உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.2 படிப்போம்

ஆராய்ச்சி மணி

(ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்கிறது)
சுழல்
இடம் : அரசவை
(பங்குபெறுவோர் : (மன்னர் (மனுநீதிச்சோழன்) அமைச்சர், பசு, காவலர்)

மன்னன் : அமைச்சரே…! ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்கிறதே! யார் அடிப்பது என்று பார்த்து வாருங்கள்.
அமைச்சர் : இதோ.. அறிந்து வருகிறேன் மன்னா.
மன்னன் : யாருக்கு என்ன துன்பம் நேர்ந்திருக்கும் . . . ? அவை பற்றிக் கூறுங்கள்.
( காவலருடன் அமைச்சர் வருதல்)
அமைச்சர் : மன்னா! பசு ஒன்று மணி அடிக்கிறது. . .
மன்னன் : என்ன . . . பசு மணியடிக்கிறதா? ஏன் அதற்கு என்னவாயிற்று?
அமைச்சர் : அதற்கான காரணத்தை நம் காவலர் அறிந்து வந்துள்ளார்.
மன்னன் : காவலரே! என்னவாயிற்று?
காவலர் : புகழுடைய மன்னருக்கு வணக்கம்! நம் இளவரசர் தேரில் நகரைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது. . .
மன்னன் : சுற்றிப்பார்க்கச் சென்றபோது என்ன நடந்தது? அதற்கும் பசுவுக்கும் என்ன தொடர்பு? விரைந்து சொல், காவலா!
காவலர் : பசுவின் கன்று ஒன்று தேர்க்காலில் அகப்பட்டு இறந்துவிட்டது மன்னா. அதன் தாய்ப்பசு நீதி கேட்டு மணி அடிக்கிறது மன்னா.
மன்னன் : அமைச்சரே! கன்றை இழந்து வருந்தும் தாய்ப்பசுவிற்குத் தக்க நீதி வழங்க வேண்டும். எங்கே… என் மகன்? அவனை அழைத்து வாருங்கள். கன்றின் நிலையை இளவரசரும் அடைய வேண்டும். உடனே அழைத்து வாருங்கள். . .
அமைச்சர் : என்ன கூறுகிறீர்கள் மன்னா . . . ? இளவரசர் தங்களின் வாரிசு. அவர் இந்த நாட்டின் எதிர்கால மன்னராயிற்றே!
மன்னன் : அதற்காக விட்டுவிட வேண்டுமா என்ன? அமைச்சரே! பசு தன் கன்றை இழந்து வருந்துகிறது. அதற்கும் நீதி வழங்க வேண்டும் அல்லவா?
அமைச்சர் : அது வந்து மன்னா . . .அதனால். இறந்ததோ பசுவின் கன்று...
மன்னன் : அதனால் என்ன அமைச்சரே? நீங்கள் தயங்குவது வேடிக்கையாக உள்ளது. மன்னனுக்கு நாட்டின் உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான் என்பதை மறந்துவிட்டீர்களா? மக்கள் தவறு செய்தால் மட்டும் தண்டனையா? மன்னனின் மகன் தவறிழைத்தால் மன்னிப்பா? சிபி மன்னரைப் பற்றித் தங்களுக்குத் தெரியும்தானே?
அமைச்சர் : நன்றாகத் தெரியும் மன்னா. . . பருந்து ஒன்று புறாவைத் துரத்திச் சென்றது. பருந்திடமிருந்து தப்பிக்க, அந்த புறா சிபி மன்னரிடம் தஞ்சம் அடைந்தது அப்புறாவிற்காகத் தம் தசையைக் கொடுத்தவர் ஆயிற்றே!
மன்னன் : அந்தச் சிபி மன்னரின் வழித்தோன்றல் நான்! ’’எல்லா உயிர்களையும் தம் உயிர்போல்’’ பாதுகாப்பது மன்னரின் கடமையல்லவா? நான் என் மகனைத் தண்டிக்கத் தவறுதல் முறையன்று அமைச்சரே! உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள்.
( தேர்க்காலில் அடிப்பட்டு இளவரசர் இறந்தார். தண்டனை நிறைவேற்றப்பட்டது.)

பொருள் அறிவோம்

1. வேடிக்கை - வியப்பு
2. தஞ்சம் - அடைக்கலம்

பசு

பசுவின் கன்று தேர்க்காலில் அகப்பட்டு இறந்துவிட்டது.

காவலர்

சிபி மன்னரின் வழித்தோன்றல் என்று மனுநீதிச்சோழன் கூறினார்

மனுநீதிச்சோழன், நீதி கேட்டு வந்த பசுவிற்காக தன் மகன் என்று பாராமல் கன்றைப் போல் தேர்க்காலில் இட்டு கொல்லுமாறு ஆணையிட்டார். எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாதுகாப்பது மன்னரின் கடமையாகும். எனவே என் மகனைத் தண்டிக்காது தவறுதல் முறையன்று என்று கூறி தண்டனை நிறைவேற்றி சிறந்த ஆட்சியாளனாகத் திகழ்ந்தார்.