்கள், டெம்புரா,

குஷியாகி, டோன்காட்சு ஆகியவை ஜப்பானியர்கள்

விரும்பி உண்ணும் உணவுகளாகும். உணவுகளை,

சாப்ஸ்டிக் (chopstick) எனப்படும் இரு குச்சிகளைக்

கொண்டே உண்பர்.
கிமோனோ (Kimono) என்பது ஜப்பானியர்களின் பாரம்பரிய

ஆடையாகும். இதனை விழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில்

பங்கேற்கும்போது அணிவர். பெண்கள், பூக்களால் பின்னப்பட்ட

வண்ணக் கிமோனோக்களை அணிந்து, அன்னப்பறவைபோல

நடப்பர். இந்தக் காட்சி மிக அழகாக இருக்கும்.

சுமோ (Sumo) ஜப்பானியர்களின் பாரம்பரிய விளையாட்டு. இது ஜப்பானின் தேசிய விளையாட்டும் ஆகும். இவ்விளையாட்டு, தமிழரின் மல்யுத்தத்தைப் போன்றதாகும். சுமோ விளையாட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் சண்டையிடுவதற்கு ஏற்ப, பெரிய உடலைக் கொண்டிருப்பர். அவர்கள் தங்கள் உடல்வளர்ச்சிக்காக சான்கோனேப் (Chankonabe) எனப்படும் தனிவகை உணவை உண்பர்.

ஜப்பானியர்கள் செர்ரி பூக்கள் (cherry) பூக்கத் தொடங்கும் காலத்தில் பூக்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை ஹனாமி (Hanami) என்பர். இக்காலங்களில் பூங்காக்களுக்குக் குடும்பமாகச் சென்று பொழுதுபோக்குவர்.

ஜப்பானியர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்கள். மேலும், விழாக்கள் நடத்துவதிலும் விருந்து பரிமாறுவதிலும் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுவதிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.

வினாக்களுக்கு ஏற்ற விடையை எழுதுக.

ஜப்பானியர்களின் உணவில் முதன்மையானவை அரிசி, மீன், பச்சைக் காய்கறிகள் ஆகியவை ஆகும்.

ஜப்பானியர்கள் சாப்ஸ்டிக் (Chopstick) எனப்படும் இரு குச்சிகளை உணவுகள் உண்ண பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானியர்களின் பாரம்பரிய விளையாட்டு சுமோ (Sumo).

கிமோனோ (Kimono) என்பது ஜப்பானியர்களின் பாரம்பரிய ஆடையாகும். இதனை விழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அணிவர். பெண்கள், பூக்களால் பின்னப்பட்ட வண்ணக் கிமோனோக்களை அணிந்து, அன்னப்பறவைபோல நடப்பர். இந்தக் காட்சி மிக அழகாக இருக்கும்.

ஜப்பானியர்கள், செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கும் காலத்தில் பூக்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை ஹனாமி (Hanami) என்பர்.