உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.2 படிப்போம்

அன்பு என்னும் அறம்

பேருந்திற்காகக் காத்திருந்தார் அந்தப் பெண்மணி. பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்த களைப்பு. பேருந்து வந்ததும் ஏறி, இருக்கையில் அமர்ந்தார். அனுமதியற்ற இருக்கையில் அமர்ந்ததாகக் கூறி, காவலர்கள் அப்பெண்மணியைக் கைது செய்தனர். இச்செய்தி நாடு முழுவதும் பரவியது. இதனைக் கேள்வியுற்ற ஒருவருக்கு அவருடைய பள்ளிப்பருவம் நினைவுக்கு வந்தது.

பள்ளிப்பருவத்தில் சுற்றுலா சென்று திரும்பும்போது, பேருந்தில் அவருக்கு இருக்கை மறுக்கப்பட்டது. 90 மைல் (Miles) தூரத்தை நின்றபடியே பயணம் செய்தது அவரது நினைவுக்கு வந்தது. பல காலமாகத் தம் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை எண்ணி அவர் வருந்தினார். ஆகையால், இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என எண்ணினார்.

தம் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப் பெற்றத்தர முடிவு செய்தார். அதனைக் கேட்டுப் பெற வாய்ப்பில்லை. போராடினால்தான் கிடைக்கும். ஆனால் எப்படிப் போராடுவது? என்று சிந்தித்தார். வன்முறை சிறந்த வழியன்று. எதிரியையும் நேசிக்க வேண்டும்; எவரையும் வெறுக்கக் கூடாது; எந்த உயிருக்கும் துன்பம் தரக்கூடாது ஆகிய அறக்கருத்துகளைத் தம் பெற்றோரிடம் கேட்டு வளர்ந்தவர் அவர். மேலும், இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட அண்ணல் காந்தியடிகளின் அமைதிப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டவர்.

எனவே, அமைதிவழியில் போராட முடிவு செய்தார். தம் மக்களை ஒன்று திரட்டினார். பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் பற்றி விளக்கினார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள், அவரது கருத்துக்கு ஒத்துழைப்பு தந்தனர். ஆனால் அப்போதைய அரசு, அந்தப் போராட்டத்தைத் தடுக்க முயற்சி மேற்கொண்டது. மக்கள் எதற்கும் அஞ்சவில்லை. அறவழியிலேயே போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒரு நாள், இரு நாள் அல்ல. 381 நாள் போராட்டம் நடைபெற்றது. இறுதியில் வெற்றியும் கிடைத்தது. இதனால், மக்களுக்குப் பேருந்தில் அமரும் உரிமை கிடைத்தது.

தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள் பற்றிச் சிந்தித்தார். உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் அவரின் அமைதிவழிப் போராட்டங்கள் தொடர்ந்தன. வெற்றியும் கண்டன.

அவர், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். அதனாலேயே உலக அமைதிக்கான நோபல் பரிசை இளமையிலேயே பெற்றார். அவர் பெயர் மார்ட்டின் லூதர் கிங். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அறவழிப் போராட்டம் மூலம் வெற்றி கண்டு அழியாப் புகழ் பெற்றார்.

பொருள் அறிவோம்

1. களைப்பு - சோர்வு
2. கேள்வியுற்ற - தெரிந்துகொண்ட
3. எதிரி - பகைவர்
4. கொள்கை - குறிக்கோள்
5. அழியாப்புகழ் - நிலையான புகழ்

விடை காண்போம்

அனுமதியற்ற இருக்கையில் அமர்ந்ததாகக் கூறி, காவலர்கள் அந்தப் பெண்மணியைக் கைது செய்தனர்.

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அவருடைய பெற்றோர்கள், எதிரியையும் நேசிக்க வேண்டும் ; எவரையும் வெறுக்கக் கூடாது ; எந்த உயிருக்கும் துன்பம் தரக்கூடாது ஆகிய அறக்கருத்துகளை அறிவுரைகளாக வழங்கினர்.

வன்முறை சிறந்த வழியன்று. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட அண்ணல் காந்தியடிகளின் அமைதிப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டவர் மார்ட்டின் லூதர் கிங். எனவே, அவர் அமைதிவழியில் போராட முடிவு செய்தார்.

பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் 381 நாள் நடைபெற்றது.

மார்ட்டின் லூதர் கிங் உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் அமைதிவழியில் போராடினார். வெற்றியும்பெற்றார். மேலும் அவர் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.