உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.2 படிப்போம்

உடல் நலம் காப்போம்

சக்தி : வணக்கம். என் பெயர் சக்தி. ‘நலவாழ்வு‘ என்னும் மாத இதழுக்காகத் தங்களை நேர்காணல் செய்ய வந்துள்ளேன். இந்த ஆண்டுக்கான சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருது பெற்றுள்ளீர்கள். வாழ்த்துகள்.
சைலேந்திரர் : மிக்க நன்றி.
சக்தி : உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பயிற்சிபற்றிக் கூறுங்கள்.
சைலேந்திரர் : என் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிப்பதில்லை. முழு உடலுக்கான பயிற்சியும் அளிக்கிறேன்.
சக்தி : முழு உடலுக்கான பயிற்சியா? அப்படி என்றால்?
சைலேந்திரர் : உடற்பயிற்சியைத்தான் அப்படிக் கூறினேன்.
சக்தி : ஆனால், உடல் உறுதிபெற விளையாட்டுக்கான பயிற்சியே போதுமே.
சைலேந்திரர் : அதுதான் இல்லை. ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்குக் கால்கள் மட்டுமே வலிமையடையும். கைப்பந்து விளையாடுபவர்களுக்குக் கைகள் மட்டுமே வலிமையடையும். இவையெல்லாம் முழு உடல்பயிற்சி இல்லை. உடல் உறுதிக்கு, உடற்பயிற்சி கட்டாயம் வேண்டும். அதனால்தான், கவிமணி உடலின் உறுதி உடையவரே! உலகில் இன்பம் உடையவராம் எனப் பாடியுள்ளார்.
சக்தி : ஆனால், நாம் நாள்தோறும் செய்யும் வேலையிலேயே உடலுக்குத் தேவையான பயிற்சிகள் கிடைத்துவிடாதா?
சைலேந்திரர் : அப்படியில்லை. உடலுக்குப் பயிற்சி செய்கிறோம் என்றால், அது முழு உடலைப் பண்படுத்தவும் சீராக்கவும் செழுமைப்படுத்தவும் உதவ வேண்டும். அப்போதுதான் உடல் உறுதி பெறும்.
சக்தி : உடற்பயிற்சியின் தேவை பற்றி மேலும் கூறுங்கள்.
சைலேந்திரர் : உடற்பயிற்சி செய்யும்போது உடலுறுப்புகள், ஒழுங்கான முறையில் ஒரே அளவில் இயங்குகின்றன. அப்போது அதிகமான காற்று உள்ளே செல்கிறது. அது, நுரையீரலை நிரப்புகிறது. நுரையீரல் தேவையான காற்றை உள்ளே எடுத்துக்கொண்டு, வேண்டாத காற்றை வெளியே அனுப்புகிறது. நுரையீரல் தன் பணியைச் சீராகச் செய்கிறது. நமது உயிரைக் காக்க சுவாசம் முதன்மையானது. அதன் முழுப்பயனைப் பெற உடற்பயிற்சி உதவுகிறது.
சக்தி : புரிகிறது. உடற்பயிற்சியால் வேறு என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?
சைலேந்திரர் : நம் அனைவருக்கும் வேண்டிய நன்மை ஒன்று உள்ளது. உடற்பயிற்சி உடலை மட்டும் மேம்படுத்துவதில்லை. அது, மனத்தையும் மேம்படுத்துகிறது. உடல் உறுதியுடன் இருந்தால் மனம் உறுதியாக இருக்கும்.
சக்தி : புரிகிறது. ஆனால், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது சற்றுச் சிக்கலாக உள்ளதே!
சைலேந்திரர் : நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டுமெனில், நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளத்தான் வேண்டும். அதற்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கவேண்டும்.
சக்தி : பஇதுவரை நானும் உடற்பயிற்சி செய்யாமலிருந்தேன். இனி, உடற்பயிற்சிக்கு முதன்மை அளிப்பேன். உங்களை நேர்காணல் செய்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றி.
சைலேந்திரர் : மகிழ்ச்சி.

பொருள் அறிவோம்

1. உடலின் உறுதி - உடலின் வலிமை
2. சீராக்குதல் - ஒழுங்குபடுத்துதல்
3. செழுமைப்படுத்துதல் - வளப்படுத்துதல்
4. நுரையீரல் - முதன்மையான சுவாச உறுப்பு

விடை காண்போம்

சைலேந்திரர்

முழு உடல் வளர்ச்சி பெற உடற்பயிற்சி செய்யவேண்டும்

விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மனிதர்களின் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லைப் போக்குகிறது

கவிமணி “உடலில் உறுதி உடையவரே ! உலகில் இன்பம் உடையவராம்” எனப் பாடியுள்ளார்.

உடற்பயிற்சி செய்யும்போது உடலுறுப்புகள், ஓழுங்கான முறையில் ஒரே அளவில் இயங்குகின்றன. அப்போது அதிகமான காற்று உள்ளே செல்கிறது. அது, நுரையீரலை நிரப்புகிறது. நுரையீரல் தேவையான காற்றை உள்ளே எடுத்துக்கொண்டு, வேண்டாத காற்றை வெளியே அனுப்புகிறது. நுரையீரல் தன் பணியைச் சீராகச் செய்கிறது. உயிரைக் காக்க சுவாசம் முதன்மையானது. அதன் முழுப்பயனைப் பெற உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி உடலை மட்டும் மேம்படுத்துவதில்லை. அது மனத்தையும் மேம்படுத்துகிறது.